26

26

இலங்கையில் 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் !

கடந்த ஆண்டு (2021) 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் பதிவாகியுள்ளன.  எனவே இதனைக் கருத்திற் கொண்டு குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையில் திருத்தத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு :

உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் சட்டம், நடவடிக்கை முறை மற்றும் பிரயோகங்கள் தொடர்பாகப் பொருத்தமான திருத்தங்களை அடையாளங்கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்காக குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

‘சாம்பலில் இருந்து எழுவோம்’ – மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டம் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் ஏற்பாட்டில் நாளை (வியாழக்கிழமை) புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதலாவது கட்சி கூட்டம் கடந்த 8 ஆம் திகதி ‘களுத்துறையில் இருந்து மீண்டும் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் கடந்த 16ஆம் திகதி நாவலபிட்டி நகரில் இடம்பெற்றது. நாவலபிட்டி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டோராவில் கூறப்பட்ட வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டு வாருங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

மோசடி தொடர்பாக பண்டோராவில் வெளியான தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டுவருவதன் மூலம் டொலர் தட்டுப்பாட்டை சரி செய்யலாம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் மூலம் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடும், டொலர் நெருக்கடியும் தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கடன் வாங்குவது பிரச்னைக்கு தீர்வாகாது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வளங்களும் அரச சொத்துக்களும் மீட்கப்பட வேண்டும் என்றாலும் தற்போதைய அரசாங்கம் அதற்காக செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

“நீதித்துறையை நாடாளுமன்றத்தில் விமர்சிக்கக் கூடாது.”- சுமந்திரன் கருத்து தொடர்பில் நீதியமைச்சர் விசனம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருபத்தி இரண்டாவது சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும், நீதிமன்றம் அவ்வப்போது தனது சட்ட நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும் பிரேரணையின்றி, நீதித்துறையையோ அல்லது நீதிபதிகளையோ நாடாளுமன்றத்தில் விமர்சிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே சுமந்திரனின் கருத்து நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் பலத்த முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சட்டபூர்வமாகிறது கஞ்சா வளர்ப்பு .?

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி மருத்துவ மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக மாத்திரமே கஞ்சாவை வளர்க்க முடியும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அல்ல, ஏனெனில் நாங்கள் சட்ட கட்டமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட அமைச்சர்கள் தொடர்பில் தெரிந்தால் குறிப்பிடுங்கள் – மக்களிடம் நீதியமைச்சு கோரிக்கை !

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் அவ்வாறு சட்டத்தை மீறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட அமைச்சர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது தொடர்பில் மக்கள் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

“சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற தன்மையே பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம்.” – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு !

நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில்  பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய வைத்தியசாலைகளில் அஸ்ப்ரீன் மருந்துகளுக்குக்கூட  பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், பிரதேச வைத்தியசாலைகளில் சேலைன் போத்தல்களிலிருந்து பரசிட்டமோல் மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாட்டு நிலவுவதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிடுகின்றது.

ஒளடதங்கள் மற்றும் மருந்து வகைகள் தொடர்பில்  ஈடுபட்டுள்ள சகல  நிறுவனங்களையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து, அதனூடாக கலந்துரையாடல்களை முன்‍னெடுத்து தேவையான தீர்மானங்களை எடுக்குமாறு தமது சங்கம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தபோதிலும், அதனை சுகாதார அமைச்சு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

இதன் காரணமாகவே நாட்டில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவக்காரணம் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே ‍தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல் !

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு, உத்தேச பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல் சட்டமூலத்தை வரைபு செய்வதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடலொன்றை நடத்தியது.

2016-2020 இல் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான பல்துறை தேசிய செயற்திட்ட அமுலாக்கம் பற்றிய முன்னேற்ற மீளாய்வு முன்வைப்பை அடுத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில்  போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

விசேட குழுவில் கலந்துரையாடப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய வரைபை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் அனுப்புவதற்கு விசேட குழு உறுப்பினர்கள் இதன்போது இணங்கினர்.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை 2016-2020 தொடர்பான பல்துறை தேசிய செயற்திட்ட அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை விசேட குழு அங்கீகரித்ததுடன், புதிய திட்டத்தில் சூழ்நிலைசார் விடயங்களை உள்ளடக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது.

“தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை.” – வாசுதேவ நாணயக்கார காட்டம் !

“நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் , அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கருத்திற் கொள்ளாமல் , விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கம் இவ்வாறு ஏதேனுமொரு நடவடிக்கையை எடுக்குமானால் , அது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே கருதப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கருத்திற் கொள்ளாமல் , நியாயத்தின் பக்கம் உறுதியாகவுள்ளனர்.

தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் , அதனைக் காலம் தாழ்த்த இடமளிக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது ஆணைக்குழுவின் கடமையாகும்.

அதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு தற்போது முன்னெடுத்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக தற்போதைய தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கி , தமக்கேற்றாற் போல் செயற்படும் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

பக்க சார்பற்ற இவ்விரு தலைவர்களும் நியாயத்தை நிலைநாட்டியுள்ளனர். எனவே இவர்களை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் ஏதேனுமொரு நடவடிக்கையை எடுக்குமானால் , அது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை நீக்குவதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே கருதப்படும். அரசாங்கம் அதன் தேவைக்கு ஏற்றாற் போல் தீர்மானங்களை எடுப்பதற்கு இனியொரு போதும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை.

என்றுமில்லாதவாறான புதிய கூட்டணியொன்றை நாம் அமைத்திருக்கின்றோம். இந்தக் கூட்டணியின் ஊடாக அரசாங்கததுடன் எந்தவொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை தம்மிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

அவர் மக்களுக்கு சார்பான தீர்மானங்களை எடுக்காவிட்டாலும் , மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். நாட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் , அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை – பறிபோகுமா பதவி…?

இரட்டைக் குடியுரிமை தொடர்பான விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் பலத்த விவாதங்களை தோற்றுவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருடைய இரட்டை பிராஜாவுரிமை தொடர்பான விவகாரங்கள் பெம் பரபரப்பை ஏற்படுத்தியருந்தன. இந்த பின்னணியில் அண்மையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட முடியாது என வலியுறுத்துகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு , அத்தகையவர்களை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்று கூறக்கூடிய பட்டியல் எவரிடமும் இல்லை, அவர்கள் தாமாக முன்வந்து தாமே இரட்டை குடியுரிமை பிரஜைகள் என்று அறிவிக்கும் வரையில் அவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களா என்பதை அறிய அரசாங்கத்திடமோ அல்லது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ எந்த முறையும் இல்லை.

2015ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடை விதிக்கப்பட்ட போது, ​​நோர்வே மற்றும் கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்ற 10 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும், சுவிஸ் குடியுரிமை பெற்ற சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் இருந்ததாக இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் என்னிடம் கூறினார்.

இணையத்தளங்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய முயற்சித்தாலும், எந்தவொரு நாடும் தனது பிரஜைகள் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிடுவதில்லை அல்லது வழங்குவதில்லை என்றும் கம்மன்பில கூறினார்.