11

11

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் கைது !

மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கா.பொ.த உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ம் திகதி விடுதி அமைந்துள்ள பாடசாலை அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து அந்த மாணவி மீது பாலியால் சேட்டை விட முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமி வன்புணர்வு – பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்ட சாருவ லியனகே சுனில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் பி.குமரன் ரட்ணம் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 25,000 அபராதம் மற்றும் 250,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் விதிக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது !

நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தின் சந்தியில் வைத்து 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீண்ட காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விய ங்காட்டு சந்திப் பகுதியில் 1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்த ஒரு மணித்தியாலத்தின் பின்னர், இந்த அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் இந்த பின்நோக்கிய கொள்கையை அரசாங்கம் மாற்றுக்கொள்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் தாழ்த்துவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று முன்னதாக இன்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

உலகளாவிய வகைப்பாட்டின் படி இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தது.

எனினும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து சலுகைக் கடன்களைப் பெற முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தனிநபர் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அது 2022 இல் மேலும் சரிந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில் இலங்கைக்கு சலுகைக் கடன் உதவிகளை வழங்குவதற்காக, உலகளாவிய முகவர் நிறுவனங்கள் இலங்கையின் அந்தஸ்தைத் தரமிறக்குமாறு நிதி அமைச்சருக்குப் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இது உலகின் மிக ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும் உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து சலுகை நிதியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.

அந்நிய கையிருப்பு பற்றாக்குறை, பணவீக்கம், கடனை அடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு – அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை!

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் விடுதித்துள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த பிணை முறி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளை மூவரடங்கிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதன்படி அர்ஜூன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

இதனால் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் 05 முதல் 14 வரையிலான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லை – கருணாகரம் ஜனா

“அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாண ஆட்சி எங்களது கையில் இருக்குமானால் இந்த மாதிரியான நில அபகரிப்புகள், எல்லைப்புற குடியேற்றங்கள், இல்மனைட போன்ற எமது வளங்கள் சுரண்டப்படுகின்ற விடயங்களுக்கு நாங்களே முடிவு கட்ட முடியும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இழந்த உயிர்களைத் தவிர மற்றையவைகளையெல்லாம் கல்வியின் மூலமாக மீளப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை எமது இனத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் ஒரு காலத்திலே இலங்கையிலே எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழர்கள் கோலோற்றிய நிலை இருந்தது. அந்த நிலை மீண்டும் வரவேண்டும்.

தற்போது தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலகட்டத்திலே இருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்து அரசியல் ரீதியில் நடுச் சந்தியில் நிற்கின்றோம். ஆயுத ரீதியில் பல முரண்பாடுகள் எங்களுக்குள் இருந்தும் 2001லே அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் என்பதற்கான ஒரு சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமையோ பலமோ இன்று இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் அனைத்து சக்திகளும் இன்று ஒற்றுமையாக நிற்க வேண்டும். அதனைத தான் மேற்குலகமும் விரும்புகின்றது.

மேற்குலகும் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியற் தீர்வைக் கொடுக்கக் கோருகின்றது. கடந்த ஐநா பேரவையிலே பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐநா சபையிலே வாக்களிக்கக் கூடிய 47 நாடுகளில் 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 07 நாடுகளே வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் கொமினிசம் என்ற போர்வையிலே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளே. ஆனால் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலே ஜனநாயகம் இருக்கின்றது. அங்கு மொழி, இன ரீதியில் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியா நடுநிலை வகித்துள்ளது. அதற்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், இந்தமுறை வளைகுடா நாடுகள் கூட நடுநிலை வகித்துள்ளன. இந்தியா நடுநிலை வகித்தமைக்கு அரசியற் காரணங்கள் பல இருந்தாலும் இந்தியா உறுதிபட ஒரு விடயத்தைக் கூறியிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாண ஆட்சி எங்களது கையில் இருக்குமானால் இந்த மாதிரியான நில அபகரிப்புகள், எல்லைப்புற குடியேற்றங்கள், இல்மனைட போன்ற எமது வளங்கள் சுரண்டப்படுகின்ற விடயங்களுக்கு நாங்களே முடிவு கட்ட முடியும்.

எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு உள்ளகச் சுயநிர்ணய முறைமை உருவாகுமாக இருந்தால் இத்தகு பிரச்சனைகள் இடம்பெறாது. தற்போது 24 வீதமாக இருக்கும் சிங்கள மக்களது சனத்தொகை மதிப்பீடு எதிர்காலத்தில் அதனைத் தாண்டிச் செல்லாமல் இருப்பதற்கு நாங்கள் வழிமுறைகளைக் கையாள முடியும்.

எனவே அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் கவனமாக எதிர்வரும் தேர்தல்களைக் கையாள வேண்டும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் தமிழ் மக்களின் பிரச்சனைகள் சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் எமது விடயங்கள் மாறி மாறி உள்வாங்கப்பட்டு பெசுபொருளாக இருந்து என்றோ ஒருநாள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தரத் தீர்வு வர வேண்டுமாக இருந்தால் சர்வசதேச அழுத்தமே மிக முக்கியமானது. அதற்குத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிக உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” – கிளிநொச்சியில் விழிப்புணர்வு செயற்பாடு!

கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் ”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினம் இன்று (செவ்வாக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முட்கொம்பன் பாடசாலை மண்டபத்தில் விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ” முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  பல்வேறு செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை செயலமர்வில் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச் சித்திரங்கள் துண்டுப்பிரசுரங்கள் ஆக்கங்களாக வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

யாழில் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாகி கர்ப்பமான சம்பவம் – கைதான வயோதிபருக்கு விளக்கமறியல்!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று(10) உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், கோப்பாய் காவல்துறையினருக்கும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் காவல்துறையினர் வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் அவரை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார். பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மேலதிக நீதிவான், நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு குறிப்பிட்டு சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணத்தை முன்வைத்தார். விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று சந்தேக நபரை வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தனது 15 வயது மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

போதை பொருளுக்கு அடிமையான தனது மகனை தாயார் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழில் இடம்பெற்றுள்ளது.

“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை சுன்னாகம் காவல்துறையினரிடம் குறித்த தாயார் ஒப்படைத்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்ன் போதை பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என காவல்துறையினரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார் ஒப்பைடைத்துள்ளார்.

இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள சீர்த்திருத்த பாடசாலையில் குறித்த சிறுவனை சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.