08

08

5,320 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த கப்பல் – கப்பலை கைப்பற்றிய இந்திய கடற்படை!

சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது நேற்று முன்தினம் (06) கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 1,200 கோடி இந்திய ரூபாய் (5,320 கோடி இலங்கை ரூபாய்) என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கப்பலுடன் ஈரான் நாட்டின் ஆறு பேரை இந்திய படையினர், கேரளாவின் மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இலங்கையின் கப்பல் ஒன்றுக்கு மேலும் சரக்குகளை வழங்குவதற்காக குறித்த கப்பல் இந்திய கடற்பரப்புக்கு புறப்பட்டபோதே இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இலங்கைக் கப்பலை அடையாளம் கண்டு இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை ஆதரவை இழந்தது ஏன்..? – ஜீ.எல்.பீறிஸ்

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பது பொதுவான மரபு எனவும் எனினும் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள்கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஏன் நடக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் ஆணித்தரமான வாக்குறுதிகளை நாம் இலகுவாக எடுத்துக்கொண்டு அவற்றை மீறுவதே முக்கிய காரணம் என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ரணில் ஆரம்பத்தில் நம்மை பற்றி புறங்கூறினாலும் இன்று நல்வழிப்படுத்தப்பட்டுள்ளார் – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் தற்போது நல்வழிப்படுத்தப்பட்டுள்ளாரென கட்சியின் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன புறங்கூறி இருந்தாலும் கூட, தற்போது அவர் நல்லவர் எனக் கருதி அவரை ஏற்றுக் கொண்டிருப்பதாக களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல சவால்களை எதிர் நோக்குகிறது. அவற்றை வென்று வர எம்மிடம் போதுமான பலம் உள்ளது.

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை இலங்கை பொதுஜன பெரமுன முன்னெடுக்கும். பொது மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் கடமை.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள்” என்றார்