07

07

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்ததது ஏன்.? – இந்தியா விளக்கம் !

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருங்கள் – சுற்றுலாப்பயணிகளுக்கு அமெரிக்கா ஆலோசனை !

வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஒருபோதும் தமிழர்களுக்கு உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் – காணாமல் போனவர்களின் உறவுகள்

இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் என்று வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,

“ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா மறைந்து போனது. இது எங்கள் தாய்மார்களை வருத்தமடையச் செய்துள்ளது. ஒரு நண்பருக்கு உதவி தேவைப்படும்போது, ​​ஒரு உண்மையான நண்பர் உதவுவார். ஆனால் இந்தியா ஒரு நண்பன் அல்ல என்பதை நமக்குக் காட்டியிருக்கிறது.

இந்தியாவை ஆதரித்து பாதுகாக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முகவர்களும் தங்கள் சிந்தனை சரியா.? என்பது பற்றி தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

தீர்மானத்தின் முக்கிய நோக்கம், போரின் போது தமிழர்கள் படும் துன்பங்களை எப்படியாவது எடுத்துரைப்பதாகும். அது ஒவ்வொரு ஆண்டும் இலங்கை தமிழர்கள் மீது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை செய்தது என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது.

பிராந்திய வல்லரசான இந்தியா இந்தவிடயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துகிறது. இந்தியா ஒருபோதும் தமிழர்களுக்கு உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும். தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நில அபகரிப்பு, கோவில்கள் தமிழ் கலாசார அழிவு, இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பு, கடத்தல்கள், கற்பழிப்பு, மிரட்டல், இலங்கை உளவு முகவர்களிடமிருந்தான அன்றாட அச்சுறுத்தல் போன்ற பல உள்ளன.

எனவே அடிமைப் பொருளாதாரம், ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து எங்களை விடுவிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைப்பது தான் ஒரே வழி.

தமிழர்களின் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்புக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வசதி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் – நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்படும் என்கிறார் நீதி அமைச்சர் !

நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுவதாக நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஐ.நா பிரேரணை தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, அவர் இதனை தெரிவித்தார். மேலும் இதுதொடர்பில் பேசிய அவர்,

நாடு என்ற ரீதியில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட கொள்கை மாற்றம் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான பிரேரணை நிறைவேற்றப்பட்டதற்கான முக்கிய காரணம்.

வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை விரைவில் ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.

நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்படுகிறது.

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டிற்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் GSP+ சலுகையும் பாதிக்கப்படலாம்.

இலங்கை தன்னிறைவை அடைந்த நாடாக இருந்தால், இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எனினும், இலங்கையிலிருந்து 70 வீதமான பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன்,  GSP+ நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைத்தாலும், நாட்டில் காணப்படும் சந்தர்ப்பவாத அரசியலினால், சர்வதேச நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் மேலும் தாமதமடையக்கூடும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு ..? – வெளியாகியுள்ள அறிவிப்பு !

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்: புதின்  பிறந்தநாளில் விடுக்கப்படும் செய்தி என்ன?ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 – தொழிற்சங்கங்கள் யோசனை !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி முன்வைத்துள்ளது.

மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, வெகுசன அமைப்புகள் இணைந்து ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ் பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 60 வீதமானோருக்கு ஒருவேளை அல்லது இருவேளை உணவு – ஏனையோர் பட்டினியில் !

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு மட்டத்தை விருத்தி செய்வதற்கான கருத்து பரிமாற்ற தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், எஞ்சிய 60 வீதமானோர் ஒருவேளை அல்லது இருவேளை உணவையே எடுத்துக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறார்களின் உணவு உட்கொள்ளல் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மலையக பிரதேசத்தில் போசாக்கு மட்டமானது மிகவும் குறைவாக காணப்படுகின்ற நிலையில், 6 பிரதேசங்களில் மனித அபிவிருத்தி தாபனம் போசாக்கு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் விதுர சம்பத் கலந்து கொண்டதோடு, பிரதேச கிராம சேவகர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜெனீவா அமர்வு வரும்போது மட்டும் தமிழ் அரசியல்தலைவர்கள் பௌத்த விஹாரைகள் பற்றி பேசுகிறார்கள் – நாடாளுமன்றில் விமல்வீரவங்ச !

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பில் தொடர்ந்தும் அத்துமீறல்கள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

ஏற்கனவே அங்கு நிர்மாணிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளபோதும், அங்கு நீதிமன்றத்தை மீறி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்திருந்தார். அதுவரையில் குருந்தூர்மலையில் எவ்வித செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பாராளுமன்ற சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உறுதிமொழியை மீறி இன்று கொழும்பில் இருந்து நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், குருந்தூர்மலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவை மாத்திரம் அல்ல. பாராளுமன்ற சபையின் உறுதிமொழியையும் மீறும் செயல் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். எனவே இந்த விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்தி உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள இந்துக்கோயில்கள் தொடர்பில் எவரும் பிரச்சினைகளை எழுப்புவதில்லை. எனினும் வடக்குகிழக்கில் உள்ள பௌத்த விஹாரைகள் பற்றி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரச்சினைகளை எழுப்பி வருவதாக குற்றம் சுமத்தினார். அதுவும், ஜெனீவா அமர்வு வரும்போதே இவ்வாறான பிரச்சினைகள் முன்வைக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இது நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையது, இதனை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த சபையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியும் இன்று மீறப்பட்டுள்ளமையை தாம் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு – விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி !

தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ரொயட்டர் செய்திச்சேவை இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய 73 வயது முதியவர் !

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். விசாரணைகளின் பின்னர் வயோதிபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

………………………..

அண்மைக்காலமாக சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெரியவர்களால் (50வயதுக்கு மேற்பட்டோரால்) சிறுவர் – சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படும் தொகை அதிகரிப்பதை அண்மையகால தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனமெடுக்க வேண்டும். பிள்ளைகள் மீதான பெற்றோரின் கவனிப்புக்கள் குறைவடைந்து வருவதே இன்றைய கால சிறுவர்கள் மீதான அதிகரித்த பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாகும். பெற்றோர் பிள்ளைகளுடன் நட்புறவுடன் பழக முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகியள்ளது. பாடசாலைகளும் மாணவர்களுக்கு நல்லதொடுகை – கூடாத தொடுகை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கூடாத தொடுகைகள் ஏற்படும் போது உடனடியாக பெற்றோரிடமோ – ஆசிரியர்களிடமோ தெரிவிப்பதற்கான ஒரு சூழலலை உருவாக்க முன்வர வேண்டும்.