05

05

பாடசாலை நூலகத்தில் வைத்து 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் – 61 வயது நூலகர் கைது !

பாடசாலை நூலகத்தில் வைத்து 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த மாணவி புத்தகம் எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்ற போது, நூலகப் பொறுப்பாளர் மாணவியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தொலைபேசியில் செய்த முறைப்பாட்டின் பேரில், மொரட்டுவ பொலிஸாரால் பாடசாலையின் 61 வயதான நூலகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஈரான் ஹிஜாப் விவகாரம் – சிறுமியை கொலை செய்து ரகசியமாக புதைத்த பாதுகாப்பு படை !

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் திகதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஈரான் அரசு மற்றும் அதிபர் இப்ராகிம் ரைசிக்கு எதிராக திரும்பியுள்ளது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது. செப்டம்பர் 20ஆம் திகதி  அன்று தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற 17 வயது சிறுமி ஒருவர் மாயமானார் அவரது பெயர் நிகா ஷகராமி. அந்த சிறுமியை ஈரானிய பாதுகாப்புப் படையினர் கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலில் அவரது மூக்கு உடைக்கபட்டு இருந்தது. மண்டை ஓடு சிதைந்து இருந்தது. பின்னர் அவரது இறுதி சடங்கில் கூட்டம் கூடாமல் இருக்க அவரது உடலை திருடி ரகசியமாக புதைத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதிகாரிகள் நிகா ஷகராமியின் உடலை கைப்பற்றி 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக புதைத்துள்ளனர் என்று பிபிசி பாரசீக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நாவின் இலங்கை மீதான புதிய தீர்மானம் இலங்கை இராணுவத்தின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடித்து அவர்களை பிணை எடுக்கிறது !

“தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம்.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(5) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நியாயமற்ற தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதற்கான எமது முடிவை வெளிப்படுத்தும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம். ஏனெனில் இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழர்களாகிய நாம் பல்லாண்டு காலமாக மிகப்பெரும் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். இந்தத் தீர்மானமானத்தினூடாக ஆகக்குறைந்தது நீதியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் இந்தத் தீர்மானத்தால் எங்களின் நம்பிக்கை பொய்த்துப்போயுள்ளது.

இந்தத் தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய எந்தப் புரிதலையும் வெளிப்படுத்தவில்லை. ஆகக்குறைந்தது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகளை கூட பிரதிபலிக்கவில்லை. இந்தத் தீர்மானம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிவிட்டது. இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது.

தமது குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவை இல்லை, தாம் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டோம் என உணரும் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா அரச படையினர், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தயக்கமின்றி மேற்கொள்வதற்கு, இத்தீர்மானம் வழி ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த, ஆயிரக்கணக்கான தமிழரை காணாமல் ஆக்கிய, நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய அதே சிறிலங்கா அரச படையினரே, அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த தீர்மானம், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இதே பரிந்துரையை அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும், இலங்கைக்கு வருகை தந்து அறிக்கையிட்ட ஒன்பது முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதே பரிந்துரையை வலியுறுத்தி உள்ளனர்.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட அனைத்து தமிழ் மக்கள் தரப்பினாலும் வலியுறுத்தப்பட்டது.

சிறிலங்காவின் அரச படையினராலும் அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரே வழியாக இதனையே எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்தத் தீர்மானம் எங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்ட சிறிலங்கா இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது.

மேலும், சிறிலங்கா அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரும் இழப்பினை சந்தித்த தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த தவறியது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் பெரும் துயரத்தையும் வலிகளையும் புறக்கணித்துள்ளது.

ஆகவே இந்த நியாயமற்ற தீர்மானத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் – என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

’22வது அரசியலமைப்புத் திருத்தம் தனிநபர் நலனுக்காக கொண்டுவரப்படுமாயின் போராட்டம் வெடிக்கும்.”- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஒரு தனி நபரின் தேவைக்காக 22வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

உரிய திருத்தத்தை முன்வைத்து நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்வதே சில கட்சிகளின் நோக்கம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தை கொண்டு வருவது தேசத்திற்குள் பிரிவினைவாதத்தையே தோற்றுவிக்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மக்கள் அரசியலமைப்பு திருத்தத்தை கோராத நிலையில் எனவே ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய இதை முன்வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலையில் பகிடிவதை சம்பவங்கள், மற்றும் பெற்றோரின் முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மனித உரிமை தொடர்பில் கவனம் எடுப்பதா என்பது தொடர்பில் கற்றவர்களும் நன்கு உணர்வர்.
அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களுக்காகவும் ஒருசிலர் செயற்பட்டு வருகின்றனர்.

அங்கு அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். பேராதனை  பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் எனக்கு பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து 600க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

மனித உரிமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் குறுகிய நோக்கங்களுக்காக செயல்படுபவர்கள் மற்றும் வன்முறைகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஐ.நா இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகிறது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஐ.நா.ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் மனித உரிமைகள் பேரவைக்கு இருந்தாலும் அது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நிபுணர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் – ஐ.நாவில் கோர் குழு !

விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் என கோர் குழு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்து கோர் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

உயர் ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்ற குறித்த குழு, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருளில் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை மற்றும் வீட்டு வருமானம் குறைப்பு போன்றவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் பற்றி கோர் குழு கவலை வெளியிட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை, கைதுகள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, இதன் விளைவாக ஏற்பட்ட மரணங்கள், அழிவு மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவமயமாக்கல் நடவடிக்கை, முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு தொடர்பாகவும் கோர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகளின் பாரதூரமான மீறல்களுக்கான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள குறித்த நாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச் செயல்களுக்கும், உடனடி, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை
அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பயனுள்ள மற்றும் சுயாதீனமான செயற்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் ஊழல்களை விசாரிப்பது உட்பட, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளி – காதலன் கைது !

மாணவியின் நிர்வாண காணொளியினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காதலன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறான நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளியை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு வழங்கியதாகவும் பின்னர் அதனை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மொனராகலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மொனராகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு !

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர்.

அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.  அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை – இலங்கையின் நிலைப்பாடு என்ன..?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற நிலையில், வியாழக்கிழமை (6) இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த விடயத்தில் அங்குள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு சிறப்பாக செயற்பட்டு நாட்டை பாதுகாப்பார்கள் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, ஜெனிவா விவகாரம் குறித்தும் இலங்கைக்கு எதிரான உத்தேச புதிய தீர்மானம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையில் வெளிக்கள விசாரணை பொறிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை மேலும் வலுப்படுத்தவும், அதனூடாக இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் மற்றும்  பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டு சர்வதேச பொறிமுறையொன்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தவும் புதிய தீர்மானத்தில் பரிந்துரைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படும்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை  எதிர்க்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானங்கள் மீதான கூட்டு இணக்கப்பாடுகளிலிருந்து தன்னிச்சையாக விலகி உள்ளக விவகாரங்களில் தலையிட கூடாது என்றும் எதுவாக இருந்தாலும் உள்ளக நீதிமன்ற கட்டமைப்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கூறியது. இதனால் இதுவரைக்காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வாய்ப்புகள் என்பவை கேள்விக்குறியாக்கப்பட்டதாக சர்வதேச நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகியது.  அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, விவாதமும் இடம்பெற்றது. பின்னர் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானத்தின் வரைபை பகிரங்கப்படுத்தியது.

இதனை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை பல்வேறு நடவடிக்கைளை தனது இராஜதந்திர மையங்கள் ஊடாக முன்னெடுத்திருந்தது. இதன் பின்னரே திருத்தங்களுடன் கூடிய 2 ஆவது வரைபு வெளியிடப்பட்டு, மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பே நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.