17

17

மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவன் பலி !

படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“மத்திய வங்கியின் ஆளுநரையும், எங்களது அரசாங்கத்தையும் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புங்கள்.” – பராளுமன்றில் உதய கம்மன்பில !

நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதே போல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டம் மீதான இன்றைய (17) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். அப்படிக்கூறிய அவரே, வரலாற்றில் அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளார்.

பாதிப்புகளை அறிந்து வைத்திருந்தாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் அதனைக் கைவிட முடியாது. அதுபோலதான் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அடிமையாகியுள்ளார். அதுபோல அரசாங்கமும் கடனைப் பெறுவதற்கு அடிமையாகியிருக்கிறது. எனவே, மத்திய வங்கியின் ஆளுநரையும், எங்களது அரசாங்கத்தையும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் – 22 வருடங்களின் பின் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள்.

எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார். எனக்காக அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து எதிர்ப்புக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் தொடக்கத்தில் இருந்து, தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தை பல்வேறு அமைச்சுக்களின் கீழ் செயல்படுத்தி தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டம் இலங்கை பூராக இயங்கி வருகிறது, 2010 இல் ´தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்´ நிறுவப்பட்டது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. மற்றும் கண்காணிக்கிறது. இதற்கு இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.

தற்போது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இந்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நிலக் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது.

மற்ற நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுகின்றன.

இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 இராணுவத் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 365,403 இராணுவ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 1,184,823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய இராணுவ வெடி பொருட்கள் பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்படுகின்றன.

நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 12,000 க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தை அகற்றும் செயல்முறையின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதான மதபோதகருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை !

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்  தண்டனை!அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார், ஏ9 என்கிற ஆன்லைன் தொலைக்காட்சி சேனல் வழியாக மதப்பிரச்சாரம் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓமான் நாட்டில் நடைபெற்ற விழாவில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்ட இலங்கை பெண்கள் !

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன​ர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சபைக்கு அறிவித்தார்.

மேலும், அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அழைத்துச் செல்வதாக 12 இலங்கைப் பெண்கள் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில் இப்பெண்கள் பாலியல் தொழிலுக்கு பகிரங்க ஏலத்தில் விற்னை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ளாது தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், பொருளாதார நெருக்கடியை சரி செய்ய அவர்களின் தன்மானத்தை அடகு வைக்க முடியாது எனவும், இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றன. இப்படியான நிலையால் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.

இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் – ஆய்வில் அதிர்ச்சி !

இலங்கைப் பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே இந்த நிலைமையை நிவர்த்தி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் அமைக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

“பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பொலிஸில் புகார் அளிக்க சரியான சூழல் இல்லை. ஒரு பெண் ஒரு ஸ்டேஷனுக்கு துன்புறுத்துதல் பற்றி புகார் கொடுக்க வரும்போது பொலிஸ்துறையில் உள்ள அனைவரும் கூடிவிடுகிறார்கள். ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் இரகசியத்தன்மையை உறுதி செய்ய குறைந்தது 13 பெண் காவலர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறினார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.” – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

“பெருந்தோட்ட பகுதியில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன். 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதியால் சமர்பிப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலா தயாரிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. அரச வருமானத்திற்கும்,அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்தில் திறைசேரியில் கணக்கறிக்கை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கபடவில்லை.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இது ஒரு தடையாக அமையும்.பொறுப்புக் கூறல் தொடர்பில் நாணய நிதியம் கேள்வியெழுப்பும்.நாட்டின் உண்மை பொருளாதார நிலையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிட வேண்டும்.

அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.எரிபொருளுக்கு வரி அதிகரிப்பை அரச வருமானமாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை.

எரிபொருளுக்கு வரி அதிகரித்தால் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவையின் கட்டணங்கள் பாதிக்கப்படும்.பல்வேறு காரணிகளினால் நாட்டில் எரிபொருள் பாவனை 40 சதவீதத்தாலும்,மின் பாவனை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் வீத மற்றும் உட்கட்டமைப்பு அதிகரிப்பிற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதியை அபிவிருத்தி செய்யும் நிலையில் நாடு இல்லை.

துறைசார் நிறுவனங்களின் செலவுகளை குறைந்தப்பட்சம் 10 சதவீதத்திலாவது குறைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தப்படுவதால் மாத்திரம் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாது.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு வரி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.வரி அதிகரிப்பால் நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ளும் நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் துறைசார் நபர்களுடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்;.

அரச செலவுகளை குறைத்துக் கொள்ளாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது.சமூக கட்டமைப்பு தொடர்பான தகவல்களை புள்ளிவிபரவியல் திணைக்களம் தரப்படுத்துவதை அரசாங்கம் தடுத்துள்ளது.

நாட்டில் தொழிலின்மை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மறுபுறம் ஏழ்மை நிலை 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த நிலைக்கு சென்றுள்ளது. பெருந்தோட்ட பகுதியில் 52 சதவீதமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,நாட்டின் ஏழ்மை நிலை 26 சதவீதமாக காணப்படுகிறது. 29 இலட்சம் பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாரான பயங்கரமான சூழ்நிலையில் அரசாங்கம் மக்கள் கலவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

கட்டுமாண கைத்தொழில் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.படித்த தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.நாடு படித்த மனித வளமற்ற பாலைவனத்தை நோக்கி செல்கிறது.

ஊழல் மோசடிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் ஆண்டு முதல் எந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் என்றார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – பிரபாகரனை அடுத்து முதல்நிலை குற்றவாளி விடுதலையான நளினி தான் – முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் பின்னர் நளினிதான் முதல்நிலை குற்றவாளி என முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.

நளினி ஒரு துரோகி; சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது!"- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா | retired police officer anushya slammed nalini at chennai press meet

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அந்த குற்றத்திற்கு பொறுப்பான அனைவரையும் கொண்டு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, இறுதியாக ராஜிவ் காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் வரையில் குற்றவாளிகளை அழைத்து வந்ததும் நளினிதான்.

எனவே இங்கு நளினிதான் முதலாம் நிலை குற்றவாளி. அப்போது, முதல்நிலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அகிலன், பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் நாடு கடத்தி இங்கு அனுப்புமாறு கூறப்பட்டது. எனினும் அவர்கள் இங்கு வரவேயில்லை. இறந்து விட்டனர். அப்போது, இங்கு நளினிதான் முதல் நிலை குற்றவாளி.

குற்றவாளிகள் அனைவரையும் இங்கு வரவழைத்து, எப்படி செல்ல வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொடுத்ததுடன், அதற்கு முதல் நடந்த ஒரு கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்தார் நளினி.

அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை தீட்டுகிறார்கள், அதற்கு உடந்தையாக தமிழ்நாட்டில் இருந்தது நளினிதான் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனால் கூட்டமைப்புக்கு ஒரு நிபந்தனை.” – அமைச்சர் மஹிந்த அமரவீர

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.

நாட்டின் தேசிய பிரச்சினையாகவுள்ள தமிழ் மக்களின் பிரச்சசினைகளுக்கு இந்த அரசில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.