16

16

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் – மூவர் கைது !

போதைப்பொருளுடன் யாழில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து போதைப்பொருளை எடுத்து வந்து விற்பனை செய்வது தெரிய வந்ததுடன், அதுதொடர்பில் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 26, 34 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.

தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இவ் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்..

குறித்த மூவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜராக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது..

“அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்கியுள்ளது.”- கரு ஜயசூரிய

“அரசாங்கம் தமிழ்மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவது இன்றியமையாததாகும்.”என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன, மத நல்லிணக்கத்துக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ‘சுபீட்சமான நாட்டுக்கான பாதை நல்லிணக்கமே’ எனும் தொனிப்பொருளில் கடந்த சனிக்கிழமை (ஒக் 15) யாழில் கலந்துரையாடல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இதுவரையில் எமது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாக 102 கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.இக்கலந்துரையாடல்களில் உள்நாட்டவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் பங்கேற்றிருந்தனர். அதனூடாக பாராளுமன்ற உபகுழுக்களை மேலும் வலுப்படுத்துமாறும், மக்கள் சபையை ஸ்தாபிக்குமாறும் பரிந்துரைத்திருந்தோம்.

அப்பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை செயற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு எம்மிடம் கோரியிருந்தது. எனவே, ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை விடுத்து, சிறந்த விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

அதேவேளை அரசாங்கம் வன்முறைகளை பிரயோகிப்பதை விடுத்து, மனித உரிமைகளையும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் உறுதிப்படுத்துவதுடன், தமிழ்மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவதும் இன்றியமையாததாகும்.

அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் சிலருடன் பேசினேன்.

தமது மூதாதையர்கள் இந்த மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், தம்மால் இந்த மண்ணை மறக்கமுடியாது என்று கூறிய அவர்கள், இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கையின் வளர்ச்சிக்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

எனவே, அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமாகும்.

அதேவேளை சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நாட்டை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

“வடக்கில் தற்போதும் சிங்கள மொழியின் பயன்பாடே காணப்படுகின்றது. ” – எம்.ஏ.சுமந்திரன்

“வடக்கு கிழக்கு நிர்வாக மொழி தமிழ் என அரசியலமைப்பில் இருந்தாலும் தற்போதும் சிங்கள மொழியின் பயன்பாடே காணப்படுகின்றது.” என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழிக் கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

இந்தியாவில் தற்போது அரச மொழிகளாக 16 மொழிக்ள உள்ளன. அதில் தமிழும் ஒன்று, மிகவும் சிறிய நாடான சிங்கப்பூரில் நான்கு அரச மொழிகள் உள்ளன. அதில் ஒன்று தமிழ்.

எனினும் எமது நாட்டில் இருப்பது இரண்டு மொழிகள். எனினும் அதில் ஒன்றை மாத்திரம் முன்னிறுத்தி அது மாத்திரமே அரச மொழி என நாம் சட்டத்தை உருவாக்கினோம். அதுவே இந்தப் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது என நான் எண்ணுகின்றேன்.

31 வருடங்கள் சென்ற பின்னர் அது சரிசெய்யப்பட்டது. 87 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இன்னும் 30 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தற்போது அது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போதும் காவல்துறை அதிகாரிகளை கேட்டுப்பாருங்கள். நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே அவர்கள் வழக்குகளை முன்வைக்கின்றனர்.

வடக்கு கிழக்கு நிர்வாக மொழி தமிழ் என அரசியலமைப்பில் இருந்தாலும் தற்போதும் சிங்கள மொழியின் பயன்பாடே காணப்படுகின்றது. எழுத்து வடிவில் ஒன்று காணப்படுகின்றது. நடைமுறைப்படுத்தப்படுவது வேறு ஒன்றாக உள்ளது” என்றார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி – பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இன்னமும் உரிமையற்றோராய் !

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்கு எதிராக இன்று (16) ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமைகளாகவும் – சிறுபான்மை இனத்தவராகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.” – ஐ.நாவுக்கு கடிதம் !

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள். ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐநா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் என கொழும்பு ஐநா அலுவலக வளாகத்தில் இருந்து செயற்படும், ஐநா மனித உரிமையாளரின் பிரதிநிதி, சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் ஜுஹன் பெர்னாண்டசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் கோரியுள்ளார்.

மனோ கணேசன் எம்பியின் மின்னஞ்சலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நவீன அடிமைத்தனங்கள், அதன் மூல காரணங்கள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகிய விவகாரங்களுக்கான, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடா ஐநா மனித உரிமை ஆணைகுழுவின் கடைசி கூட்டத்துக்கு சமர்பித்த அறிக்கையின்படி பின்வரும் பாரதூரமான நிலைமைகள் பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மனிதர் வாழ தகைமையற்ற வாழ்விடங்கள், அரைகுறை சுகாதார நிலைமைகள், போஷாக்கின்மை, வறுமை, பெண்கள் மீதான அதீத சுமை, சிறுவர் தொழிலாளர், வேலைத்தள விபத்துகளுக்கு முறையான நஷ்ட ஈடின்மை, முறையற்ற வேலை நிலைமைமைகள், அதிக நேர வேலை குறை வேதனம், நவீன அடிமைத்தன வடிவங்கள், அதி சுரண்டல் பாரபட்சம், உடல்ரீதியான, பேச்சுரீதியான பாலியல்ரீதியான துன்புறுத்தல், வீட்டு வேலை, பாலியல் வேலை, கொத்தடிமை வேலை, தனியார் நிறுவன தோட்டங்களில், அரச நிறுவன தோட்டங்களில், சிறு உடைமையாளர் தோட்டங்களில் நியாயமற்ற நாட்கூலி முறைமை, தரமான கல்வி பெற வாய்ப்பின்மை, மொழி பிரச்சினை, அதிக தொகை பாடசாலை விடுகை, உள்ளூர் தேசிய தொழில் சட்ட கண்காணிப்பு இன்மை, துணைக்கு வரும் சிவில் அமைப்புகள் மீதான கண்காணிப்பு தொல்லை.

பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம். ஆகவே பெருந்தோட்ட சமூகத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு அவர்கள் சிறுபான்மை தமிழராக இருப்பதும் ஒரு காரணமாகும். அடுத்தது அவர்கள் மீதான நவீன கூலித்தொழில் அடிமைத்தனமாகும்.

இந்நிலையில் அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரசு தரப்பு, தோட்ட நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் பெருந்தோட்ட துறையில் நிகழும் நவீன கூலியடிமை, இன அடிமைத்தனம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடும்படி கோருகிறேன்.

யாழ்.நகரில் ஆயிரம் போதை மாத்திரைகள், ஹெரோயின் போதைப்பொருளுடன் போதை வியாபரிகள் கைது !

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதை வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புடவைக்கடைகளில் வேலை செய்தவாறு போதைப்பொருள் விற்பனை - நால்வர் கைது - Global  Tamil News

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலை செய்து கொண்டு , போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என காவல்துறையினா் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர்.

மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள் !

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நிஷ்டர் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், நிஷ்டர் மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது மருத்துவமனையில் பிணங்கள் இருக்கும் தகவலை ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நிஷ்டர் மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க குஜ்ஜார் உத்தரவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது பிணவறையில் 200 க்கும் அதிகமான உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து குஜ்ஜார் கூறும்போது,

“ முதலில் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையின் கதவை திறக்கமாட்டேன் என்றனர். நான் போலீஸுக்கு இதுகுறித்து புகார் அளிப்பேன் என்றவுடன் கதவை திறந்தார்கள். கல்லூரி முதல்வரை இதுகுறித்து கேட்டபோது மருத்துவ மாணவர்களின் கல்வி ரீதியான தேவைக்காக இந்த உடல்கள் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் பிணங்கள் அதிகளவில் சிதைவடைந்து இருந்தன. 50 ஆண்டுக்கால பாகிஸ்தான் வரலாற்றில் நான் இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது. அரசு மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 200 க்கும் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை திட்டமிட்டு தூண்டும் ஜனாதிபதி ரணில் !

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை காட்டி அதனூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவர் முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்தோம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை மாகாண சபை தேர்தலை போன்று உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

“எங்களை திருடர்கள் என்றனர். ஆனால் அது போலிக்குற்றச்சாட்டு.”- நாமல் ராஜபக்‌ஷ

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் இன்று (16) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே சிஸ்டம் சேஞ்க்காக போராடினார்கள். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர். இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

அன்று எம்மை திருடன் என்றனர். எமக்கு எதிராகப் போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம். இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரசாரத்தை அவர்கள் கைவிடவில்லை எனவும் கூறினார்.

ராஜபக்‌ஷவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள், கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் உண்மை இல்லை – முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.