November

November

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – துர்நாற்றம் வீசுகிறது என்கிறார் புத்திக பத்திரன !

வரவு செலவுத் திட்டம் விஷம் ஊட்டப்பட்ட கேக் துண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கேக்கின் ஐசிங்கில் இரண்டு அல்லது மூன்று மலர்கள் தூவப்பட்டிருந்தாலும், உள்ளே துர்நாற்றம் வீசுவதாகவும் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே புத்திக பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த பெண் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத பலரும் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி பயணப்பட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் மத்திய தர வர்க்கத்தினர் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அதிகம் பயணப்படுவோராக காணப்படும் நிலையில் இந்த இக்கட்டான நிலையை நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல மோசடியாளர்கள் ஏஜென்சி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடுகின்றனர். அண்மையில் வியட்னாம் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தமிழர்களின் விவகாரம்,  ஓமானில் வேலைக்கு என அழைத்துச்செல்லப்பட்டு விபச்சாரத்துக்கு பெண்களை அனுப்ப முயற்சித்த விவகாரம் போன்றவற்றின் பின்னணியில் இந்த மோசடியாளர்களே உள்ளனர். இது தவிர ருமேனியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக போலிப் பிரச்சாரம் செய்த இரு நபர்கள் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலை எல்லா பகுதிகளிலும் தொடர்கிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக இன்றையதினம் (22) மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பொறப்பட்ட 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சித்திரை மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அரச அலுவலக பெண்களின் ஆடைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை – ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்கிறது பொது நிர்வாக அமைச்சு!

அரச அலுவலகங்கள் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கை குறித்து பல தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், பாடசாலைக்கு வசதியான ஆடைகளை அணிவது தொடர்பில் கல்வி அமைச்சு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

எனவே, பொது நிர்வாக சுற்றறிக்கைகளை எந்த பாடசாலைகளுக்கும் சட்டப்பூர்வமாக உரிமை இல்லை.

இந்த சுற்றறிக்கையில் அலுவலக ஊழியர்களுக்கு மாத்திரமே ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் இப்போது எங்கே..?

உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல்   இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி – 2023 முதல் பதிப்பை அறிவிக்கும் நிகழ்வின் பின்னர், கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் 2023 ஜனவரி 7 முதல் 9 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட 503.2 கிலோ எடையுள்ள நீலக்கல்  கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த, உலகின் மிகப்பெரிய நீலக்கல்   கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி, சுவிட்சர்லாந்தில் உள்ள Gubelin இரத்தினக்கல் ஆய்வகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

குறித்த கல்லுக்கான கொள்வனவாளர் ஒருவரை நாம் இதுவரை கண்டறியவில்லை. எனவே, வாடிக்கையாளர் குறித்த கல்லை துபாய்க்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். துபாயில் குறித்த கல்  தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

“தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் தேவை” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேசத்தையும், தமிழ் தலைமைகளையும் ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது என்றும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்று குறிப்பிடும் போது அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுவோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குங்கள் – பாராளுமன்ற தரையில் அமர்ந்து திலிப் வெதராச்சி போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப் வெதராச்சி இன்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரியே அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தனது உரையை நிகழ்த்திய பின், சட்டசபை அரங்கின் நடுவே வந்து தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

பல நாள் படகுகள் பல நாட்களாக கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகவும், நியாயமான விலை கிடைக்காமல் மீனவர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவதற்கு நடவடிக்கை!

பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பிறப்பு சான்றிதழில் தற்போது காணப்படும் சிங்களவர் தமிழர் பேகர் முஸ்லீம் இந்திய வம்சாவளியினர் போன்ற பதங்கள் நீக்கப்படும் என பதிவாளர் நாயகம்; பிரசாத் அபேய்விக்கிரம தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தற்போது காணப்படும் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் அதேவேளை தேசிய இனம் என்பதை அகற்றுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரத்திற்கு ஏற்ப பிறப்பு சான்றிதழில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் பிறப்பு சான்றிதழை ஒருவர் தனது தாய்மொழியிலேயே பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் இலங்கையில் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் வெளிநாட்டிற்கு செல்லும்போது பிறப்பு சான்றிதழை மொழிபெயர்க்கவேண்டிய தேவையில்லை,என தெரிவித்துள்ள பதிவாளர் நாயகம் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 தேசிய அடையாள அட்டையை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். விரும்பினால் தேசிய இனம் என்பதை இணைத்துக்கொள்ள முடியும், எனினும் தந்தை தாயின் திருமண நிலை காணப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றுவந்த கணிதபாட ஆசிரியர் கைது !

களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் 1,299 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன. மதிய நிலவரப்படி 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்தார். நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் ஆடை விவகாரத்தால் அடக்கப்படும் பெண்கள் – FIFA கால்பந்து தொடரில் தேசிய கீதத்தை புறக்கணித்த ஈரானிய வீரர்கள்!

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 17-ம் திகதி மாஷா அமினி (22), என்ற இளம்பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்துள்ளது.

 

பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கட்டார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈரான், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர்.

இது தற்போது பேசுபொருளாகி உள்ளது ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக கோப்பை போட்டியின்போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றனர்.