10

10

பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடிக்க செய்தார் – தனுஷ்க குணதிலக தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியது சிட்னி நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, தனுஷ்கா குணதிலக தனது வீட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், பின்னர் அவர் ஒரு கையை பெண்ணின் கழுத்தில் வைத்து 20 முதல் 30 வினாடிகள் வரை கழுத்தை நெரித்தார்.

இந்த பலாத்காரம் தொடர்பாக அப்பெண் துஷ்பிரயோக பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரால்டில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பான விடயங்களை பகிரங்கப்படுத்த ஊடகங்களுக்கு சிட்னி நீதவான் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டை அடுத்து தடையை நீக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

பெண்ணின் அனுமதியின்றி பாலியல் பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தனுஷ்க குணதிலக்க, காணொளி தொழில்நுட்பம் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன் போது பலாத்காரம் நடந்த விதம் தொடர்பான முழுமையான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முழு அறிக்கையை சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.

விசாரணைகளின் போது முறைப்பாட்டாளர் முன்வைத்த சில விடயங்களை தனுஷ்க குணதிலக்க ஒப்புக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக் சார்பில் கடந்த திங்கட்கிழமை ஆஜரான சட்டத்தரணி ஆனந்த அமரநாத், வழக்கிலிருந்து விலகினார். தனுஷ்க குணதிலக் சார்பில் பாரிஸ்டர் சாம் பரராஜசிங்கம் மற்றும் சட்டத்தரணி சாரா பிளேக் ஆகியோர் ஆஜராகினர்.

இலங்கை சனத்தொகையில் 5லட்சத்துக்கும் அதிகமானோர் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் – அமைச்சர் அலிசப்ரி

“போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது மாத்திரம் முழுமையான அவதானம் செலுத்தாமல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவும்  கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நீதிமன்றத்தில் நிலுவையில் காணப்பட்ட பல இலட்ச வழக்குகளை துரிதமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். அத்துடன் காலத்திற்கு தேவையான பல சட்டங்களை இயற்றினோம், பழமையான பல சட்டங்களை திருத்தம் செய்தோம்.

எமது நாட்டில் ஒரு மில்லியனுக்கு 15 நீதிபதிகள் உள்ளார்கள். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் நீதித்துறையில் கட்டமைப்பில் உள்ள சிறப்பு விடயங்களை இலங்கையில் செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் ஹெரோய்ன் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

சிறு வயதினை உடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றி வளைப்பதை இலக்காக கொண்டுள்ளோம், ஆனால் உலக நாடுகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுகாதார கோணத்தில் பார்க்கப்படுகிறார்கள்.

போதைப்பொருள் பாவனையுடன் கைது செய்தப்படுபவர்களின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைகிறது, ஆகவே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகள் தான் நாட்டை இல்லாதொழிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளுடன் அரசியல்வாதிகள், முக்கிய தரப்பினர் உட்பட பலர் தொடர்புப்பட்டுள்ளார்கள்.

ஆகவே போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு போதைப்பொருள் உள்வருவதை தடுக்கவும்,விநியோகத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அறியவில்லை. ஆகவே போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளை பாடசாலைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களுக்கு புனர்வாழ்வு உட்பட மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நடைமுறைக்கு இலங்கையில் தடை !

நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு தொழில்களுக்குச் சென்ற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா வீசாவில் சென்று வேலையின்றி இருப்பதாகவும், எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ இவர்களை பொறுப்பேற்க முன்வராததால், அவர்கள் தவறாக நடத்தப்படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ள நிலையில், சுற்றுலா வீசா மூலம் பயிற்சியற்ற தொழில்களுக்கு பெண்களை பரிந்துரைப்பதை தடை செய்யுமாறு தொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த 570 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான 182 முறைப்பாடுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மோசடியான முறையில் பெற்ற 28,383,000.00 ரூபாவை முறைப்பாட்டாளர்களுக்கு மீள பெற்றுக் கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பவங்கள் தொடர்பில் பணியகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் 17 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன், இவ்வருடத்தில் சட்டவிரோதமான முறையில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த சிலரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

“தனுஷ்க குணதிலகவில் எந்தத் தவறும் காணவில்லை.” – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

“ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது சுமத்த முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .

ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றாலும், வீரர்களின் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன், அவுஸ்திரேலியாவில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவது ஒரு தொழிலாக இருப்பதையும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், எனவே எங்கள் வீரர் மீது அனைத்து பழிகளையும் நாம் போட வேண்டியதில்லை.

வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காத வகையில் எல்லைக்குள் இருக்கும் வரை அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எப்போதாவது ஒரு கிளப்புக்குச் செல்வதில் நான் எந்தத் தவறும் காணவில்லை, ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், அவர் பயிற்சிகளைத் தவறவிட்டு, விளையாட்டின் மீதான தனது கவனத்தையும் அர்ப்பணிப்பையும் இழக்க நேரிடும். ஆனால் இந்த விஷயங்களை ஒருமுறை அல்லது இரண்டு முறை அனுபவிக்க அனுமதிப்பது தவறல்ல. நான் பார்த்தவற்றின் படியும், வழக்கறிஞர்களின் கூற்றுப்படியும், தனுஷ்க விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுதலையானதும் அவரை தொடர்ந்து அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும்,” என்றார்.

“தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல.”- இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்

தனுஷ்க குணதிலக்க சந்தேக நபர் மாத்திரமே, குற்றவாளி அல்ல என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிட்னி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனிடையே, தனுஷ்க சார்பில் புதிய பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் – தந்தை தலைமறைவு !

4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்ட வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில் மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி, தாயையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 04.11.2022 அன்று, வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.

பின்னர் அவர், கடந்த 4ம் திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட் எப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்ட நிலையில் காணொளியில் இருந்த குறித்த குழந்தை இன்று காலை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் – விசாரணைகளை மேற்கொள்ள C.I.D யினருக்கு அதிகாரம் !

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெறும் மற்றும் தற்போது கிடைத்துள்ள முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் , சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கடந்த சில தினங்களாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட மாணவர் ஒருவரை, மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் தாக்கி, பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிடிவதைக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் ஆறு மாணவர்களை விடுதிக்குள் தடுத்து வைத்து ஏனைய சில மாணவர்கள் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியதாக களனி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரின் அந்தரங்க நிழற்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைப்பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஓமானில் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம் !

வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழு ஓமானுக்கு சென்று விசாரணைகளை நடத்தியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஓமானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி  சில வௌிநாட்டு முகவர் நிறுவனங்கள் பெண்களை அந்நாட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளன.

அவர்களில் அநேகமானவர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அங்குள்ள தொழில் முகவர் நிலையத்தில் பெண்களை வரிசைப்படுத்தி வயது, தோற்றத்திற்கு அமைய பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யப்பட்டமை பொலிசாரின் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடத்திச்செல்லப்படுகின்ற பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள 90-க்கும் மேற்பட்ட பெண்களில் இந்த ஆட்கடத்தலில் சிக்கிய பெண்களும் இருப்பதாக ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தூதரகம் குறிப்பிட்டது.

ஒருவருடத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் 37,819 பேர் கைது !

இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 1,415 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 37,819 சந்தேகநபர்கள் கைதானதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் அதிகளவிலான சுற்றி வளைப்புக்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின்போது 26, 581 சந்தேகநபர்கள் கைதாகினர். இதன்போது, 10, 222 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த காலப்பகுதியில் 370 கிலோகிராமும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணத்தை திருடியதற்காக மாணவர்களை மின்சாரத்தால் தாக்கிய அதிபர் பணியிலிருந்து நீக்கம் !

பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, ஹொரணை – மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனீஸ் குறிப்பிட்டார்.

விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் மத்திய கல்வி அமைச்சின் அதிகாரியொருவரும் அடங்குகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ​நேற்று(08) உத்தரவிட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தமது அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, பொலிஸ் ஜீப் வண்டி தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அறிக்கையொன்றை பெறவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

குறித்த மாணவர்களின் வாக்குமூலத்திற்கு அமைய ஜீப் வண்டிக்குள் மின்சாரம் தாக்கப்பட்டமை தொடர்பிலான சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த அறிக்கை பெறப்படவுள்ளது.

ஆசிரியை ஒருவரின் பையிலிருந்த பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த மாணவர்களை நூலகத்திற்குள் அழைத்துச் சென்று அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.