03

03

காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே இவ்வாறு சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான்.

மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான்.

அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலை சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து காணொளியை பதிவு செய்த இளைஞனுக்கும், அதனை பயன்படுத்தி மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞனையும் சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹிஜாப் போராட்டம் , ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு !

ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு அதிபர்  அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார். மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணி !

போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்றை நியமிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், பொலிஸ் மற்றும் மேலும் சில நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த செயலணி உருவாக்கப்படுமென அமைச்சர் கூறியுள்ளார்.

குடிசைகள் இல்லாத இலங்கையை உருவாக்குவதே இலக்கு – பிரதமர் தினேஷ் குணவர்தன

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நம்பிக்கை உள்ள வீட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசதி குறைந்த 1200 தோட்டங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு – ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு !

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டது.

இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

´அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக´ இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தினை நாசப்படுத்தியுள்ளார் – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக  மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் முழுமையாக மாகாணத்தினை நாசப்படுத்தியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்,

ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.

நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். மயிலடுத்துறை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்,இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம். தற்போது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும். “ என தெரிவிதார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.
இவ்விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள் அதனை மாவட்ட செயலாருக்கு வழங்க முடியும்.
சேதன பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 5 ஹேக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் இணக்கமானவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

யாழ்ப்பாணத்தில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு !

வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.

பலாலி அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 20, 28 மற்றும் 30 வயதுடைய மூவரே பொலிகண்டி பகுதியில் வைத்து வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர் , கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 217 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர். அவை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கஞ்சா பொதிகளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தனர்.