15

15

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய தொலைபேசி இலக்கங்கள் !

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1938 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யலாம்.

வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான போலிக்கடவுச்சீட்டை வைத்திருக்கும் அமைச்சர் டயனா கமகே – அம்பலப்படுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம் !

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது வீசா கடந்த 2014 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் களஞ்சிய தரவுகளின் அடிப்படையில், நயனா சமன்மலி அல்லது டயனா நடாஷா என அழைக்கப்படும் நடாஷா கெகனதுர பிரித்தானிய பிரஜை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போலி பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்று போலிக் கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்- டயனா கமகே இரட்டை குடியுரிமை கொண்டவர் அல்லர். எனினும் பிரித்தானிய குடியுரிமையுடன் இலங்கைக்கான போலிக்கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை நீதிமன்றுக்கு வழங்கி வழக்கு விசாரணைகளை முடிவுறுத்த ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் – தமிழ்தேசிய கட்சிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுரை !

கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு வழங்க அப்பகுதி பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்தர்ப்பத்தினை தற்போதுள்ள தமிழ்த் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தாமும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் 22 வயதுடைய சுரேஸ் விதுசன் என்னும் இளைஞன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் பாலிப்போடி நவரெத்தினம் என்னும் 64 வயதுடைய நபர் தனது கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதியில் உள்ள வீட்டில் ஞா.டிலானி என்னும் கல்வியல் கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரஞ்சித்குமார் மற்றும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர்போல் ஆகியோரின் உத்தரவுக்கு அமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ஆகியோர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு காணிகளை சுவீகரிக்கும் முப்படையினர் – நீதிகேட்டு சென்ற பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்ட வடமாகாண ஆளுநர் !

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் முப்படையினருக்கு காணி சுவீகரிப்பது தொடர்பில் பிரதேச செயலர்களுடன் ஆளுநர் தனது அலுவலகத்தில் கூட்டம் நடாத்தவிருந்த போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணி சுவீகரிப்புத் தொடர்பான கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி திணைக்கள பிரதிநிதிகள் ஆகியோர், இக்கூட்டத்திற்கு ஆளுநரால்  அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு இடமளிக்கமாட்டோம் என தெரிவித்து முற்றுகை  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனையடுத்து கூட்டத்திற்கு சென்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் கூட்டம் இணையவழியில் நடத்தப்பட்டது.

இதன் போது போராட்ட இடத்துக்குச் சென்ற ஆளுநர் மக்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இங்கே யாரும் கத்தக் கூடாது. என்னுடைய வேலையை எனக்குப் பார்க்கத் தெரியும். உங்கள் பிரச்சினையை மட்டும் கூறுங்கள். காணி வழங்குவதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லத் தேவையில்லை” என்று காரசாரமாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகளை மீறும் பொலிஸார் – பொலிஸ் மா அதிபரை விசாரணைக்காக அழைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு !

இந்த நாட்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதே மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைப்பாடு என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து சுமார் 1,200 முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து சுமார் 1,200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான முறைப்பாடுகளை 1960 என்ற இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாளிகைக்குள் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச பகீர் !

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர்.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

திருட்டு செயற்பாடுகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் !

இந்தியாவில் இருந்து அமெரிக்க டொலர்கள் மற்றும் தங்கப் பொருட்களை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரணடைந்த களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு அதிகாரிகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் நேற்று இவர்கள் ஆஜராகினர்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எதிர்காலத்தில் அடையாள அணிவகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் .

 

“கஞ்சாவின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” – அமைச்சர் டயானா கமகே பூரிப்பு !

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று தெரிவித்துள்ளார்.

“இந்த மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால்தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன். அடுத்த ஆண்டு கஞ்சா உற்பத்தி மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்டுவர எதிர்பார்க்கிறேன் என்றார்.