இளைஞர் ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையாக மாற்றி மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை மையப்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
‘குற்றஞ்சாட்டப்பட்டவர் 15 வயதுடைய நபராக இருந்த நிலையில், அவரை குற்றவாளியாக நீதிமன்றம் கண்டுள்ளது. எனினும் 18 வயதுக்கு கீழ் பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்துவது தண்டனை சட்டக் கோவையின் 53வது பிரிவின் விதிகளை மீறுவதாகும். எனவே குற்றவாளிக்கு மேல் நீதிமன்றால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை வலுவிழக்கச் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஆகவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.’ என நீதிபதிகள் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் விக்கட்டினால் தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி உயர்நீதிமன்றத்தில் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். அதன்படி வழக்கு விசாரணைகளின் பின்னர் கொலை குற்றவாளியாக பிரதிவாதியைக் கண்ட மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு எதிராக குற்றவாளி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
குற்றம் சாட்டப்படும் போது குற்றவாளிக்கு 15 வயது மட்டுமே ஆனதாக வாதிட்ட அவர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 53வது பிரிவு 2021 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி தர்ஷன குருப்பு, குற்றவியல் சட்டத்தின் புதிய பிரிவு 53 இன் படி, குற்றம் இடம்பெறும் போது 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபருக்கும், அக்குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என குறிப்பிட்டார்.
அத்தகைய நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, சிறைக் காவலில் வைக்கும் விதமாக தண்டனையளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அந்த வாதத்தை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்துசெய்ததுடன், 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையளித்து தீர்ப்பளித்தது.