October

October

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினர் போராட்டம் !

70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

மேற்படி சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் தலவாக்கலை மல்லியப்பு கோவில் சந்தி பகுதியில் ஆரம்பமான பேரணி, தலவாக்கலை நகரை வந்தடைந்து, அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு மற்றும் தொழில்சார் சலுகைகளை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நேற்றுடன் (30) காலாவதியானது, இந்நிலையில் தற்போதைய வாழ்க்கைச் சுமைக்கேற்ப 70 வீத சம்பள உயர்வு வேண்டுமென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் வலியுறுத்துகின்றது.

எனினும், 24 வீத சம்பள உயர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை ஏற்க மறுத்தே, தமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் இடம்பெறுகின்றது.

தோட்டக் கம்பனிகளின் லாபம் மும்மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பள உயர்வை வழங்கக்கூடியதாக இருக்கும் என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் பல இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடதக்கது.