30

30

ஹெலோவீன் கொண்டாட்டத்தில் 153 பேர் வரை உயிரிழப்பு – இலங்கையர் ஒருவரும் அடக்கம் !

தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹெலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள்.

கொரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர். இந்த சன நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது  ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பேராதனை பல்கலைகழகத்தில் பகிடிவதையால் பறிபோன மாணவனின் உயிர் – குற்றவாளிக்கு மரணதண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் !

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் அந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்தார்.

சாட்சியங்களின்ப பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களும், பகிடிவதையில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களும் பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் என தெரியவந்திருந்தது.

அரச தரப்பின் முதல் சாட்சி, இறந்தவரைப் பார்த்தபோது அவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார் என்று தெரியவந்ததுடன், (எழும்பு – இரு) என்ற உடற்பயிற்சியில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் பொறியியல் பீடத்தில் இருந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இருப்பிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டே பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இரண்டு புகைப்படங்களை, கொண்டு அவர்களை சிகிச்சைப் பெற்று வந்தபோது வரப்பிரகாஷ் அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனையின் போது அவர் தசைக் காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார்.

அதிக உடல் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே இறந்தவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றமும் கொலையைச் செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தனது நடவடிக்கையைப் பற்றித் தேவையான அறிவைப் பெற்றிருந்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.

பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் இந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக இருந்தபோதும், வழக்கின் ஆரம்பம் முதல் நீதிமன்றத்தில் அவர், முன்னிலையாகாத நிலையில், இந்தக் குற்றத்தைச் செய்ததாக எட்டு மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணை முடிவடைந்ததையடுத்து, கண்டி நீதவான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவரை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பாரப்படுத்தினார்.

பின்னர், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களில் ஒருவர் சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் பிரதான குற்றவாளியான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் உட்பட்ட இரண்டாவது குற்றவாளிகள் கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதில் இரண்டாவது குற்றவாளி விசாரணையின் பின்னர் 2014இல் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து முக்கிய குற்றவாளி, நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அதனை ஆட்சேபித்து அவர், சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீது விசாரணையை மேற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றமே, முக்கிய குற்றவாளிக்கான கண்டி நீதிமன்றின் முன்னைய தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.

பிச்சைக்காரனும் மேடை அமைத்து அதில் ஏற முடியும் – மகிந்த தொடர்பில் மைத்திரிபால !

தெருவில் பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து அதில் ஏற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாம்பலில் இருந்து எழுவோம் எனும் அரசியல் கூட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி பரந்துபட்ட கூட்டணியுடன் போட்டியிடும். மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளும்கட்சியின் பேச்சுக்கு உட்பட்டு செயற்படுகின்றார்.

இந்த அரசாங்கத்தினாலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் போராளிகளின் தகவல்களை திரட்டும் நீதி அமைச்சு – அச்சமான சூழல் மீண்டும் உருவாக்கப்படுகிறது என்கிறார் மா.சத்திவேல் !

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன. என்ன நோக்கத்திற்காக இத் தகவல்கள் திரட்டப்படுகின்றன? என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர்.

இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும். அத்தோடு வட-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்கு தெளிவூட்டல் பெற்றுக் கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனில் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.

அண்மையில் கொழும்பில் வெள்ளத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிசார் தகவல் திரட்டுவதாகவும் அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்  மனோ கணேசன் பகிரங்கமாக கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாக கூறியிருந்தார்.

இது இவ்வாறு இருக்க தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுவதாக கூறப்படுகின்றது.

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும். இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயக செயற்பாட்டை மட்டுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.  இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச்சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும்   மக்களின் எதிர்ப்பும் சட்ட சிக்கலும் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது. அச்சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?

தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசிற்கு எதிரான வீதி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரைவிடுவிக்குமாறும், பயங்கரவாத சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாத சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?

இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான ரீதியிலான  மாற்று அரசியல் செயற்பாட்டையும்  அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தை கூட பாதிக்கும்.

அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாக படையினரும் புலனாய்வு பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களை கண்காணிப்பில்  வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களை திறந்த வெளி புனர் வாழ்வு கிராமங்களாகவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் அரையிறுதிக்கு செல்வோம் – தசுன் ஷானக நம்பிக்கை !

ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நியூசிலாந்திடம் தோற்றாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு வருவதாக நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பீல்டின் பலவீனம் தீர்க்கமான காரணியாக அமைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கை எம்.பிக்கள் – புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணை !

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு வலிகாம மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க பிரதித்தூதுவர் வாக்குறுதி !

வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க பிரதித்தூதுவர் டொக் ஸொனெக், அங்கு வடக்கு வலிகாமம் மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

அதுமாத்திரமன்றி அப்பகுதி மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அவர்களை மீள்குடியேற்றுவதற்கு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதித் தூதுவராக கடந்த ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட டொக் ஸொனெக், வட மாகாணத்துக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த திங்கட்கிழமை மேற்கொண்டிருக்கின்றார்.

இவ்விஜயத்தின்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்கிறார்.

அதன் ஓரங்கமாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் வடக்கு வலிகாமம் மீள்குடியேற்றக் குழுவினரை சந்தித்த டொக் ஸொனெக், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்திருக்கிறார்.

அதன்படி தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்ற 6,360 ஏக்கர் காணியிலிருந்து 3000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியுள்ள 3,360 ஏக்கர் காணியையும் எவ்வாறு விடுவிக்க முடியும்?

அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அமெரிக்க பிரதித்தூதுவரிடம் விளக்கமளித்திருக்கும் வடக்கு வலிகாமம் மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகள், அவ்வாறு விடுவிக்கப்பட வேண்டிய காணியில் விமான நிலையம் தவிர்ந்த எஞ்சிய காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக நில அளவை செய்வது பற்றி அண்மையில் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்,

எமது மக்கள் 32 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். சொந்த இடத்துக்கு மீளத் திரும்புவோம் என எதிர்பார்த்திருந்த வேளையில் இத்தகைய கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பது எமது மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது நலன்புரி நிலையங்களிலும், உறவினர்களின் இல்லங்களிலும் வாழ்பவர்கள், அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும். இருப்பினும், தற்போது அவ்வாறு இடம்பெயர்ந்து வாழும் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயத்தில் ஈடுபடுகின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்த அமெரிக்க பிரதித்தூதுவர் டொக் ஸொனெக், தான் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரேயே கொழும்புக்கு வருகைதந்ததாகவும், இப்போதுதான் வெளிமாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி, இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக கேட்டறிந்திருக்கும் நிலையில், இம்மக்களை மீள்குடியேற்றுவதற்கு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலி !

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் இராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பபைச் சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாம்பலில் இருந்து எழுவோம் என கூறும் மகிந்தவிற்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் – ஜே.சி.அலவத்துவல

ராஜபக்சவின் முயற்சிக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

மக்களை நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்சக்களும் அவர்களது கும்பலும், அழுது அழுது சாம்பலில் இருந்து எழ முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே மீண்டும் ஒருமுறை இந்த பொய்யான தந்திரங்களுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது என ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான உறுப்பினர்களின் வீட்டில் விசேட கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ஊழல் இயக்கம் மீண்டும் எழுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜே.சி.அலவத்துவல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளிடத்தில் அதிகரித்துவரும் ICE போதை மருந்து பாவனை !

பெண்கள் மத்தியில் ICE எனப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுப்பதற்காக குளியாப்பிட்டிய கலால் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே NDDCB உதவி ஆலோசகர் லக்மி நிலங்கா  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அழகு நிலையங்கள் மூலம் பல பெண்கள் மற்றும் இளம் பெண்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.  இதன்படி, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகள் பலர், அழகு நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்து பயன்படுத்தக்கூடிய ICEக்கு அடிமையாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் மாவட்டத்தில் ICE பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.