04

04

“பிரபாகரன் மரணிக்கும் வரை இங்கு இரத்தம் சிந்தாத  நிலைமை சாத்தியமில்லை என்பதில் நாங்கள் உறுதியாகவிருந்தோம்.” – பிள்ளையான்

“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களும் மரணிக்கும் வரை அது நாட்டிலே அமைதி அல்லது இரத்தம் சிந்தாத  நிலைமை சாத்தியமில்லை என்பதில் நாங்கள் உறுதியாகவிருந்தோம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் மேலும் பேசிய அவர்,

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்களை இனி வரும் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

16 வருடங்கள் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றியிருக்கின்றேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்படும்போது நாங்கள் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருந்தோம். அதில் ஒன்றுதான், இந்த நாட்டிலே அமைதி அல்லது கிழக்கு மாகாணத்திலே இரத்தம் சிந்தாத நிலைமை.

இந்த நிலைமை, பொட்டு அம்மான் அவர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களும் மரணிக்கும் வரை அது சாத்தியமில்லை என்பதில் நாங்கள் உறுதியாகவிருந்தோம். அது நடக்கும் போது, பழைய தலைவர், நண்பர்கள் என்ற அடிப்படையில் மிகுந்த வேதனையாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“புனர்வாழ்வுப் பணியகம்” சட்டமூலம் இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் – வாசுதேவ நாணயக்கார

“புனர்வாழ்வுப் பணியகம்” என்ற தலைப்பிலான சட்டமூலம் வெறுமனே அநீதிக்காகக் காத்திருக்கிறது என்றும், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் சிறு குற்றவாளிகள் கூட மறுவாழ்வுச் செயற்பாடுகளுக்குப் பதிலாக வேறு வழியின்றி செல்ல வேண்டியிருக்கும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இம்முறையின் மூலம், அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவது இயல்பிலேயே மோசமானது என்ற உண்மையை வீட்டுக்குத் தள்ளுவதாகவும், புனர்வாழ்வு என்ற போர்வையில் இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இளைஞர்கள் தேவையற்ற செல்வாக்கின் கீழ் குற்றவாளிகள் என்பதை ஒப்புக்கொள்வார்கள், இது இலங்கையின் நீதித்துறை மற்றும் அதன் சட்ட அமைப்புக்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு கடுமையான குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. புனர்வாழ்வுத் திட்டத்திலுள்ள பயங்கரமான தவறை நாம் இப்போது புரிந்து கொள்ள வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

மாற்றத்தையும்பொறுப்புக்கூறலையும் கோரும் இலங்கையர்களிற்கு ஆதரவளிப்பதென்றால் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழான ஏனைய குற்றங்கள் குறித்த ஆதாரங்ளை சேகரித்து ஆராய்வதற்கான  ஐக்கிய நாடுகள் திட்டத்தை நீடிப்பதற்கான ஆணையை இந்த தீர்மானம் கோருகின்றது. இலங்கையின் பொருளாதார சமூக நெருக்கடியை தொடர்ந்தும் காண்காணிக்கவேண்டும் எனவும் தீர்மானம் ஐ.நாவை கோருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

எனினும் இலங்கை தான் மனித உரிமைகளை பாதுகாப்பதாக தெரிவித்து  இதனை எதிர்க்கின்றது.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பற்றாக்குறைகளிற்கு தீர்வை காண்பதற்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்த இந்தியா இலங்கையின் மனித உரிமை தொடர்பான விவாதத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அளவிடக்கூடிய முன்னேற்றம் இல்லை என தெரிவித்திருந்தது என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதியளவு மனித உரிமை பாதுகாப்பு இல்லாதமை குறித்து பல உலக நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி இலங்கையில் மாற்றத்தையும்பொறுப்புக்கூறலையும் கோரும் இலங்கையர்களிற்கு ஆதரவளிப்பதென்றால் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரிக்கு அருகில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது !

யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (03) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“ஏழு அறிவுடையவர் அமெரிக்காவில் இருந்துக்கொண்டு கோப் குழுவை நடத்துகிறார்.“ – விமல் வீரவன்ச

“கோப் குழுவின் உறுப்பினர் நியமனத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (ஒக். 03) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது கோப் குழுவுக்கு சுயாதீன தரப்பினரின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்ற தெரிவு குழுவுகளுக்கு நியமிக்கப்படவில்லை. கோப் குழுவின் உறுப்பினர் நியமனத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

ஏழு அறிவுடையவரின் உதவியாளர்கள் கோப் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு அறிவுடையவர் அமெரிக்காவில் இருந்துக்கொண்டு கோப் குழுவையும் இனி வழி நடத்துவார்.இது வெட்கப்பட வேண்டும்.கோப் குழு உறுப்பினர் நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.

கோப்  குழுவின் தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவுக்கு வழங்க ஏழு அறிவுடையவர் ஆலோசனை வழங்கியுளளார். கோப் குழுவின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டும்,அதன் கட்டமைப்பு எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதைம் ஏழு அறிவுடையவர் வகுத்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் சுயாதீன தரப்பினருக்கு எந்தளவுக்கு காலவகாசம் வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குரியது. தற்போது  சுயாதீன தரப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலத்தில் 33 உறுப்பினர்களுக்கும் உரையாற்ற வாய்ப்பு கிடைக்கப்பெறாது.

எதிர்கட்சியில் இருந்து ஆளும் தரப்பு பக்கம் சென்ற ஹரீன் பெர்னான்டோ,மனுஸ நாணயக்கார ஆகியோருக்கு உரையாற்ற காலவகாசம் வழங்கப்படுமாயின் ஏன் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சி பக்கம் வந்து சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு வாய்ப்பளிக்க கூடாது.சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு உரையாற்ற வாய்ப்பளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

“நாமல் ராஜபக்ஷவுக்கு போஷாக்கு குறைபாடுள்ளது“ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தன்னைப் போலவே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஓரளவிற்கு இருந்ததாகவும் ஆனால் ஊடகங்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இப்போது முட்டை, பால் மா, மீன், இறைச்சி போன்றவற்றின் விலை அதிகமாக இருப்பதாகவும் மக்களால் அவற்றை வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் மீன்கூட சாப்பிடுவதில்லை என்றும் அதனால் தான் இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாகவும் மீனைக் கூட உண்ணாத நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையைச் சேர்ந்த பளு தூக்கும் வீரரும் காய்கறிகளை மட்டுமே உண்கிறார் என்றும் அவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை – மக்கள் போராட்டம் !

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சிறுவர் தினத்திற்கு இணையாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டும், அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், போன்ற விடங்கள் வலியுறுத்தப்பட்டது.

பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

கடந்த சில காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளில் போதைப்பொருளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிநபர் ஒருவர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து 15 ஆசிரியர்கள் இணைந்து கையொப்பமிட்டு அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஆனாலும் அவ்விடயம் தொடர்பில் உரிய நபர் கைது செய்யப்படாது உரிய நபரை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு அழுத்தங்கள் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்பட்டதாகவும் இதனை அடிப்படையாக வைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆசிரியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனால் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுடன் மாணவர்களும் உளரீதியாக பாதிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டதுடன் அவ்விடத்திற்கு சென்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் ஆகியோரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

போராட்டத்தின் போது போதைப்பொருளுக்கு எதிரான வீதி நாடகமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்தனர் – ரஜமஹா விகாரையின் பிரதமகுரு சாடல் !

சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின் கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சட்டபூர்வமாகும் கஞ்சா வளர்ப்பு

கஞ்சாவை ஆயுர்வேதப் பொருட்களாக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் – சர்வதேச மன்னிப்புச் சபை

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான 57 பக்க ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“We are near total breakdown”  என்ற கருப்பொருளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, நாட்டின் உணவுப் பணவீக்கம், சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், வருமான இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வை முன்வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், மருந்துப் பொருட்களின் விலையை 40% உயர்த்த சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதுடன், ஓகஸ்ட் மாதத்திற்குள் 2 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 188 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 724 அத்தியாவசிய அறுவை சிகிச்சை சாதனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் அல்லது 28% மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.