October

October

இரவு களியாட்ட விடுதிகளை மூடிவிட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து டொலர்களை எதிர்பார்க்காதீர்கள் – அமைச்சர் டயானாகமஹே !

“சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும். சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் மூடிவிடுவது சரியாக இருக்காது.” என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் எனக்கு நிறுவனங்களை ஒதுக்கி உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்.

ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், திறமையாக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி நடந்தால், வைக்கோலை நாய் உண்பதுமில்லை, உண்ணும் மாட்டுக்கும் கொடுப்பதில்லை என்ற நிலைமையே ஏற்படும். இதன் காரணமாகவே அதிகாரங்களை வழங்குமாறு நான் அதிபர் ரணிலிடம் கோரினேன்.

கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குதல் மற்றும் இரவு பொருளாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. பல நாடுகளில் இரவு பொருளாதாரம் 70 வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும். சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் மூடிவிடுவது சரியாக இருக்காது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது !

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – டொனால்ட் லூவிடம் வலியுறுத்தல்!

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்பு !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இத்தாலி பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி (45), வெற்றி பெற்றார். ஜோர்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​மெலோனி உக்ரைனுக்கு தனது ராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி நேற்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என உறுதியளித்தார்.

 

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கைப்பற்றப்பட்ட 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் – பறிபோகுமா பதவி .?

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, தற்போதைய நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் பத்து எம்.பி.க்கள் உள்ளனர்.

ஒரு சிலரைத் தவிர, அந்த எம்.பி.க்கள் யார் என்பது தனக்குத் தெரியாது என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

சிறிய திருத்தங்களுடன் இந்த திருத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டின் ஜனநாயகத்திற்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர்அதிகாரியை புகழ்ந்து கீதம் பாட மறுத்த 16 வயது மாணவியை அடித்துக் கொலைசெய்த பாதுகாப்பு படையினர்- ஈரானில் பெண்கள் மீது தொடரும் அடக்குமுறை !

ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் அங்கு ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்குள்ள பெண்கள் ஈரான் அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது.

இந்தப் போராட்டங்களை அந்நாட்டு அரசு மிகவும் மோசமான முறையில் கையாண்டு வருகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்கு மற்றொரு மரணம் நிகழ்ந்து உள்ளது. இந்த முறை வெறும் 16 வயதான மாணவி அடித்தே கொலை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வடமேற்கு அர்டபில் நகரில் உள்ள ஷாஹீத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது மாணவிகள் சிலர் ஈரானின் உட்சபட்ச அதிகாரிகளைக் கொண்ட சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியை புகழ்ந்து பாட மறுத்து உள்ளனர்.

சோதனை என்ற பெயரில் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் சுப்ரீம் லீடரை புகழ்ந்து கீதம் பாட வற்புறுத்தி உள்ளனர். இருப்பினும், அந்த மாணவிகள் பாட முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மாணவிகள் என்று கூட பார்க்காமல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

வகுப்பறையிலேயே பாதுகாப்புப் படையினர் இப்படி மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் 16 வயதான அஸ்ரா பனாஹி பாதுகாப்பு படையினர் தாக்கியதில் அப்படியே சரிந்தார். உயிரிழப்பு இதையடுத்து அவர் உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இருப்பினும், மாணவி உயிரிழந்ததற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஈரான் அரசு இதை மறுத்து உள்ளது. அஸ்ரா பனாஹியின் உறவினரும் மாணவி இதய பிரச்சினை காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஹிஜாப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த செப். மாதம் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் பொலிசார் அவரை கைது செய்தனர். தடுப்புக் காவலில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கோமா நிலைக்கும் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பெண்கள் தலைமுடியை வெட்டியும் ஹிஜாபை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் மட்டுமே இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த தலைவர் மகிந்த – பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரத்மலானை அங்குலானையில் அமைந்துள்ள மக நெகும ஆலோசனை மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள் நிறுவனத்தின் அலுவலக வளாகத்தை நேற்று மீள திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிறுவனத்தின் 18ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்நிறுவனத்தின் அலுவலக வளாகம் புதியதாக மாற்றப்பட்டது.

இந்த நிறுவனம் அப்போதைய பிரதமரும் நெடுஞ்சாலை அமைச்சருமான மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அலுவலக வளாகம் அதன் ஸ்தாபகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் புனரமைக்கப்பட்டு மீள திறந்து வைக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்.

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வீதி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய போது இந்த நிறுவனம் ஒரு கருத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவகத்தின் 18 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“எல்லா சமூகத்தினரும் அச்சமின்றி வாழக்கூடிய நாட்டை அவர் உருவாக்கினார். “முன்னாள் ஜனாதிபதி 30 வருட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பின்னர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்து போரை முடித்தார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களை இணைக்கும் வீதி வலையமைப்பு மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. புத்தர் விஜயம் செய்த மஹியங்கனை நோக்கி பதினெட்டு ஹேர்பின் வளைவு வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அதன் மோசமான நிலை காரணமாக பெரும் ஆபத்தில் பயணித்தன. மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் பதினெட்டு ஹேர்பின் வளைவுகள் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வடக்கின் வசந்தம் மற்றும் வடகிழக்கு நவோதய வேலைத்திட்டங்களின் கீழ், மோதல்களால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்திய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட மகநெகும ஆலோசனை மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள் நிறுவனம் 18 வருடங்களை பூர்த்தி செய்யும் இந்த தருணத்தில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இருவர் கைது !

யாழ் .கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது.

மேலும் அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 200 லீற்றர் கோடா, 60லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை கசிப்பு உற்பத்திப் பொருட்கள், கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கோப்பாய் பொலிஸார் கைபற்றியதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடாது.” – சரத் வீரசேகர

“காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடாது.” என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஆதரவு வழங்கப்போவதில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.