18

18

கல்லெறிந்து கொல்ல தலிபான்கள் திட்டமிட்டதால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 கோடி பெண்களில் 80 சதவீதத்தினர் ஊடகங்களில் பணியாற்றியவர்கள்.

இந்நிலையில், காபூல் நகரில் வசித்த ஒரு இளம்பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இருவரும் மாகாணம், மாகாணமாக தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். கடந்த 13ம் திகதி அந்த இளைஞரைப் பிடித்த தலிபான் -பயங்கரவாதிகள் அவரை துாக்கிலிட்டு கொலை செய்தனர்.

இளம்பெண்ணை பிடித்து, பொது இடத்தில்கல்லால் எறிந்து கொல்லவும் திட்டமிட்டனர். இதை அறிந்த அந்தப் பெண், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மந்த போசணை காரணமாக பாடசாலை செல்ல மறுக்கும் மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர்கள் !

“நாட்டில் 41 இலட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம் அது பாேதுமானதாக இல்லை. அதனால் இதனை 21 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.” என  கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது  மயந்த திசாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களின் மந்த போசனம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் மாவட்டச் செயலாளர்களுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். குறிப்பாக மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வாறான அதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர்.

குறிப்பாக மந்தபாேசனம் காரணமாக மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

அந்த நிலைமையை நிவர்த்திப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு கல்வி இராஜாங்க அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசேட வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் நாட்டில் 41 இலட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம் அது பாேதுமானதாக இல்லை. அதனால் இதனை 21 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்காக உலக உணவு திட்டம், யுனிசெப் அமைப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே மாணவர்களின் போசணையை  இந்த வருட இறுதிக்குள் 50 வீதம் வரை  அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

வலி.வடக்கில் 13 ஏக்கர் அரச காணியை கையளித்து 1617 ஏக்கர் காணியினை சுவீகரிக்க காணி அமைச்சு நடவடிக்கை !

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த 13 ஏக்கர் காணி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றன. அவற்றினை விடுவிக்க பலாலி இராணுவ தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு சபை தான் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை , யாழ்.மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து , 872 ஏக்கர் காணி பல கட்டங்களில் விடுக்கப்பட்டுள்ளது எனவும் , இன்னமும் 3ஆயிரத்து 27 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது என மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார்.

இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள 3ஆயிரத்து 27 ஏக்கர் காணியில், 1617 ஏக்கர் காணியினை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதற்கு காணி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை – அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் முன்வைத்த கோரிக்கை !

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக நேற்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகளை நீதிமன்றத்துக்கு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு மையம் ஒன்றை வட பகுதியில் உருவாக்குதல் போன்றவற்றின் அவசியம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், குறித்த கருத்தை ஏனைய அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில், பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போணோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணி தொடர்பான பிணக்குகள் உட்பட வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் அடையாளப்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பரிகாரம் வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு விரைவில் புனர்வாழ்வு நிலையம் – யாழ்ப்பாண மாநகர முதல்வர்

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலா ன போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

அண்மையில் வெளிவரும் பத்திரிகை செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளை அண்மை காலங்களில் பத்திரைகளில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றார்கள் என்கின்ற அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அதாவது போதை பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக பாதிக்கப்படுபவராக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
இந்த பாடசாலை மாணவ மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதைப் பொருள் விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்கால சந்ததி என கருதப்படுகின்ற எங்களுடைய இளைஞர்கள் யுவதிகளை நோக்கி போதை பொருள் வர்த்தகம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. அதற்குள்ளே அறிந்தும் அறியாமலும் அதனுடைய எதிர்கால விளைவுகளை பற்றி தெரியாது எமது இளைஞர்யுவதிகள் இந்த போதைப் பொருளுக்குள்ளே அடிமையாகி கொண்டிருக்கின்றமை இந்த மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள் சமூகமட்ட பிரதிநிதிகள் அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் இந்த போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ் மாநகர முதல்வர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றிணைத்து விரைவில் அந்த செயற்பாட்டினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்.

பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிசார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு இந்த போதைப் பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்.

அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை யாழ் நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர் வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.

எனவே வடக்கில் யாழ் நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் அதற்குரிய முயற்சியை எடுத்து வருகின்றேன் அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் தெரிவித்தார்

The Booker Prize – 2022 – இலங்கையின் அநீதிகளை இலக்கியமாக பேசிய செஹான் கருணாதிலக்கவுக்கு !

இலங்கையின் எழுத்தாளர் செஹான் கருணாதிலக்கவுக்கு ‘The Seven Moons of Maali Almeida’ என்ற அவரது நாவலுக்காக 2022 க்கான புக்கர் விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த பல அநீதிகளை ஆவணப்படுத்தும் இலக்கியமாக இது விளங்குகின்றது.

2019 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரித்தானிய ராணி கமிலாவிடமிருந்து விருதை பெற்றுள்ளார்.

இந்நிலையில், புக்கர் விருதை பெற்ற இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை செஹான் கருணாதிலக்க பெற்றுள்ளார்

இதற்கு முன்னர், 1992 ஆம் ஆண்டில்  ‘தி இங்கிலீஷ் பேஷண்ட்’  நாவலுக்காக மைக்கேல் ஒண்டாட்ஜே புக்கர் விருதை வென்றுள்ளார்.

‘ இலங்கை சொந்தங்களே எங்கள் கதைகளை கூறுவோம் ..கூறிக்கொண்டே இருப்போம்….” நிகழ்வின் இறுதியில் ஷெகான் தமிழில் கூறிய வார்த்தைகளே இவை…அவர் மும்மொழியிலும் உரையாற்றி இலங்கை மண்ணின் மைந்தன் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியது மட்டுமில்லாது படைப்பாளிகள் மதம், இனம், மொழிகளை கடந்த அனைவருக்கும் பொதுவானவர்கள் என்பதை உணர்த்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செஹான் கருணாதிலக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவிக்கும் காதலனால் சிறுமி பாலியல் வன்புணர்வு – யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை !

யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோய்ன் போதை பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவரால் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் 22 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட மாணவி 15 வயதுடையவர் எனவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரான இளைஞன் தலைமறைவாகி உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி, சந்தேக நபரான இளைஞனை காதலித்து வந்தார் எனவும், ஹெரோய்ன் போதை பொருளுக்கு அடிமையான பின்னர் குறித்த இளைஞனுடனான தொடர்புகளை துண்டித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மாலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் வகுப்பு முடிவடைந்து வீடு திரும்பிய வேளையில் சந்தேக நபர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார். அவரை தூக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டு, பின்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது சகோதரியும் சென்றுள்ளனர்.

இதன்போது ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தேக நபர் இழுத்து சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி, ஊரவர்களையும் உறவினர்களையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கி இருந்தால் இன்று இந்த பிரச்சினைகளே ஏற்பட்டிருக்காது.”- ஐக்கிய தேசிய கட்சி

“திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கி இருந்தால், நாடு இன்று எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.” என ஐக்கிய தேசிய கட்சி அநுராதபுர தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சஞ்ஜீவ செனவிரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் 2048ஆம் ஆண்டை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாகவே கடந்த வாரம் ஜனாதிபதி திருகோணமலை மாவட்டத்துக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுததிருக்கின்றார்.

ஏனெனில் உலக உணவு பாதுகாப்பு திட்டத்தில் உலகில் எமது நாடு 79 ஆவது இடத்திலேயே இருக்கின்றது. விவசாயத்துக்கு தேவையான சகல வசதிகளும் இருக்கும் நிலையில் எமது நாடு இந்தளவு பின்தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

2048 ஆகும் போது உகல சனத்தை தொகைக்கு அதிகரிப்புக்கு தேவையான உணவு போதாமல் போகும் அபாயம் இருக்கின்றது. அதனாலே தற்போதில் இருந்து உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டின் வளங்களை வெளிநாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

2003 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ள இடமளிக்க வில்லை.

நாங்கள் ஒப்பந்தம் செய்தவாறு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கி இருந்தால், நாடு இன்று எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

அரசியல்வாதிகளின் எதிர்ப்பு அரசியல் கலாசாரம் காரணமாகவே எமது நாடு இன்னும் அபிவிருத்தி அடைய முடியாமல் இருக்கின்றது.

அதேபோன்று  1987இல் கல்வி மறுசீரமைப்பு மேற்காெண்டு இலவச கல்வியை மேற்கொள்ளும்போது அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பிள்ளைகள் இன்று இலவச கல்வியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும்பொருளாதாரம் மற்றும் கல்வியில் குறிப்பிட்டதொரு காலத்துக்கு மாறுபடாத தேசிய கொள்கை ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் வேலையில்லா பிரச்சினை – தொழில் தேடும் 19000 இளைஞர்கள் !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க,மகேசன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சனையானது தேசிய மட்ட வேலையில் பிரச்சினைகளை பார்க்க அதிக உயர்வாக காணப்படுகின்றது, 21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலையற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் தேசிய மட்டத்தில் 4.5 வீதமாக காணப்பட்டது. எனினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்,

அரசாங்க குழுவிலிருந்து சாணக்கியன் விலகல் – சிவஞானம் சிறிதரன் இணைவு !

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானதும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.

இதனையடுத்து, அவரது வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.