02

02

திருக்கோணேஸ்வர ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவும் – இந்திய தூதுவர் கோபால் பாக்லே

பெரும்பான்மையின ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் மீட்கப்பட வேண்டும் என தமிழ்தரப்பினர் பலரும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றுள்ளதுடன் இந்த அலயத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு இன்று சென்று வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரித்தார்.

வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இந்திய தூதுவர், எதிர்காலத்தில் இந்த ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தாழ்மையாக தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த ஆலயம் ஒரு புனிதமானது மாத்திரமில்ல, நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு ஆலயம் என்பதால், இந்த ஆலயத்தினுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலயத்தில் இராஜகோபுரம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில், அந்த விடயம் தொடர்பாகவும் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தும் என கோபால் பாக்லே கூறியுள்ளார்.

ஆலயத்தினுடைய தொன்மையான வரலாறு பூர்வீகமான விடயங்கள் அனைத்தையும் அறிஞர்களும், ஆலய நிர்வாகிகளும் தனக்கு நிறைந்த தெளிவுடன் அறிய தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை.” – தமிழ்தேசிய கட்சிகளுக்கு ரணில் அமைச்சரை் டக்ளஸ் அறிவுரை !

“தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய சபையில் இணைந்து கொள்ளுங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தேசியசபையின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றிருந்த நிலையில், பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் அதில் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையில் தமிழ்த் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும். உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த் தரப்புக்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைப்பதற்கான சாத்தியமான எந்தவொரு விடயங்களையும் எதிர்மறையாகவே கருதுகின்றார்கள்.

இதனால், பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீடித்துக்கொண்டே இருக்கின்றது. இதற்கு அவர்களின் சுயலாப அரசியலே காரணமாகின்றது. பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் அவர்களால் அரசியல் களத்தில் நிற்கமுடியாது என்பதற்காகவே எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.

தென்னிலங்கையின் எந்தவொரு தலைவர்களும், தனிநாட்டிற்கான கோரிக்கையை அங்கீகரிக்கப்போவதில்லை. ஆகவே, குணாம்ச ரீதியான அணுகுமுறைகள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக, கிடைக்கும் வய்ப்புக்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. 1987ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தாது எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ்த் தரப்புக்கள் மீண்டும் கிடைத்தள்ள வாய்ப்பினை இழந்து விடக்கூடாது.

1987ஆம் ஆண்டிலிருந்து வாய்ப்புக்களை எதிர்மறையாக விமர்சித்து தவறவிட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையில் பங்கேற்க வேண்டும். இந்த தேசிய சபையானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் தோற்றம் பெற்றுள்ளளது.

ஆகவே, நிச்சயமாக பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைவதற்கான வழிகளை எட்டுவதற்கு வாய்ப்பாக இருப்பதற்கு அதிகளவான சாத்தியப்பாடுகள் உள்ளன. அதனடிப்படையிலேயே தமிழ்த் தலைமைகள் தீர்மானங்களைச் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய சபையில் வாய்ப்பினை சாகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கான அனைத்து வரிகளும் நீக்கம் !

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50 தொடக்கம் 60 ரூபாவால் குறைவடையும். அதற்கமைய அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாவாக இருக்கும். அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19% ஆல் குறைவடையும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வரிச்சலுகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உற்பத்தியாளர்கள் இந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் உரிய வரிச் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால், அதற்கான செயன்முறைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 05 பிரதான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியின் போதும் 15% சுங்க இறக்குமதி வரி, 10% -15% CESS வரி மற்றும் 10% PAL வரி ( Ports & Airport Development Levy) , ஆகியன நீக்கப்பட்டுள்ளன´.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார அணையாடைகளுக்கு பூச்சிய சதவீத வற் வரி அறவிடப்படும். அதுபோன்று சுகாதார அணையாடைகளை முடிவுப்பொருட்களாக இறக்குமதி செய்பவர்களுக்கும் பூச்சிய சதவிகித வற் வரியின் அனுகூலம் கிடைக்கும். நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்றவாறு இச்சலுகைகள் யாவும் அமுல்படுத்தப்படுகின்றன.

சுகாதார அணையாடைகளின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் அதிக வரி காரணமாக அதன் விலை உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி வரியை குறைக்குமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் கால்ப்பந்து மைதானத்தில் வன்முறை – 174 பேர் பலி !

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

அரேமா அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையில் 129 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி நிகோ அபின்டா கூறும்போது, “கால்பந்து போட்டியில் தோல்வி அணியின் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 34 பேர் மைதானத்துக்குள்ளே இறந்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் இறந்தனர். மைதானத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளை தாக்கிய ரசிகர்கள் கார்களையும் சேதப்படுத்தினர். மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேறியபோது வாகனங்களை அடித்து நொறுக்கினர் என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்தோனேசியா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “மைதானத்தில் அரேமா அணியின் ஆதரவாளர்கள் செயல்களுக்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும், அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க ஒரு குழு மலாங்குக்கு சென்றுள்ளது” என்று தெரிவித்துள்ளது. வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் அரேமா அணி எஞ்சிய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரித்தானியா தலைமையிலான  இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையை இலங்கை நிராகரிக்கும் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணகத்தை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பிலான பிரேரணை பிரித்தானியா தலைமையிலான  இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த பிரேரணையை பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பலமான நாடுகள் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றுவதற்காக கொண்டுவரும் நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெறுவது மிகவும் சவலாக இருப்பதை நாம் அறிந்து கொண்டுள்ள போதும் வாக்கெடுப்பினை கோரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரேரணையை எதிர்வரும் 6ஆம் திகதி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுகின்றது.

அந்தப் பிரேரணைக்கு பிரித்தானியா தலைமையில் கனடா, அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன. மனித உரிமைகள் பேரவையில் இத்தகைய வல்லாதிக்க நாடுகளின் அணுசரணையில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து வெற்றிபெறுவது மிகவும் கடினமானதொரு விடயமாகும்.

எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பினை இலங்கை கோரவுள்ளது.  அதுமட்டுமன்றி, பிரேரணையின் உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே குறித்த நாடுகளுடன் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக கொண்டுவரப்படும் பிரேரணையால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தான நிலைமைகள் உள்ளன. குறிப்பாக, அந்தப் பிரேரணையில் சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையைச் செயற்படுத்துவதற்காக சிறப்பு விசாரணையாளர்களை இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயமானது, இலங்கையின் அரசியலமைப்பினை மீறும் செயற்பாடாகும். இதனால் இலங்கையின் இறைமை கேள்விக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமைகள் ஏற்படலாம். ஆகவே நாம் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனை நிராகரிப்பதாகவே அறிவிக்கவுள்ளோம்.

26ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு ஆயுத வன்முறை முரண்பாடுகளால் பல்வேறு பாதிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் அதிலிருந்து மீண்டும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

அதற்காக, தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப்போன்று உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அந்த ஆணைக்குழுவின் முடிவுகளின் பிரகாரம் உள்ளகப் பொறிமுறையொன்றின் ஊடாக அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் எமது கரிசனைகள் அதிகமாகவுள்ளன. குறிப்பாக, தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகளவான அக்கறைகளை கொண்டவர்களாக உள்ளோம்.

தொடர்ந்தும், இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நீடித்துக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு முற்றுப்புள்ளியொன்று வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. எனவே, குறித்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்களுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எதிர்கால பொருளாதாரச் செயற்றிட்டங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம். புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி ஏனைய சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு எப்போதும் நாம் தயாராக உள்ளோம். இதற்கான முன்முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணையிலும், பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய நிதியை மீளத் திரட்டல் உள்ளிட்ட முன்மொழிவுகள் காணப்படுகின்றன.

இந்த முன்மொழிவுகள் ஐ.நா.மனித உரிமைகள்பேரவையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கான அதிகார எல்லையையே கொண்டிருக்கின்ற நிலையில் பொருளாதார விவகாரங்கள் பற்றி அக்கட்டமைப்பினால் எவ்வாறு உள்ளீர்ப்புக்களைச் செய்ய முடியும் என்பது கேள்வியாகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணயநிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்றவை தலையீடுகளைச் செய்தால் அதிலொரு நியாயம் உள்ளது. அவ்வாறான நிலையில் தனது அதிகாரவரம்பினை மீறி எவ்வாறு மனித உரிமைகள் பேரவையினால் செயற்பட முடியும்.

“சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும்.” – இரா.சம்பந்தன்

“இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த 13ஆண்டுகளாக பொறுப்புக்கூறலுக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையொன்று கொண்டுவரப்படுகின்றது. இந்தப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துள்ள, பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மன், கனடா போன்ற நாடுகள் அதனை முழுமையான நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன், நிறைவேற்றப்படும் பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான உரிய பொறிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்.  இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த 13ஆண்டுகளாக பொறுப்புக்கூறலுக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எடுக்கப்பட்ட ஒருசில முயற்சிகளும் திருப்திகரமானதாக இல்லை. இவ்வாறான நிலையில், தான் புதிய பிரேரணையொன்று தற்போது கொண்டு வரப்படவுள்ளது.

ஆகவே, குறித்த பிரேரணையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் அதேவேளை, அதனை நடைமுறைச்சாத்தியமாக்கும் வகையிலான சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துக்கான ஏற்பாடுகளை உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்தவிடயத்தில் இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா தலைமையிலான நாடுகள், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்டவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு கும்பலின் முதன்மை சந்தேக நபர் கைது !

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தேடப்பட்டு வந்தார்.

அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும் வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யபட்டனர்.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.

இந்தக் கைது நவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மதுபான விற்பனையை நம்பி இருக்கும் அரசாங்கம் – மது பாவனை 20 வீதத்தினால் வீழ்ச்சி என நிதி இராஜாங்க அமைச்சர் கவலை !

தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் நாட்டில் மது பாவனை 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கலால் வரி திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு பின்னர் (27) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே குணசிறி கொரோனா தொற்று காரணமாக மது பாவனை வீழ்ச்சி அடைந்த போ து 2021 ஆம் ஆண்டு 22 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டதாக கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுக்களாக மட்டுமே 120 மில்லியன் ரூபாய் செலவிட்ட கோட்டாபாய அரசு !

கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கோட்டாபய தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்திலே அதிகபட்சமாக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை இதில் தெரியவந்துள்ளது.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், ஐந்து ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்காக 254 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிடும் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் முடிவுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தச் செலவினங்களிற்கு பலன் கிடைத்துள்ளதா என்பதை அளவிட முடியவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் பல்கலை கழக மாணவன் கைது !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் (சனிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலை கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவராக பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட 52 வயதான நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.