16

16

“கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்பினர் விரைவில் உங்களுடைய உள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுங்கள்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழர் தரப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், உட்கட்சி முரண்பாடுகளும் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பலவீனப்படுத்தியிருகின்ற அனுபவத்தினை மறந்துவிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக கொண்டே கட்சிகள் இணைந்திருக்கின்ற என்பது வெளிப்படையானது.

எனினும், கடந்த காலங்களில் தலைமைக்கான போட்டிகளும், அதனால் உருவாகிய முரண்பாடுகளுமே தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து போனமைக்கான பிரதான காரணமாக அமைந்திருந்ததுடன், கிடைத்த சந்தர்ப்பங்கள் பல கைநழுவிப் போவதற்கும் காரணமாக இருந்தது.

எனவே, தற்போது உருவாகியுள்ள சூழலையும் தவறவிடாது பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து தரப்பினரும், காலத்தை வீணடிக்காது விட்டுக்கொடுப்புக்களின் மூலம் தமக்கு உள்ளே இருக்கின்ற பிரச்சினைகளையும், தமக்கு இடையிலான பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றம் – குவைத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை !

குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி – விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1 !

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் திகதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து 16ம் திகதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.

நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.

வவுனியாவில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது !

வவுனியா, பாவற்குளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உளுக்குளம் பொலிசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற மூன்று இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார், அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மூன்று இளைஞர்களும் உளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிசார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் !

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தவிடத்தை கூறினார்.

இதற்கமைவாக, வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

உலக தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், மூன்றாம் நிலை கல்வி மூலம் உள்ளூர் மற்றும் உலக சந்தைக்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் வெலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு சமூக காப்புறுதி முறையை அறிமுகப்படும். அதன்படிஇ ஊழியர்ககள் வேலை இழந்தால்இ அவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் மேலும் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் யாழில் கைது !

15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பல வேலை வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு !

கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன், சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியம் என்பதை இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பல வேலை வாய்ப்புகளை இலங்கை விரைவில் பெறும் என தெரிவித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போது சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாறான நிர்மாணத் திட்டங்களில் இலங்கை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் என SLBFE இன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அத்தகைய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தகுதியான நபர்கள் பதிவு செய்ய இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.