13

13

யாழ். அளவெட்டியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது !

யாழ். அளவெட்டி நரியிட்டான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது நேற்று செய்யப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போது நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயது உடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 45 மற்றும் 47 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான இலங்கை விமான படையின் தாக்குதலின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் !

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளையில் இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 25க்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதோடு உயிரிழத்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி அஞ்சலியும் செலுத்தினர்.

குறித்த தேவாலயமானது 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

காண்டீபன் அமிர்தலிங்கம் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான யோஷித ராஜபக்ச – விசாரணைகளை ஆரம்பித்தது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !

அண்மைக்காலம் வரை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான விதம் பற்றி இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது . இதற்காக தேர்வு பணியில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.

யோஷித ராஜபக்ச கலந்துகொண்ட முக்கிய வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்று, பிரித்தானியா கடற்படைக் கல்லூரியில் உள்ள பாடநெறியாகும், இது பிரித்தானிய அரச கடற்படையின் நிறுவனமான டார்ட்மவுத் என குறிப்பிடப்படுகிறது.

நாட்டை நாசமாக்கிவிட்டு “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் – சஜித் காட்டம் !

பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்திற்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், இது ஒரு விசித்திரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களில் முன் நிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதும்போது, இந்நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்துச் செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பலே சரி என்றால் சிறையில் இருக்க வேண்டும் எனவும்,ஆனால் பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடிய குழுவைச் சிறையிலடைக்கும் நிலையே நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருவதாகவும்,அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 12 ஆம் திகதி, சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அவை அறையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் நிதி முகாமைத்துவத் துறையும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் இணைந்து எதிர்காலத்தில் நிதிமுகாமைத்துவ மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஏற்பாடுகளுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் சார்பில், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்கவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

நிகழ்வின் போது கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் சட்ட அலகின் தலைவர் றேணு ரணதுங்க, யாழ். கிளை முகாமையாளர் எஸ். சபாநந்தன், சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பிரதித் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர, கிளை வலையமைப்பு முகாமையாளர் நிஷாந்த பட்டேகல மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஷானிகா ராமநாயக்க ஆகியோரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிதிமுகாமைத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர். யோகேந்திர்ராஜா மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி,

1. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிதிமுகாமைத்துவத் துறையினால் ஒருங்கமைக்கப்படும் முதலீட்டுச் சந்தை தொடர்பான மேம்படுத்தல் நிகழ்வொன்றை நடீத்துவதற்காக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வருடாந்தம் ரூபா 200,000.00 நிதிப் பங்களிப்பை வழங்கும்.

2. ஒவ்வொரு ஆண்டிலும், நிதிமுகாமைத்துவ சிறப்புக் கற்கைநெறியில் அதியுயர் மதிப்பெண்ணைப் பெறும் மாணவன் அல்லது மாணவிக்கு கொழும்பு பங்குப் பரிவர்த்தனையினால் விருதொன்று வழங்கப்படும்.

3. நிதிமுகாமைத்துவத் துறை மாணவர்களின் கற்றல் மற்றும் உள்ளகப் பயிற்சி நடவடிக்கைகளில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும், நிதிமுகாமைத்துவத் துறையும் இணைந்து செயற்படுதல். இயலளவிலான வெற்றிடங்களுக்கு அமைய கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் நிதிமுகாமைத்துவத் துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வாணிப இணைப்பு அலகுக்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகளுக்கென நிதிமுகாமைத்துவத் துறையினால் இணைப்பாளர் ஒருவரை நிமித்தல்.

5. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையினால் நடாத்தப்படும் நிதிச் சந்தையியல் உயர் தகமைச் சான்றிதழ் (Advanced Diploma in Financial Markets ) கற்கை நெறிக்கான வளவாளர்களை வழங்குவதற்கும், கற்கை நெறிக்கான விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்குமான ஆதரவை நிதிமுகாமைத்துவத் துறை வழங்குதல்.

6. நிதிமுகாமைத்துவத் துறையினால் முதலீட்டுச் சந்தை தொடர்பான கற்றல் நடவடிக்கைகளுக்காக செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளை நடாத்துவதற்கு இரு தரப்பாரும் இணங்கி – இணைந்து செயற்படுதல்.

7. முதலீட்டுச் சந்தை தொடர்பான கற்றல் மற்றும் ஆய்வு நடவடிக்ககைகளில் இணைந்து செயற்படுதல்.

ஆகிய முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் “பொருளாதார கொலையாளிகள் மத்தியில்” நூல் வெளியீடு !

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், “பொருளாதார கொலையாளிகள் மத்தியில்” என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார் . இப்புத்த்தகத்தின் விலை ரூ.2500 .
இந்நூல் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.

பொருளாதார கொலையாளிகள் மத்தியில்' என்ற நூலை வெளியிட்ட அஜித் நிவார்ட்  கப்ரால்! - தமிழ்வின்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட வழக்கில் முன்னிலையான கப்ரால் கடந்த வாரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு வெளியே, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை அறிந்து இரவில் நிம்மதியாக எப்படி உறங்குகிறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கப்ரால்,

“என்னால் நன்றாக தூங்க முடிகிறது. மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான்தான் செயல்பட்டு நாட்டை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றினேன். மக்கள் எதையும் சொல்லலாம்.” என தெரிவித்திருந்தார்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 77 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது – தொடர்ந்து ஏமாறும் இளைஞர்கள் – மக்களே அவதானம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி பல மோசடியாளர்கள் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் கேளாது பலர் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளார்கள். இது தொடர்பான கைதுகள் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில்; வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 77 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன் அவர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.