01

01

பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் !

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாரியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாரியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது.

ஆகையால் அரச அதிகாரிகள், அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், மாற்று ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் ஆசிரியைகள், சாரி மற்றும் ஒசரி அணிவதிலும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பின்லாந்து உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முன்னுதாரணமாகக் கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளா

“அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.” – கல்வி அமைச்சர்

யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த வருடம் 10 ஆம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதுகாப்பது சவாலாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை மாணவர்கள் பாடசாலைக்கு கொண்டு வருவது போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் தடுப்பதற்காக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளிலுமுள்ள ஆசிரியர்களின் பங்கேற்புடன் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் ஆலோசகர்களாக இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

“போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக மத தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்

“ஐஸ் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டமூலத்தை இருவார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.” என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொவிட் பெருந்தொற்று வைரஸ் பரவலை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் வேகமாக தீவிரமடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை, கிருலபன ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம்  வெளிப்படை தன்மையாகவே முன்னெடுக்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் பதினைந்து வயதிற்குட்பட்ட 50 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதே. வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை இடைநிறுத்தி விட்டு கொழும்பு உட்பட நகர் பகுதிகளுக்கு தொழில்வாய்ப்பு தேடி வரும் இளைஞர் யுவதிகள் பாதாள மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் பிடிக்குள் சிக்குண்டு தமது எதிர்காலத்தை இல்லாதொழித்துக் கொள்கிறார்கள்.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள். தலைநகரில் உள்ள பாடசாலைகள் மாத்திரமல்ல கிராமப்புற பாடசாலை மாணவர்களும் ஏதோவொரு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகிறது.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றும் வகையில் இரண்டு வார காலத்திற்குள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை காட்டிலும் ஐஸ் போதைப்பொருளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற  அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தீவிரமடைந்தால் அது பாரதூரமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பாவனைக்காகவே வழிபறி கொள்ளை,கொலை,கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.வழிப்பறி கொள்ளை தற்போது சாதாரணமாகி விட்டது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக மத தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனாவில் அபின் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது,அதை ஒரு எடுத்துக்காட்டாக கருதி நாமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

“டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.” – ஜனாதிபதி ரணில்

“டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை  காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

“தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள் தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில்  முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன்.  நான் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.  மக்களுக்குப் போதுமான  அளவு  உண்பதற்கு   உணவு இருக்கிறது என்பதையும் முதலில் உறுதி செய்தாக வேண்டும்.

இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம்  தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன.  அதிலிருந்து மீள வேண்டும்.

முதலாவதாக நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும்   1.7 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கவும்  கடன்களை மீளச்  செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம்  கருத்திற்கொண்டு  செயற்பட வேண்டும்.

நாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளோம். முதலாவதாக நாம்  வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அமைப்பும் இதைச் செய்யுமாறு எம்மிடம் வலியுறுத்தியுள்ளன.

2019 ஆம் ஆண்டு வரை எம்மிடம் ஒரு திட்டம் இருந்தது. எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதனை தவிர எம்மிடம் வேறு தெரிவு  எதுவும் இல்லை. இவ்வருடம் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீத மறைப்பெருமானமாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம்  மறைப்பெருமானத்திலே நாட்டின்  வளர்ச்சி வீதம் காணப்பட்டது. அடுத்த வருடம் இது 3 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் விடயமாகும். இதனால் ஐரோப்பியா மற்றும் ஏனைய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும். இது  ஆடை, தேயிலை, கோப்பி ஆகியவற்றின் ஏற்றுமதியில்  வீழ்ச்சியை ஏற்படுத்தி பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் ஒருவாறாக இவ்வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்துக்குச் செல்ல வேண்டும். சுமார் இரண்டு  வருடங்களை நாம் சமாளிக்க வேண்டும். எமது வருமானம் 15% இலிருந்து  8.5%ஆக குறைந்துள்ளது. எனவே நாம் மீண்டும் 15% வருமானத்தைப் பெற வேண்டியுள்ளது. 2026  இல் இந்த இலக்கை அடைய வேண்டும்.  நான் நான்கு வருட நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சென்றேன். இரண்டு வருடங்களுள் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளது. அதனைத் தவிர எம்மிடம் வேறு வழியில்லை. நாம் அதை படிப்படியாக செய்திருக்கலாம் என்று நான் நினைத்தாலும் எமக்கு பணம் தேவைப்பட்டதால் எம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை. கடன் மறுசீரமைப்பு  மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாதாரண மக்கள் வாழ்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே முதலாவதாக நாம் தற்போதுள்ள நெருக்கடியை மீளகட்டமைக்க வேண்டும்.

எனவே நாம் எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகவே நான் முதலில் பாரிஸ் கிளப்பிற்குச் சென்றேன். அதில் உள்ளவர்கள் அனைவரும் மேற்குல நாடுகளையும், ஜப்பானையும் சேர்ந்தவர்கள். ஆனால் நாம் தனித்துவமானதொரு நிலையிலேயே இருக்கின்றோம். எமக்கு கடன் வழங்க முன்வந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்று மாத்திரமே பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமானது. மற்றைய இரண்டும் அதில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் ஆகும். அவை இந்தியா மற்றும் சீனாவாகும்.

நான் ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதோடு இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போது  பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இருதரப்பு விடயங்களை ஆராயும் வகையில் நாம் பொதுவானதொரு மேடையில் இது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவே  நாம் முன்னெடுக்க வேண்டிய செயன்முறையாகும்.

உயர் வருமானத்தை பெற்று  முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை  காண்பிக்க  வேண்டும். பல நாடுகள் எமக்கு நேரடியாகவும் சில நாடுகள் வெவ்வேறு அமைப்புக்களுக்கூடாகவும்   உதவிகளை  வழங்க  முன்வந்துள்ளன. எனவே உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எம்மிடம் போதுமானளவு உரம் கையிருப்பில் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள்  எமக்கு  உதவ முன்வந்துள்ளன. எனவே உரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது.

எரிபொருளுக்காக யாரும் எமக்கு பணம் தரப்போவதில்லை. எனவே எம்மிடம் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுக் கையிருப்பில் உரம் வாங்குவதற்கான பணத்தைக் கொண்டே எரிபொருளை வாங்க வேண்டும்.

உக்ரேன் யுத்தம் மற்றும் குளிரான காலநிலைக் காரணமாக எரிபொருள் விலை வரும் டிசம்பர் / ஜனவரியளவில் அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தபோதிலும் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு புத்துயிரளிக்க   வேண்டும். நெல்லில் ஆரம்பித்து, தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

பெரும்போகம் மூலம் அடுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக விளைச்சல் கிடைக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைய ஏற்படுத்த அது பெரும் உதவியாக இருக்கும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்  அதிகளவான  சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டால்  இதனை  அடைய முடியும். வெளிநாட்டு நிதி கையிருப்பை  இப்போது அதிகரிக்க வழியில்லை. மற்ற எல்லா வழிகளையும் இழந்துவிட்டதால், நமது தொழில் முயற்சிகளை  டொலரில் விற்பதே வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட ஒரே வழியாக இருக்கும்.

இதன் ஊடாக  கையிருப்பில் சுமார் 4 பில்லியன் டொலர்களை சேர்க்க முடியும். இது ரூபாயை மேலும் வலுப்படுத்தும். முழுமையான வர்த்தகப் பொருளாதாரம் மற்றும் உயர்  பொருளாதார வளர்ச்சி வீதத்தை நோக்கிச் செல்வதாக இருந்தால்  இவை அனைத்தும் சாத்தியமாகும்.

பணவீக்கம் உயர் மட்டத்தை  எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் எமக்கு அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வட்டி வீதங்கள் குறைவடைவதைக் காண முடியும். எனவே, நாங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள், வட்டி வீதத்தை எளிதாக்கி அதன் பயனை  மக்களுக்கு வழங்க முடியும்.

கடந்த இரண்டு வருடங்களில் 3.2 டிரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், உற்பத்தியை பெருக்குவதைத் தவிர, இப்பிரச்சினைகளை குறுகிய வழியில் தீர்க்க முடியாது.

தேயிலை உற்பத்தித் துறையில் உள்ள குறைபாடுகளை அறிவோம். போதுமான உரம் கிடைத்துள்ளது.   தேயிலைக் கைத்தொழிலை  நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும்

பொருளாதார  மாதிரி (மொடல்) ஒன்றுடன் நாம் முன்னேற வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளோம். இதன் ஊடாக தேயிலைக் கைத்தொழிலுக்கு பெரும் மதிப்பு ஏற்படும்.

தேயிலைக் கைத்தொழிலை மறுசீரமைத்து உங்களின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை எவ்வாறு  நிறைவேற்றுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை  காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.

திலினி பிரியமாலி பலகோடி ரூபா மோசடி – வணக்கத்திற்குரிய பொரள்ளை சிறிசுமண தேரர் கைது !

பலகோடி ரூபா மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடிகை திலினி பிரியமாலியுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பேஷன் மாடல்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கலைஞர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்படுகின்றன.

கடந்த 29ஆம் திகதி, நடிகை செமினி இட்டமல்கொடவிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார், அவரது வங்கிக் கணக்குப் பதிவுகளைப் பெறுவதற்கும் ஏற்பாடு செய்தனர்.

இதே நேரம் வணக்கத்திற்குரிய பொரள்ளை சிறிசுமண தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கிய சிரேஷ்ட மாணவர்கள் !

களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவரை தாக்கியுள்ளனர்.

நேற்று (31) மாலை களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவ​ரை பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை 3 மணியளவில் விரிவுரைகள் நிறைவடைந்ததையடுத்து முறைப்பாடு செய்த மாணவர் விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, ​​குறித்த சிரேஷ்ட மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரின் தோற்றத்தைக் குற்றம் சாட்டியதுடன், தலைமுடி மற்றும் தாடியை இழுத்து, செருப்பு அணியக் கூடாது, கைக்கடிகாரம் அணியக் கூடாது என மிரட்டியதாக பொலிஸார். தெரிவித்தனர்.

இதற்கு குறித்த மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று சிரேஷ்ட மாணவர்கள் அவரது முகத்திலும், உடலிலும் பலமுறை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான போது அந்த இடத்தில் சுமார் 7 மாணவர்கள் இருந்ததாகவும் அவர்களின் பெயர் விபரங்கள் தெரியவில்லை எனவும், ஆனால் அவர்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரி20 உலக கிண்ண போட்டித் தொடர் – ஆப்கானிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்தியது இலங்கை !

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் முஜீபுர் ரஹ்மான் மற்றும் ராசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது.

“வடக்கில் போதைப் பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.” – நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச

போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திர முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை நேற்று (31) திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது வைத்தார்.  இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2 மாதத்திற்குள் யாழில் 508 பேர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வடக்கில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது. அனைவரதும் ஒத்துழைப்பும் தேவை. தற்போது வடக்கில் ஒரு புதிய பிரச்சனை உருவாகி வருகிறது. இலங்கை முழுவதும் இந்த போதைப் பொருள் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆனால் வடபகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.

கடந்த 2 மாதத்திற்குள் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்கால இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாடு தொடர்பில் ஒரு பொறுப்பாக செயற்பட வேண்டியுள்ளது.

அந்த விடயத்தை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இந்த போதைப்பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் போதைப் பொருள்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது அதிகளவாக காணப்படுகின்றது.இது ஒரு விபரீதமான ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பாரதூரமான செயற்பாடாக காணப்படுகிறது.

அத்தோடு இந்த விடயம் போதைப்பொருள் வியாபாரிகளால் உருவாக்கப்படுகிற செயற்பாடாக காணப்படுகின்றது. அதாவது குறிப்பாக யாழ் மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நாங்கள் உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முப்படையினர் பொலிசார் அனைவரையும் இணைத்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.

இந்த போதைப் பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு உபரியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் நான் ஆராயவுள்ளேன் என்றார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் பற்றிய விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் – நீதி அமைச்சர் !

“வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நடமாடும் சேவை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வட மாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த வருடம் ஜனவரி  மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு நடமாடும் சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விசேடமாக  இந்தியாவில் இருந்து இங்குவந்திருக்கும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்கனவே விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

நீதி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று அதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுவினால் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு இழப்பீட்டுக்கான அலுவலகமும் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயமும் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதுடன் அந்த காரியாலயத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய அதிகாரிகள் அதுதொடர்பாக ஆரம்பித்திருக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும்.

மேலும் ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் தொடர்பான பிரச்சினை வடமாகாணத்திலும்  பரவலாகப் பரவி வருவதால், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புப் படையினர் உட்பட அனைவரின் பொறுப்பாகும். அதனாத் இதுதொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதன்போது யுத்தம் மற்றும் வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அமைச்சரின் தலைமையில் நட்டஈடும் வழங்கி வைக்கப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு தோல்நோய்ப் பாதிப்பு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை போதிய காற்றோட்டம் அற்ற சூரியவெளிச்சம் படாத இடத்தில் தடுத்துவைத்திருப்பதன் காரணமாக அவர் தோல்நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சந்த முதலிகேயின் சகோதரர் அனுர முதலிகே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளதாவது,

எனது சகோதரர் மிகக்குறைந்தளவு வசதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார், அவரை ஏன் மோசமான நிலையில் தடுத்துவைத்துள்ளனர் என்பதற்கான காரணங்களை தெரியாத நிலையில் பயங்கரவாத விசாரணை பிரிவினர் உள்ளனர். வசந்தமுதலிகே தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய காற்றோட்ட வசதிகளோ அல்லது சூரிய ஒளியே இல்லாததன் காரணமாக அவர் தோல்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகேயின் கழுத்து உட்பட உடல் பகுதிகள் தோல்தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் சில மருந்துகளை வழங்கியுள்ளனர் ஆனால் பயங்கரவாத விசாரணை பிரிவினர் அதனை வழங்கவில்லை.
தங்களிடம் குறிப்பிட்ட மருந்து போதியளவு இல்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்தனர் பின்னர் நாங்கள் 14000 ரூபாய்க்கு மருந்தை வாங்கிக்கொடுத்தோம். ஆனால் மோசமான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னமும் குணமடையவில்லை – என்றார்.