29

29

பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்பமண்டல புயல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு !

கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துள்ளது.

மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுக்குப் பிறகு அடர்ந்த சேற்றில் இருந்து பல உடல்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.

மிண்டனாவ் தீவில் உள்ள மகுயின்டானாவ் மாகாணத்தில், ‘நல்கே’ புயல் மிகவும் அழிவை ஏற்படுத்தியது. கோடாபாடோ நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெப்பமண்டல புயல், மணிக்கு அதிகபட்சமாக 95கிமீ (59 மைல்) வேகத்தில் காற்று வீசுவதுடன், மணிக்கு 160கிமீ (99.4 மைல்) வேகத்தில் காற்று வீசியது, இது சனிக்கிழமை அதிகாலை கிழக்கு கேடன்டுவான்ஸ் மாகாணத்தில் கரையை கடந்தது.

தினமும் பலர் படகில் பயணம் செய்யும் தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில் படகு சேவையை கடலோர காவல்படை நிறுத்தியுள்ளது. கடலோர காவல்படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, இந்த வார இறுதியில் புயல் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக சில பாடசாலைகள் மூடப்படவும், பேருந்துகள் இயக்கப்படவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பொதுவாக ஆண்டுக்கு 20 சூறாவளி அல்லது வெப்பமண்டல புயல்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சட்ட விரோத மதுபான உற்பத்தி 300 சதவீதத்தினால் அதிகரிப்பு !

“சட்டத்துக்கு முரணான மதுபான தொழிற்துறை 300 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கை மதுவரி திணைக்களத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்ட விரோதமானது மற்றும் சட்ட ரீதியானது என்ற இரு வகை மதுபானங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்படுகிறது.  உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைக்கு அமைய 2004 தொடக்கம் 2016 வரை மதுபான தொழிற்துறையில் 95 சதவீதம் வளர்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  எனினும், இதில் 50 சதவீதம் மாத்திரமே சட்ட ரீதியானதாகும். சட்டத்துக்கு முரணான மதுபான தொழிற்துறை 300 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.  இது தொடர்பில் தீர்க்கமாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நாகரிகமான தொழிற்துறைகளில் கூட இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிராம புறங்களில் நீண்ட இடைவெளியில் மதுபானசாலைகள் காணப்படுகின்றமை, அப்பகுதிகளில் சட்ட விரோத மதுபான தயாரிப்பு மற்றும் பாவனைக்கு ஏதுவான காரணியாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மதுவரி திணைக்கள ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல. சட்ட விரோத மதுபான தயாரிப்பு மற்றும் பாவனையைக் கட்டுப்படுத்தலாகும் என்றார்.

மேல் மாகாணத்தில் மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – நடவடிக்கை எடுக்க களமிறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து “விழிப்புணர்வு குழுக்களை” அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (28) கம்பஹா மாவட்டக் குழுவில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழுவொன்று உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் New;W (28) கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் அண்மையில் பெய்த மழையினால் கம்பஹா மாவட்டத்தில் பெருமளவிலான தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ சத்யானந்தவுக்கு அறிவுரை வழங்கினார்.

வெள்ளத்தால் தடைப்படும் கால்வாய்களை சுத்தப்படுத்த குறுகிய கால வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், பல கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்கான குறுகிய கால வேலைத்திட்டங்களின் கீழ் மாவட்ட செயலாளரிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் ஜாரு கால்வாய், களுகொடுவ கால்வாய், குந்தி கால்வாய், களுகொல ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ள கால்வாய் மற்றும் பல்லேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனைத்து பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் கல்விக் குழுக்களை விரைவில் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களான சஹான் பிரதீப் விதான, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு – விசாரணைகளை ஆரம்பித்தது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு !

மாத்தறை – திஹாகொடவில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப காவல்துறை பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த அதிகாரியை நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தன்மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், திஹகொட காவல்நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, அந்த ஆணைக்குழுவின் மாத்தறை மாவட்ட அலுவலகத்தின் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு இன்றைய தினம் செல்லவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதி 10 இலட்சம் ரூபா.?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதித் தொகையை 10 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அவைக் குழுவில் விவாதிக்கப்பட்ட போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்ட மருத்துவக் காப்புறுதி இரண்டு இலட்சம் ரூபாயாகும்.

பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைத்து மருத்துவ சேவைகளும் அதிகரித்துள்ள நிலையில் காப்புறுதித் தொகை போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகக்கிண்ண ரி20 தொடர் – டிரெண்ட் போல்ட் வேகத்தில் வீழ்ந்தது இலங்கை !

உலகக்கிண்ண ரி20 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Glenn Phillips reaches out and swats a wide ball to sweeper cover, New Zealand vs Sri Lanka, Men's T20 World Cup, Group 1, Sydney, October 29, 2022அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் கிளென் பிலிப்ஸ் 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித்த 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் தசுன் சானக 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்.”- சஜித் பிரேமதாச

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். சாத்தியமில்லை எனவும் கதை கட்டினர். அது தவறு, எமது ஆட்சியில் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்கள் உருவாக்கப்படுவார்கள். ஏற்றுமதி துறையில் புரட்சி இடம்பெறும். தேயிலை பயிரிடக்கூடிய இடங்களை திரிசு நிலங்களாக வைப்பதில் பயன் கிட்டாது.

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் என நான் கூறியபோது, எனக்கு எதிராக மொட்டு கட்சியினர் சேறுபூசினர். ஏளனம் செய்தனர் இவர்கள்தான் உரத்துக்கு தடை விதித்து, பெருந்தோட்டத்துறைக்கு பெரும் தீங்கு விளைவித்தனர். பெருந்தோட்ட மக்களை இருளுக்குள் தள்ளிய இவர்கள்தான், இனவாதத்தை கையில் எடுத்தனர். பெருந்தோட்ட மக்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களையுமே இவர்கள் குழிக்குள் தள்ளினர்.

இவ்வாறு நாட்டு மக்களை துன்பத்துக்குள் தள்ளிவிட்டு, சாம்பல் மேட்டியில் இருந்து மீண்டெழுவோம் என தற்போது சூளுரைத்து வருகின்றனர். நாட்டை சாம்பலாக்கிவிட்டுதான் அவர்கள் மீண்டெழ பார்க்கின்றனர். அவர்களின் மீள் எழுச்சி மக்களின் கைகளில்தான் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

நாட்டு வளங்களை சூறையாடிய, நாட்டை வங்குரோத்து அடைய செய்து, தமது குடும்பத்தை செல்வந்தர்களாக்கியவர்களுக்கு மீண்டெழும் வாய்ப்பை மக்கள் வழங்குவார்களா?

நாட்டில் தற்போது உள்ள அரசாங்கமும் வங்குரோத்து அரசாங்கம்தான். அதனால்தான் மக்கள்மீது வரிசுமை திணிக்கப்படுகின்றது. எமது நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எமது ஆட்சியில் மீளப்பெறப்படும். களவாடப்பட்ட சொத்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

15 வயது சிறுமியை திருமணம் செய்த பிரான்ஸ் இளைஞன் – யாழில் சம்பவம் !

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸில் வசிக்கும் கல்விங்காட்டை சோ்ந்த 20 வயதான இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னா் யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.

பின்னா் அச்சுவேலி பகுதியை சோ்ந்த 15 வயதான சிறுமியுடன் காதல் உருவான நிலையில் சிறுமியை திருமணம் முடித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் அச்சுவேலி பொலிஸாரால், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு குறித்த முறைப்பாடு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ரணில் அரசாங்கம் கவிழும் அபாயம் – எச்சரிக்கிறார் பேராசிரியர் சன்ன ஜயசுமண !

எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார்.

22 திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிலையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கத்தைக் கலைக்க வற்புறுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் ஒரு சிறிய பகுதியானாலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினால், வரவு செலவுத் திட்டம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் 12 வெளிநாட்டவருக்கு எதிராக சிவப்பு பிடியாணை !

வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார்.