03

03

இலங்கையில் 9.1 சதவீதத்தினால் குறைந்த புகைபிடிப்போரின் எண்ணிக்கை !

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் சிகரெட் சில்லறை விலைக்கு உள்ளதே அவர்களுக்கு அதிலிருந்து விடுபட தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதற்கு தடை விதிப்பதுடன், சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான இடம் பெயர்வு – உக்ரைனிலிருந்து 1.4 கோடி பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேற்றம் !

‘ரஷ்யா-உக்ரைன் போரால் இதுவரை 1.4 கோடி பேர் உக்ரைனில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அடுத்து வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்’ என்று ஐநா அகதிகள் பாதுகாப்பு ஆணையர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று நியூயார்க்கில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரியில் துவங்கியது. அதன் பின்னர் உக்ரைனில் இருந்து இன்று வரை 1.4 கோடி பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான இடம் பெயர்வு இது.

உக்ரைனில் இருந்து வெளியேறி அகதிகளாக உள்ள இவர்கள், அடுத்து வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போதிய உணவு, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடும் குளிரை எதிர்கொண்டால், உயிரிழப்புகள் ஏற்படும். துரதிருஷ்ட வசமாக அவர்களுக்கு, குடியேறிய நாடுகளின் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு நாளையும் அவர்கள் சிரமத்துடன் கழிக்க வேண்டிய பரிதாபமான நிலையில் உள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அவர்களுக்கு உதவி வருகின்றன. ஆனால் இது, பெரிய கடலில் ஒரு துளி என்பது போல மிகவும் குறைவாக உள்ளது. உலக நாடுகள் முன்வந்து, இவர்களுக்கான உதவி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஆனால் அதை விட முக்கியம் ரஷ்யா-உக்ரைன் இடையேயான நடந்து வரும் இந்த அர்த்தமில்லாத போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நிதி சேகரிப்புத்தளமொன்றை உருவாக்கியுள்ள ஐ.நா அபிவிருத்திச்செயற்திட்டம் !

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடவாசகத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் முத்தாக அறியப்படும் இலங்கை இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

கடந்த 1948 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய நெருக்கடி இதுவாகும்.

இதன்விளைவாக பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மொத்த சனத்தொகையில் சுமார் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்றனர். அதுமாத்திரமன்றி சுமார் 6.3 மில்லியன் மக்கள் அவர்களின் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கப்பெறும் என்று தெரியாத நிலையில் உள்ளனர்.

எனவே இந்நிலைவரம் தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் பின்னணியில், நாம் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஏனைய முயற்சிகளில் ஒன்றாக நிதி சேகரிப்பு பிரசாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். இதனூடாக தற்போது இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் இப்பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இரு துறைகளாகக் காணப்படுகின்றன. நிரம்பல் சங்கிலி சீர்குலைந்திருப்பதுடன் குறிப்பிட்ட சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அதன்விளைவாக நாடளாவிய ரீதியில் வழமையான சில சத்திரசிகிச்சைகளைத் தாமதப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவை மக்களை வெகுவாகப் பாதித்திருக்கும் பின்னணியில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகள் அவசியமாகின்றன.

அதன்படி இலங்கையர்களுக்கு உதவுவதற்கு எமக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகின்றது.

இலங்கையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் நீங்களும் பங்களிப்புச்செய்யமுடியும். அதன்படி ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதி சேகரிப்புத் தளத்திற்கு உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம்.

வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உதவிகளை உலகின் பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்நிதி சேகரிப்புத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனூடாகத் திரட்டப்படும் நிதியானது இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகளுக்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குடும்பங்களிடையே வீட்டுத்தோட்ட செயன்முறையை ஊக்குவிப்பதற்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வலி.வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்புப் போராட்டம் !

யாழ்ப்பாணம் வலி வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழைச் சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்தது.

தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வலி வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர், கடற்படையின் பிடியில்-274.57ஏக்கர், விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர், பொலிஸ் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.

உலகில் சுற்றுலாப்பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடாக இலங்கை !

ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி சுற்றுலாப்பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA) தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்தச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை விரைவாக மீட்டெடுப்பதற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையிலிருந்து விடுபட இலங்கைக்கு உடனடியாக நிதி மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு – கொலை செய்யவே வந்தேன் என துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தகவல் !

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.

ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை , இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை.

நீக்கப்படுகிறது இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கு இருந்த தடை !

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாக மீள எடுக்குமாறு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்தை அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழை பெற வேண்டும் என்ற நடைமுறை காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும், அந்தத் திருமணத்தை பதிவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும், வெளிநாட்டவர்கள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கையை’ பெற, பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஆறு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத் துணையின் நுழைவு விசாவை பயன்படுத்தி நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு இலங்கை மக்கள் திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வதற்கான தடைகளை நீக்குமாறு, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது பிரதமர் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

“அரசாங்கம் வியாபாரம் செய்வதிலிருந்து தங்கள் கைகளை எடுக்க வேண்டும்.” – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

“அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு குழு மற்றும் பொறிமுறை இல்லாததே இலங்கையின் பிரச்சினையாகும்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் மூலோபாய மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“நாங்கள் மிக நீண்ட காலமாக மூலோபாய இருப்பிடத்தைப் பற்றி பேசி வருகிறோம், அதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் அதிக கவனம் செலுத்த எதுவும் இல்லை என நான் நினைக்கிறேன். இருப்பிடம் மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும், ஆனால் அதைத் தாண்டி இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. செய்ய வேண்டும். அப்படித்தான் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்? என்ன சட்டங்கள் உள்ளன? மக்களை எப்படி அழைக்கிறீர்கள்?” என தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு குழு மற்றும் பொறிமுறை இல்லாததே இலங்கையின் பிரச்சினையாகும்.

“அரசாங்கம் வியாபாரம் செய்வதிலிருந்து தங்கள் கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் வணிகம் செய்யும் நாட்கள் போய்விட்டன, அரசாங்கம் ஒரு வசதியாளராக, ஒழுங்குபடுத்துபவர் மற்றும் மூலோபாயங்களை வழங்குபவராக இருக்க வேண்டும் மற்றும் தனியார் துறையை போட்டியிட அனுமதிக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வளவு பாரிய நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன என்ற உண்மையைக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை தற்போதைய நிலையை எவ்வளவு அதிகமாகப் பிடிக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த மாற்றங்களைச் செய்வது மிகவும் கடினமாகும் என்றார்.

“ஆனால் நம் நாட்டில் அமைச்சர்கள் மாறுகிறார்கள், தேர்தல்கள் வரலாம், உங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், அவர்கள் 1994 இல் 600,000 ஆக இருந்த பொதுச் சேவையை இப்போது 1.5 மில்லியனாகக் கட்டுகிறார்கள். எங்கள் வரி வருவாயில் 90% ஓய்வூதியம், சம்பளம் மற்றும் சமுர்த்திகளுக்குச் செல்கிறது. ஒரு நமது நாட்டை இதிலிருந்து மீட்டெடுக்க நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பாடநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு !

இலங்கைப் பாராளுமன்றத்தினால் பல்கலைக்கழகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குறுகியகால பாடநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

இவ்வாறான குறுகியகால பாடநெறியொன்றை ஆரம்பித்தமை குறித்து நன்றி தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, பாடநெறியைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு சிறு விரைவுரையொன்றையும் நிகழ்த்தினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஊடகத்துறை மாணவர்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறிக்கான வளவாளர்களாகப் பாராளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரிகள் இணைந்துகொள்வர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா, நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணராணி, ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் குறுகியகால பாடநெறியை தமது பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கும் நடத்துமாறு இங்கு கருத்துத் தெரிவித்த கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ரகுராம், ஊடகக் கற்கைகள் துறையின் விரிவுரையாளர்களான பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், அனுதர்ஷி கபிலன், யூட் டினேஷ் கொடுதோர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தப் பாடநெறியின் ஊடாக ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடைமுறைகள், பாராளுமன்ற அமைப்பின் பரிணாமம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை, நிலையியற் கட்டளைகள், பொதுமக்கள் சேவைச் செயற்பாட்டுக்கான தொடர்பு, பெண்கள் பிரதிநிதித்துவம் போன்ற விடயதானங்கள் குறித்து புரிதல்கள் என்பனட வழங்கப்படவுள்ளன.

பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பாடநெறியில் நான்கு விரிவுரைகள் மற்றும் பாராளுமன்ற சுற்றுப்பயணம் என்பன உள்ளடங்கியுள்ளன. இலங்கைப் பாராளுமன்றம் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களுக்காக இவ்வாறான குறுகிய பாடநெறியை முதன் முதலில் ஆரம்பித்திருந்தது.

இந்தப் பாடநெறிக்கான ஒருங்கிணைப்பை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.

“யார் தேசதுரோகி,யார் தேசபிமானி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” – ரணிலுக்கு எதிரான போராட்டத்தில் சரத் பொன்சேகா

யார் தேசதுரோகி,யார் தேசபிமானி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக புதன்கிழமை (2) இடம்பெற்ற போராட்டத்தை களனியில் ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை கொண்டு மக்கள் போராட்டத்தை கணிப்பிட முடியாது.மக்கள் போராட்டம் சற்று தணிவடைந்துள்ளதே தவிர முடிவடையவில்லை என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டை சீரழித்த அரச தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து முழுமையாக விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும். யுத்ததத்தின் போது ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடையும்,ஒரு கட்டத்தில் போராட்டம் தளர்வடையும் அதற்காக போராட்டம் முடிவடைந்து விட்டது என குறிப்பிட முடியாது.அதுபோல தான் தற்போதும் மக்கள் போராட்டம் காணப்படுகிறது.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக கட்சியையும்,அடிப்படை கொள்கைகளையும் அடிக்கடி மாற்றிக் கொள்பவர்கள் போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை தேசதுரோகிகள் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.யார் தேசதுரோகி,யார் தேசபிமானி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுமாயின் மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.