18

18

ஓமானில் விற்பனை செய்யப்படும் இலங்கை பெண்கள் – இலங்கைக்கான ஓமானிய தூதரக உயரதிகாரி பணி நீக்கம் !

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பெண்களில் சுமார் 12 பேர் நேற்று முன்தினம் அங்கிருந்து பலாத்காரமாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த மனிதக்கடத்தல் சம்பவத்தில் இலங்கையின் விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஓமானில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையிலேயே ஓமானில் பணியாற்றும் இலங்கை தூதரக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் மதுபானத்துக்கு இடமில்லை – FIFA அறிவிப்பு !

இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் ..,

மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஹட்டனில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வடக்கு, கிழக்கை போல மலையக மக்களுக்கும் அடிப்படை பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலையக மக்கள் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் அவர்கள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என ஜ.நா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்.

 

இம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த தினங்களில் ஐ.நா பிரதிநிதிகளை நானும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமாரும் சந்தித்து கலந்துரையாடியதில் மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். எனவே இவர்களையும் கருத்திற் கொண்டு இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தினோம்.

இதற்கு பதிலளித்த அவர்கள் எதிர்வரும் ஆண்டு ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்வாங்கப்படவுள்ளதாக உறுதியளித்தனர். அத்தோடு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது. மக்கள் நலன் சார்ந்த எந்த விடயங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை.

மாறாக மக்களுக்கு சுமை ஏற்றுகின்ற வரவு செலவு திட்டமே இது. மக்கள் எதிர்பார்த்த எந்த விடயங்களையும் ரணில் உள்வாங்கவில்லை. அத்தோடு, மலையகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த வரவு செலவு திட்டத்தில் கூறவில்லை. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் பிறகு, உணவு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற விடயங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டது மலையக மக்களே.

எனவே, இதனை கருத்திற் கொண்டு மலையக மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து புதிய திட்டங்களை எதுவும் அவர் முன்வைத்திருக்கலாம்” என இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்

“வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது.” – இரா. சாணக்கியன்

“வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது.” என  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அத்துடன் அதனை பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சட்டவிரோத மண் அகழ்வு. வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது. இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார். மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார்.

பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்கு சொந்தமான காணிகள் என கையகப்படுதிவிட்டு. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காக செல்லும் வேளை வன பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட இருபதாயிரம் மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள்.

இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான்.

இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம். மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு என கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் கடத்துகின்றனர். அடுத்ததாக இங்குள்ள அரசியல் வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டி மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஒன்றாக செயல்படுகின்றார்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பக்கமாக பிரித்து மக்களுக்கு சொந்தமான வளங்கள் சூறையாடப்படுகின்றது.

இவ் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் அல்லாதுவிடில் எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும். என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தமிழக முகாமில் இலங்கை பெண் தூக்கிட்டு தற்கொலை !

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் தர்மராஜேஸ்வரன் யோகலதா வயது 36 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குறித்த பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டின் பேரில் தாந்தோன்றிமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை.” – இரா. சாணக்கியன்

“பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டக்களப்பு மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தினால் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லை என சொல்லப்பட்டது. இதனாலேயே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தினை மேற்கொண்டதற்கு காரணம் இலங்கை முழவதிலும் உள்ள பிரதேசங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு உள்ளது என்று காட்டுவதற்காகவே என்றார்.

தற்போது வடக்கு கிழக்கிலே மாவீரர் தினம் நடப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்துள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெறுகிறது. இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை என அரசாங்கம் சொல்லும்போது அது தொடர்பான ஒரு பதாதையைக் கூட காட்சிப்படுத்த முடியாத நிலை இன்று மட்டக்களப்பில் காணப்படுகிறது.

கிரானில் அது தொடர்பாக கட்டப்பட்ட பதாதையை கிழித்திருக்கிறார்கள். விஷமிகளோ, இராணுவத்தினரோ, பொலிஸார் செய்தார்களா, யார் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.

எமது மண்ணுக்காக உயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்கள் குறித்து நினைவு தினம் தொடர்பான பதாதையைக் கிரானில் கிழித்திருக்கிறார்கள்.தரவையில் இது தொடர்பான முன்னெடுப்புக்கள் எடுக்கும்போது பல எதிர்ப்புகள் வருவதாக அந்த சமூகம் சொல்லுகிறார்கள். இது ஒரு அரசியல் நிகழ்ச்சி இல்லை.என்றார்.

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான க.சேயோன், நல்லரெட்ணம், சி.வவானந்தன் ஆகியோர்கள் அதிதியாக கலந்து கொண்டனர்.

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது !

கடந்த சில நாட்களாக ஆசிரியர்களினால் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இது போன்ற மற்றொரு சம்பவம் பாதுக்க பகுதியில் பதிவாகியுள்ளது.

பாதுக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியர் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் மாணவரை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (18) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

“ஓமானில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் எனது மகளை மீட்டுத்தாருங்கள்.”- இலங்கைத்தாய் வேண்டுகோள் !

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக  சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசாவே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.

இலங்கையில் இருந்து தனது மகளை டுபாயில் வீட்டு பணிக்காக அழைத்துச் செல்வதாக முகவரம் பொய்க்கூறி, ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ள தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகம், 16 தரம் வேலைவாய்ப்பு பணியகம், மனித உரிமை ஆணைக்குழு, சிறுவர் நன்னடத்தை பிரிவு என கடந்த 9 மாதங்களாக தனது மகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தனது மகள், அவருடன் அங்கு 90பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக காணொளியொன்றினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை அந்த பகுதியைச் 9, 10 வயது இருபெண் குழந்தைளின் தாயாரான பர்திமா ஸபீரா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதால், அவரையும் மீட்டு தருமாறு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிக்கும் கல்வி அமைச்சர்..? – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விளக்கம் !

2022 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடத்துடன் தொடர்புடைய திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தற்போது தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாடப்புத்தகங்களில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு இவ்விடயங்களை ஆராய்ந்து, உரிய திருத்தங்களை மேற்கொண்டு அப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில இணையத்தளங்களில் மத அடிப்படைவாதம் கொண்ட புத்தகங்களை விநியோகிப்பதாக தன் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

´அனைத்து மதத்தினரினதும் உடன்பாட்டுடன் இந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. எல்லா மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நான் இதைச் செய்தேன். நான் தவறாக ஏதும் செய்யவில்லை. அந்த மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்த இணையத்தளம் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகிறது. இதனை நிறுத்தாவிடின் சிறப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்படும்´ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்.” – சார்ல்ஸ் நிர்மலநாதன்

“இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை.

இனவாத கருத்துக்கள் பொருளாதார பின்னடைவிற்கு பிரதான காரணியாக உள்ளது. இனவாதத்தை முதலீடாக கொண்டு வரும் அரசியல்வாதிகளை சிங்கள மக்கள் ஆதரித்தார்கள். 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட போது சிங்கள சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தனிச் சிங்கள சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளும், இன அழிப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டது.

 

இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இளம் தலைமுறையினர் இனவாதம் இல்லாமல் சிறந்த முறையில் சிந்திக்கின்றமை வரவேற்கத்தக்கது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள். மகாவலி அபிவிருத்தி சபை ஊடான காணி அபகரிப்பு, இராணுவ முகாம் விஸ்தரிப்பிற்கான காணி சுவீகரிப்பு உள்ளிட்ட சவால்களை தொடர்ந்து எதிர்க் கொண்டுள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 671 ஹேக்கர் நிலப்பரப்பில் கடற்படை கோட்டபய கடற்படை முகாம் ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மக்களின் வீருப்பத்துடன் இந்த கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக கடற்படை குறிப்பிடுகிறது.தமது சொந்த காணிகளை கடற்படைக்கு விட்டுக்கொடுக்க விருப்பமில்லாத மக்கள் உள்ளார்கள். ஆகவே விருப்பம் தெரிவிக்காதவர்களின் காணிகளை அரசாங்கம் முறையாக விடுவிக்க வேண்டும்.

மறுபுறம் தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்களுக்காக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறது. முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்களை அழித்து அங்கு பௌத்த விகாரைகளை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பௌத்த மதத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இந்து ஆலயங்களையும், இந்து மத சின்னங்களையும் அழித்து பௌத்த விகாரைகளை ஸ்தாபிக்க முயற்சிக்கும் போது தமிழ் மக்கள் மனங்களில் விரக்தி நிலை தோற்றம் பெறும்.

2009 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் கூட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. நான்கு வருட காலத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை தற்போது அமுல்படுத்தியுள்ளது.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து இன்று வரை பாதுகாப்பு துறைக்கு மாத்திரம் 4200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை பகைத்துக் கெர்ணடு எந்த அரசாங்கமும் ஆட்சியில் இருக்க முடியாது என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் காணப்படுவதால் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் இராணுவத்தை திருப்திப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது, மத்திய வங்கியும் நாணய அச்சக கூட்டுத்தபானத்தை போன்று நாணயம் அச்சிடுகிறது. இந்த நிலை மாற்றம் பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்ட முடியும் என்றார்.