07

07

‘500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளோம். பாராளுமன்ற அங்கத்துவம் எமக்கு வேண்டும்.”- வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார்.

பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதாகவும், நேபாளத்தில் பழங்குடியினர் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தம்பானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எமது நாட்டில் முதல் தடவையாக பிரதேச சபை உறுப்பினராக பூர்வீக பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் என் மருமகள், ஹென்னானிகலவில் வசிக்கிறார். இந்த நாட்டின் முதல் மற்றும் பழைமையான சொந்தக்காரர்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ள எமது மக்களுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லை என நான் வெகு காலமாக பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசுக்கு ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர் மறதியில் மங்கிப்போனது” என்றார்.

தனுஷ்க குணதிலக விவகாரத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ள விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பான முறைப்பாடுகள் !

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு சிட்னியில் உள்ள Silverwater சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனுக்கு ஜனநாயகத்திற்கான தங்க விருது !

அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

வருடத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் 30 நாட்களுக்குள் ஹெரோயினுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் !

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என யாழ்.போதனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ்க குணதிலக கைது குறித்து இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தமடைவதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

“என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீதிமன்றம் விரைவில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்கும். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பேச வேண்டியதில்லை.” என்றார்.

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பின் இன்று
காலை இலங்கை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விபச்சாரம் செய்து உழைப்பதற்காக இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் – முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்காக அல்ல என்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் கூறப்படுவது பொய்யானது என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்து இளைஞர்களிடம் சாதாரணமாகிப்போன ஹெரோயின் போதை பாவனை – மூவர் கைது !

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அவரிடம் இருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் குடிவரவுத் திணைக்களத்தில் இரட்டைக் குடியுரிமைக்காக ஜனாதிபதியும் கையொப்பமிடுவதால், அரச தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அலுவலகமும் தேவையான ஆவணங்களைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என்பது இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் சுமார் பத்து பேர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் யார் என்று தெரியவில்லை என்பதுடன், அவர்களைப் பற்றிய விபரங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என அவர் தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றதன் மூலம்,  குறித்த நபர் இந்த நாட்டில் தனது குடியுரிமையை இழக்கிறார். அதன் காரணமாக அவர் மீண்டும் இந்த நாட்டில் தனக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோர வேண்டும் என்றும் அதன்பின்னர் அந்த நபர் குடிவரவுத் திணைக்களத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரட்டைக் குடியுரிமை நாட்டின் அரச தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் எனவே, அது ஜனாதிபதி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது அவ்வளவு கடினம் அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோட்டம் – அறிக்கையை கோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

பொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை கோரியுள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே ஜனாதிபதியினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதோடு , இந்த சந்தர்ப்பத்தில் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

குளிக்கும் போது இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் மோதலாகி , அங்கு பதற்றமான சூழல் ஏற்படக் காரணம் என ஆரம்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாறு மோதலில் ஈடுபட்ட தரப்பினர் புனர்வாழ்வு மையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் ஆகயத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட கைலப்பினால் நான்கு கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த எவருக்கும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மோதலில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வருபவர்களாவர்.

தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் வீதித் தடைகளை அமைக்கப்பட்டு சோதனைகளும் , கண்காணிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் !

அரசு அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.