அண்மையில் சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் ஒக்டோபர் முதலாம் தேதியன்று. கொண்டாடப்பட்டிருந்தது.
Better Future for Every Child ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த எதிர்காலம்
என்ற மகுடவாசகம் 2022 ஆம் ஆண்டின் சிறுவர் தின மகுடவாசகமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் பல பாடசாலைகளில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறுவர் தின கொண்டாட்டங்கள் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பாடசாலை மட்டங்களில் பெரிதாக இடம்பெற்றிருக்காத நிலையில் இந்த வருடம் வெகுவிமரிசையாக பல பாடசாலைகளில் கொண்டாடப்பட்டிருந்தது.
உண்மையிலேயே எங்களுடைய குழந்தைகளுக்கு – எதிர்கால தூண்கள் எனப்படும் சிறுவர்களுக்கு நாம் வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை பெரியவர்களான நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் ஒரு பக்கத்தில் மாணவர்களிடையே வேகமாக பெருகி வரும் வன்முறை கலாச்சாரம், இன்னொரு பக்கமாக மாணவர்களிடையே வேகம் அடைந்து வரும் போதைப் பொருள் பழக்கம், சிறுவர்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் என சிறுவர்களின் உலகம் மிகுந்த பாதுகாப்பற்ற ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவை தாண்டி இலங்கையில் இன்றைய தேதிக்கு சிறுவர்களை மிகவும் பாதிக்கக் கூடிய – நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தக்கூடிய ஒரு விடயமாக தொலைபேசி பாவனை உருவெடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதை அண்மையில் வெளியான மூன்று செய்திகள் தெளிவாக வெளிக்காட்டி இருந்தன.
செய்தி 01
கம்பளையில் பேஸ்புக் பார்ட்டி ஒன்று இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்த அந்த பார்ட்டியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தோரில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் 14 தொடங்கி 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் என போலீசார் சுட்டிக் காட்டியிருந்தனர்.
செய்தி 02:
யாழ்ப்பாணம்- வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான். மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான். அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செய்திகளையும் இலகுவாக இன்றைய சமுதாயத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் சரி – பல பெற்றோரும் சரி இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர். இந்த செய்தி தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற தருணம் இது.
உண்மையிலேயே மேற்சொன்ன இரண்டு செய்திகளும் தொலைபேசி பாவனையால் இன்றைய சிறுவர்கள் எந்தளவு தூரத்திற்கு அச்சுறுத்தலான ஒரு உலகில் வாழ தலைப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கூறப்பட்ட இரண்டு செய்திகளிலும் உள்ள தவறுகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் சிறுவர்கள் அல்ல. பெற்றோர்களும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெரியவர்களுமே. சிறுவர்களின் கைகளுக்கு தொலைபேசிகளை கொடுக்கின்ற போது பெற்றோர் அவற்றின் நல்ல விடயங்களை – அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்க மறந்ததன் விளைவே மேற்கூறப்பட்ட இரு அபத்த சம்பவங்களும் ஆகும்.
கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தொலைபேசி – இணையம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் இடையேயான தொலைபேசி பாவனை இன்னும் தீவிர தன்மையினை எட்டி உள்ளது.
சில பெற்றோர்கள் “என்னுடைய மகன் 24 மணி நேரமும் தொலைபேசியுடன் தான் இருக்கிறான். ” என சிலாகித்துக் கூறுவதையும் இன்றைய காலத்தில் காண முடிகிறது. சரி அந்த சிறுவர்கள் தொலைபேசிகளில் என்ன செய்கிறார்கள் என சற்று கூர்ந்து அவதானித்தால் அவர்கள் பெரும்பாலும் Free fire, pubG என வன்முறையை தூண்டக்கூடிய ஆபத்தான கேம்களை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது விளையாட்டு தானே என கடந்து செல்லக்கூடிய விடயம் அல்ல. இந்த விளையாட்டுக்கள் சிறுவர்களின் மனதில் ஏதோ ஒரு விதத்தில் வன்முறை குணத்தை விதைத்து விடுகின்றன. அத்துடன் தொடர்ந்து தொலைபேசி கேம்கள் விளையாடும் போது உடல் சார்ந்த – மனது சார்ந்த பல தாக்கங்களுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை தவிர கள்ளங் கபடமற்ற சிறுவர்களிடத்தில் பாலியல் சார்ந்த விடயங்களை தவறான புரிதலோடு இந்த தொலைபேசிகள் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களில் ஆபாசமான பல இணைய தளங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறுவர்களின் கைகளில் இருக்கக்கூடிய தொலைபேசிகளை பெற்றோர் கண்காணிக்காது விடுகின்ற போது ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற துர்ப்பாக்கியமான நிலைமையும் இன்று ஏற்படுத்துள்ளது. இது பாடசாலை காலங்களில் சக மாணவியையோ – சக மாணவனையோ – சக சிறுவனையோ – சக சிறுமியையோ ஆபாசமான கண்ணோட்டத்தில் சிறுவர்கள் நோக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது. இயல்பாகவே பால் சமத்துவக்கல்வி நமது நாட்டில் சிறுவர்களுக்கு முறையாக கற்பிக்கப்படுவதில்லை. இதனால் பால்நிலை சமத்துவம் தொடர்பான புரிதல் 20 வயதை தொட்ட இளைஞர்களிடம் கூட ஒழுங்காக இருப்பதில்லை. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் இன்னமும் அதிகம் இந்த தொலைபேசி பயன்பாட்டால் முறையற்ற – புரிதலற்ற பாதையில் செல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
சிறுவர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட ஆரம்பித்ததை அடுத்து சிறுவர்கள் மைதானங்களை – ஓய்வு நேரங்களில் ஏனையவருடன் விளையாடுவதை முழுமையாக நிறுத்தி விட்டனர் என்றே கூற வேண்டும். கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் கூட தொலைபேசிகளில் கேம் விளையாடுவதிலும் – தொலைபேசியுடன் தனிமையில் இருப்பதிலுமே இன்றைய சிறுவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவுகளையே இன்றைய நாங்கள் பல பாடசாலைகளில் காண முடிகிறது. பல மாணவர்களின் உடல் எடை அதிகமாகி சிறுவயதிலேயே அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இதுவும் ஒரு வலமாக தொலைபேசி ஏற்படுத்திய ஆபத்தான விளைவு தான்.
இன்று சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கக்கூடிய அனைவருடைய கைகளிலும் இணைய வசதியுடன் கூடிய போன்களே காணப்படுகின்றன. வேலை முடித்து வந்ததிலிருந்து அடுத்த நாள் வேலைக்கு செல்லும் வரை குடும்பத்தின் அப்பா – அம்மா – அண்ணா – அக்கா என குடும்ப அங்கத்தவர்கள் பலர் தொலைபேசியிலேயே காலத்தை கழித்து விடுகிறார்கள். பெற்றோரும் தொலைபேசியில் பிள்ளைகளும் தொலைபேசியில் என்ற நிலையே அதிக குடும்பங்களில் காணப்படுகின்றது. குடும்ப அங்கத்தவர்களுக்கு இடையே சீரான ஒரு தொடர்பு அல்லது பிணைப்பு இன்று அதிக குடும்பங்களில் இல்லாமலேயே போய் விட்டன. இதனால் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள் – பிரச்சனைகளை கூட பெற்றோர் பெரியவர்கள் கவனிக்காது விட்டு விட்ட சோகம் பல இடங்களில் தொடர்கிறது.
இன்றைய நாட்களில் ஆண்ட்ராய்ட் போன்கள் சிறுவர்களின் கைகளில் அதிகமாக உலவ ஆரம்பித்துள்ளதன் விளைவு எப்படியிருக்கிறது என்பதை அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலை வெளியிட்டிருந்த ஒரு அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தது. அந்த அறிக்கையின்படி,
‘டிக்டொக் செயலிக்கு அடிமையாகியதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேவேளை, தரம் 09 ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ, பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர்.
குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர். இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால், நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.’
என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் வவுனியாவில் உள்ள ஒரு பிரபல பாடசாலை அதிபரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் மாணவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்டு இருந்த குறித்த பாடசாலையின் அதிபர் ” மாணவர்கள் முன்னைய காலங்களைப் போல மைதான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லை. தொலைபேசிகளை பார்க்கின்ற போது மட்டுமே அவர்களுடைய முகங்கள் சந்தோஷமடைகின்றன. இன்றைய தேதிக்கு சிறுவர்களை சந்தோஷப்படுத்த தொலைபேசிகள் மட்டுமே போதுமானவை. இரவு நேரங்களில் அதிகமாக தொலைபேசிகளை பாவிக்கும் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் சோர்வாகவும் – தூக்க மயக்கத்திலும் இருக்கிறார்கள்” என விசனப்பட்டு கொண்டார்.
இன்று பல சிறுவர்கள் அதிகம் எதிர்கொண்டுள்ள குறைபாடு பார்வை தொடர்பானதாகும். இதற்கான காரணம் மாணவர்கள் இடையே அதிகரித்த தொலைபேசி பாவனையாகும்.” ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் , நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.” என்கிறார்கள் கண் வைத்தியர்கள். இன்று சிறுவர்களை அதிகமாக கண்கிளினிக்குகளில் காண முடிகின்றது. சிறுவயதிலேயே அவர்கள் கண் வலி காரணமாக கல்வி கற்க முடியாத சூழலையும் எதிர்கொள்கின்றனர். இதைத் தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து சிந்திக்கும் ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களிடம் தொலைபேசி பாவனையை குறைத்துக் கொள்வதற்கு வலியுறுத்த வேண்டும். அதே தொலைபேசிகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர் பிள்ளைகள் தொலைபேசிகளை பாவிக்கும் போதும் சரியான வகையில் அதனை பயன்படுத்துகின்றனரா..? அவர்களுடைய தொலைபேசி பாவனை முறையானதாக உள்ளதா ..? தவறானதாக இருப்பின் ஏன் தவறானது..? என்பவற்றை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி சொல்லி கொடுத்து கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் ஒவ்வொருவருடைய பொறுப்பும் ஆகும். ஆனால் பெற்றோர்களும் பெரியவர்களும் பணம் , உழைப்பு, சொகுசான வாழ்க்கை இவை மட்டுமே தேவையானது என்ற கோணத்தில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ள இன்றைய சூழலில் சிறுவர்களுடன் குறிப்பாக தமது பிள்ளைகளுடன் தங்களுடைய நேரத்தை ஒதுக்க தயார் இல்லை என்பது தொலைபேசியில் தொடங்கி சிறுவர்கள் இன்றைய தேதிக்கு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகும்.
இன்றைய தினம் ஒவ்வொரு சிறுவர்களின் கைகளிலும் உள்ள ஆண்ட்ராய்டு போன்கள் அவர்களினுடைய எதிர்காலத்தினை மெல்ல மெல்ல சிதைத்து விடுகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோருமே நினைவில் வைத்திருக்க வேண்டும். காலம் வேகமாக நவீன உலகை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் நவீன உபகரணங்களை கையாள ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் சிறுவர்களின் கைகளில் உள்ள தொலைபேசி அளவான வகையில் தேவைக்கேற்றாற் போல் மட்டுமே இருந்தால் அது தேவையற்ற – எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது.
எங்களுடைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவதற்காக இந்த சிறுவர் தினத்தில் நாம் உறுதி பூணுவோமாக. மெல்ல மெல்ல சிறுவர்களை தொலைபேசி உலகில் இருந்து யதார்த்தமான உலகத்திற்கு கொண்டு வந்து வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை அவர்களை உணர வைப்பதற்கு பெற்றோர்களும் பெரியோர்களும் – ஆசிரியர்களும் வழிசெய்ய முன்வர வேண்டும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் தேசம் இணையத்தின் இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.