04

04

ரயில் முன் பாய்ந்து 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் புங்கங்குளம் ரயில் கடவையில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலில் குறித்த இளைஞன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2.15மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் அதே ரயிலில் மீள திரும்பி யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பெண் ஆசிரியையின் போலி நிர்வாண படங்களை வட்ஸ்அப்பில் பகிர்ந்த பௌத்த பிக்குவுக்கு சிறை !

பெண் ஆசிரியையின் செம்மைப்படுத்தப்பட்ட நிர்வாண படங்களை வட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை  விதித்தது. கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இதற்கான உத்தர்வை இன்று (04) பிறப்பித்தார்.

கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த தேரருக்கு  5,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் இந்த தீர்ப்பின் போது கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க  அறிவித்தார்.

30 வயதுடைய இளம் பெண் ஆசிரியை ஒருவர், கடந்த கொரோனா  தொற்றுநோய் பரவிய காலப்பகுதியில்,  சூம் தொழில்நுட்பத்தின் மூலம் மேலதிக ஆங்கில  வகுப்புகளை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களிடையே பிரபலமடைந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் “நான் இந்த படங்களை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா” என்று வினவியவாறு  குற்றம் சாட்டப்பட்ட பிக்கு வட்ஸ்அப் மூலம் செம்மைபப்டுத்தப்பட்ட போலி நிர்வாண படங்களைப் பகிர்ந்ததாக  குறித்த ஆசிரியயை சி.ஐ.டி.க்கு செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி. , எம்பிலிப்பிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் கடமையாற்றும் 17 வயதுடைய பிக்கு சந்தேக நபரை, குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்து கைது செய்தனர்.

இந்நிலையிலேயே குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட  பிக்குவுக்கு இந்த ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் கலாச்சாரம் கெட்டுப்போய்விடாது – மகாசங்கத்தினருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பதில் !

பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, புடவை அல்லது ஒசரியைவிட எளிதான எளிய உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயற்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஜோசப் ஸ்டாலின் , ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி விவகாரம் – உயிரை மாய்த்துக்கொண்ட இளம் வர்த்தகர் !

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர், வட்டி அதிகரித்து, வாங்கிய பணத்தினை மீள செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த 37 வயதுடைய இளம் வர்த்தகரே உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த நபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக மீற்றர் வட்டிக்கு ஒரு தொகை பணத்தினை தனி நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார்.  அந்த பணத்திற்கான வட்டி அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தகர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்க அரச அதிபர் தலைமையில் குழு !

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தக் அகுழு நியமிக்கப்பட்டது.

விஷேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

தொடரும் பொருளாதார நெருக்கடி – மதுப்பழக்கத்தை கைவிடும் இலங்கையர்கள் !

உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு – கொடையாளர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அழைப்பு !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில், இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இரத்த வங்கி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் பின் புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக, இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகம் அளித்து குருதி கொடை வழங்கலாம்.

இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை.” – இலங்கை இராணுவம் அறிவிப்பு !

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது.

இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது.

“யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.

ஆனால், ஊடகவியலாளர் நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார்.

மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது. எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” என இராணுவத்துக்கு அறிவித்தது.

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும்.

அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது. ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் – அவதானம் மக்களே !

இலங்கையில் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய 20 வயதுடைய இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட பிற அறிகுறிகளின் காரணமாக அந்த நபர் கொழும்பு ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போதே, அவர் ​​குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளின்படி, குரங்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண முடிந்ததாகவும் இதனையடுத்து, அவர் தற்போது ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.