28

28

“நீங்கள் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் பின்னோக்கி தள்ளப்படுகின்றோம்.”- ஹோட்டல் தொழில்துறையினர் கவலை !

மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்  இடம்பெற்றால்  அது எங்களை பாதிக்கும் என இலங்கையின் ஹோட்டல் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்கள்  மீண்டும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள ஹோட்டல் தொழில்துறையினர்  உலகநாடுகளின் சுற்றுலாப்பயணிகள் மீண்டும் இலங்கை வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

அரசியல் சமூகத்தினர் தங்கள் நாடகங்களை நிறுத்திவிட்டு நாட்டின் மக்களின் சிறந்த நலன்கள் குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் இதுஎன ஸ்ரீலங்கா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றால் அது சிறந்த விடயம் ஆனால் வன்முறைகள் இடம்பெற்றால் மக்களினதும் வர்த்தகங்களினதும் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  ஸ்ரீலங்கா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது

எங்கள் தொழில்துறை நெருக்கடியிலிருந்து மீண்டும் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் பின்னோக்கி தள்ளப்படுகின்றோம் இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள்  சிந்திக்கவேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது

எலான் மஸ்க் வசமானது டுவிட்டர் நிறுவனம் – அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட டுவிட்டரின் உயர் அதிகாரிகள் !

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டுவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டுவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் திகதி அறிவித்தார்.

பின்னர், டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்று எலான் மஸ்க் கூறினார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார்.

ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கோவை குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்களுக்கும் – இலங்கை ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு !

தமிழ்நாடு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் திகதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகளுடன் கோயம்புத்தூர் கார்க்குண்டு வெடிப்பு சந்தேகநபர்களுக்கு தொடர்பு

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கும் கோவை கார்க்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

கோவை கார்க்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பெரோஸ்  இஸ்மாயில் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முகமது அசாருதீன் என்பவரை கேரள சிறையில் சந்தித்து உரையாடியுள்ளமை தொடர்பில்  வாக்குமூலம் அளித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கேரளாவின் வியூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள சர்வதேச  குற்றவாளியான முகமது அசாரூதீன் மற்றும் ரஷீத் அலியை தற்போது  கோவை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ்  சந்தித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில்  முகமது அசாருதீன்  2019 ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதால்,  சந்திப்பின் நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ISIS அமைப்புடன் நேரடி தொடர்புகளைப் பேணிய அசாரூதீன் என்பவருடனும் விபத்தில் பலியான ஜமீஷா முபின் தொடர்புகளை பேணியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கேரளாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஜ்மத் அலி என்பவரை முபின் 2020 ஆம் ஆண்டு சந்தித்துள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை,  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய குழுவின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் ஹாஷிமிற்கும் கார்க்குண்டு வெடிப்பில் உயிரிழந்த முபினுக்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையினரை மேற்​கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பேஸ்புக் வாயிலாக இவர்கள் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக  இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் 11 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவருடன், தற்போது கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் தொடர்புகளை பேணியுள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 46 பேர் உயிரிழந்தனர்.

’13 ஆவது திருத்தச் சட்டத்தினை வலியுறுத்த ஒன்றிணையுங்கள்.”- தமிழ் தரப்புக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு !

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய நலன்களையும், தேர்தல் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,

அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.தெள்ளிப்பளையில் மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை செய்து திருட்டு !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூதாட்டி தனிமையில் வசித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து அச்சுறுத்தி , கழுத்தில் இருந்த ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் விரலில் அணிந்திருந்த அரை பவுண் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த பிக்குமாரால் பௌத்த மதத்துக்கும் பாதிப்பு என்கிறார் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க !

குறைந்த வயதில் சிறுவர்களை துறவறம் புகச் செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழு பௌத்த குருமாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் ஊடாக சம்பந்தப்பட்ட பீடங்களின் தலைமை பிக்குமாருக்குத் தெரியப்படுத்துவதற்கும், பொதுவான சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு முன்மொழிவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தலைமை பிக்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை கையாள்வதற்காக தனியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்கள் கொண்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலாயத்தன பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தேவையான 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு இன்மை காரணமாக இதுவரை செயன்முறைப் பரீட்சை நடத்தப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஒதுக்கீடு இன்மை காரணமாக பரீட்சைகள் 6 வருடகாலம் பிற்போடப்பட்டமை தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர், இதனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சூரியப்படல கட்டமைப்பைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

சொத்துக்களைக் கொண்டுள்ள பௌத்த வழிபாட்டுஸ்தலங்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டது. பௌத்தத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இதன்படி அடுத்த கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படுவதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குழுவின் உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரோ, குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா செல்ல விமான நிலையம் சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் !

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று (27) கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுநாயக்காவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதே அவரது திட்டமாக இருந்தது.

எனினும், அவர் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விமானங்கள் செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அவரை திருப்பி அனுப்ப குடிவரவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் 270 நாட்களுக்குள் 1,500 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – பாதுகாப்பில்லாத நிலையில் இலங்கை சிறுவர்கள் !

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது பாரிய அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை, ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற நிலையில் இந்த பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 273 வன்புணர்வுகள் இளம் வயதினருடன் தொடர்புடையவையாகும்.

இதேவேளை ஒப்புதலுடன் இடம்பெற்ற பாலியல் செயற்பாடுகள் பெரும்பாலானவை காதல் விவகாரங்களுடன் தொடர்புடையவை. எனினும் பாதிக்கப்பட்ட பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் இது பாலியல் வன்புணர்வுகளாகவே கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 363ஆவது பிரிவின்படி, 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது சட்டப்பூர்வ பாலியல் வன்புணர்வுக்கு சமமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட மூவர் கைது !

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (வியாழக்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர