05

05

சமூகவலைத்தளமூடாகவும் பேராதனைப்பல்கலைகழகத்தில் பகிடிவதை – கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை !

பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தி பகிடிவதைக்கு உட்படுத்தியதாக குறித்த மாணவர், பல்கலைக்கழக இணையத்தளத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பிரிவு அதிகாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர் இணைய வழியாக கல்வி கற்கும் நிலையில், ​​சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்புகளை மேற்கொண்டு தம்மை பகிடிவதைக்கு உட்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான குரல் பதிவு மற்றும் காணொளிகளை ஒழுக்காற்றுப் பிரிவு அதிகாரி பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகனை கோடாரியால் தாக்கிக்கொன்ற தந்தை !

ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொன்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை (4) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (4) அதிகாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த 29 வயதுடைய நபர் உறங்கிக் கொண்டிருந்த போது, சந்தேக நபர் கோடரியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட மகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக்கிண்ண ரி20 தொடர் – இலங்கையின் தோல்வியால் தகர்ந்தது ஆஸியின் உலககிண்ண கனவு !

உலக்கிண்ண ரி20 தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மார்க் வுட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எலக்ஸ் எல்ஸ் அதிகபட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டொக் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் லஹிரு குமார, வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் அதேவேளை, அவுஸ்திரேலியா அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பறிபோகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம்

 

உலகத் தமிழ் பல்கலைக்கழகதெ்தால் நாளை 6ஆம் திகதி நடாத்தப்படவிருந்த கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கும் நிகழ்வு தேசம் இணையத்தளத்தில் வெளியாகிய செய்தியையடுத்துப் பிற்போடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களோ மாணவர்களோ இல்லாமல் இவ்வாறு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்குவது என்பது தமிழையும் தமிழ் புலமையையும் கொச்சைப்படுத்தும் என்பதையும் இதை நிராகரிப்பது சமூகக் கடமையெனவும் தேசம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதையடுத்து பல தரப்பினரிடமிருந்தும் கௌரவப்பட்டம் வழங்குவது தொடர்பில் விமர்சனங்களும் அதிருப்திகளும் வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்த நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது என அறியக் கிடைக்கின்றது.

நிகழ்வு பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை உலகத் தமிழ் பல்கலைக்கழகம் குறிப்பிடாத நிலையில் சர்வதேச அங்கீகாரம் உள்ள பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இதை வழங்குவதற்கு கடும் பிரயத்தனங்கள் எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

தமிழகத்திற்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கை தமிழர்கள் !

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.

நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் சென்று இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் நடுதிட்டு பகுதியை சென்று அடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்ப்பாக தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபடுவார்கள் என மரைன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் மீண்டும் வருவேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள்  டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன். அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த ஜனாதிபதி அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.