10

10

2022ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு !

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

“இந்த முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருகிறது.” – சஜித் பிரேமதாஸ

“இந்த முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருகிறது.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வன்னம் கதறி அழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தை கூட அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மகனிடமிருந்து தாயை பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்கக்கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்தார். அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முற்றாக அஞ்சுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். உடனடியாக தேர்தலொன்றை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுத்தார். தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பயன்படுத்துவதை விடுத்து, முடிந்தால் மொட்டு விரும்பும் எந்தத்தேர்தலையும் நடத்துங்கள் என்றும் சவால் விடுத்தார்.

டொலர்கள் இல்லை – 20 நாட்களாக காத்திருக்கும் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் !

99,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் நங்கூரமிட்டுள்ளது.

7 மில்லியன் டொலர்கள் இல்லாத காரணத்தினால் இந்த கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெறவில்லை என்பதோடு தாமதக் கட்டணமம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

அதன்படி நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை லட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும் என்றும் மொத்தமாக 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரல் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட யூரல் கச்சா எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தது.

அதனை விடுவிப்பது தொடர்பாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலி ஆர்ப்பாட்டத்தில் சிறுவர், பெண்களை துன்புறுத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

காலி முகத்திடலில் போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் நேற்று(09) மாலை கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான 16 வயது மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனையவர்கள் தொடர்ந்தும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி முதல் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்து உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் போராட்டக்கள உறுப்பினர்கள், காலி முகத்திடலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்விற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதே நேரம் காலிமுகத்திடலில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறுவர்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருட்களுடன் யாழில் இருவர் கைது !

ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில் வைத்து இருவரும் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் , ஒன்றரை கிராம் ஹெரோயின் , 10 ஊசி சிரிஞ் , தேசிக்காய் , லைட்டர் , தீப்பெட்டி உள்ளிட்ட போதை ஏற்ற பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.