24

24

“நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் செய்த தியாகங்களை இன்னொரு இனத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – சரத் வீரசேகர

” நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.” என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார் . ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள். தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

 

இன்று முதல் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் மரணதண்டனை – இலங்கையில் புதிய சட்டம் !

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ், குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் இன்று (23) முதல் 2022ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சான்றுரைப்படுத்தினார்.

போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாத முதல் வாரமளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில், 103 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, 7,536 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு செல்ல முடியாது – வியட்நாமிலுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை !

வியட்நாம்மில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் அந்த நாட்டின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காகவே ஏப்ரல் குண்டுத்தாக்குதல் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பகீர் !

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாகவும், இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்திற்காக கடத்த ராஜபக்ஷ குலத்தினர் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உயர்  நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இணைத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு உர்து பெர்னாண்டோ யசந்த கோதாகொட தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற காதலன் – இப்படி தான் நடக்கும் என 2 ஆண்டுகளுக்கு முன்பே முறைப்பாடு செய்த காதலி !

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார்.

 

இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் திகதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் திகதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை

யாழ்ப்பாணம் – ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஒஸ்மானியா கல்லூரிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார்.

அதேவேளை, சந்தேக நபரை கைது செய்யவேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் நேற்றைய தினம் கற்பித்தல் செயற்பாடுகளை புறக்கணித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதன் படி ;

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற நான் இடம் கொடுக்க மாட்டேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று(23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இலங்கையர்களாக நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இவ் வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் லலித் அத்துலத்முதலி பெயரில் முதுகலைப் பட்டப்படிப்பை கற்கக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தீர்வு தருவதாக ஜனாதிபதி ரணில் கூறியதால்தான் வரவு செலவு திட்டத்தை எதிர்க்கவில்லை என்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு !

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும்  ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ.23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலில் தீர்மானித்தது. ஆனால் பின்னர் எதிராக வாக்களிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம். ஏனென்றால் ஜனாதிபதி கடந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்க் கட்சிகளுக்கு கலந்துரையாடுவதற்காக அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி ஜனாதிபதிக்கு பதிலளித்து அவருக்கு எங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

தெரிவிக்கும் விடயங்களை செயற்பாட்டில் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது. இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ளபோதும்  காணாமல் போனோர் தொடர்பாக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.

சொற்கள் செயற்பாடுகளில் இருக்க வேண்டும். காணாமல் போனோர் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு 2017 இல் 5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.  பின்னர் 2020,2021 வருடத்தில் அதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ஒதுக்கப்பட்டது. மொத்தமாக 800மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளபோதும் 11மில்லியன் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என தவிசாளர் தெரிவித்திருக்கிறார். இப்படி தெரிவிக்கும் போது எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அத்துடன் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியது. பலாலி விமான நிலையத்தை சுற்றி காணிகளை விடுவிப்பதாக கூறிய போதும் அதனை நிறைவேற்றவில்லை.

ஒருபுறத்தில் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் தொடர்பில் கூறுகின்ற போதும், மறுபுறத்தில் அதற்கு எதிரான விடயங்கள் நடக்கின்றன. தற்போதும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதனை விசாரிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு விசேட சட்டங்கள் மூலம் மக்களின் காணிகளில் வெளியேற்றுகிறார்கள்.

தலைமுறையாக வாழ்ந்த இடங்களில் ஒரே இரவில் எல்லைகளை அமைத்து மக்களை வெளியேற்றுகின்றனர். இப்படி இருக்கையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நாங்கள் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்று கூறியுள்ளார். எல்லா மக்களும் இணங்கும் தீர்மானமாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு பிரிவு அதனை எதிர்த்தால் அது நிலைபேரானது அல்ல. இதனை நாங்கள் ஏற்கின்றோம். நாட்டின் அனைத்து மக்களும் திருப்தியடைய வேண்டும். பல்வேறு செயற்முறைகளை கடந்து வந்துள்ளோம். நாங்கள் ஒருநாள் ஒன்றாக அமர்ந்தால் தீர்வு காண முடியும். தீர்வு விடயத்தில் அறிந்திருக்க வேண்டிய அனைத்தையும் ஜனாதிபதி அறிந்துள்ளார்.

40க்கும் மேற்பட்ட நாடுகள் சமஷ்டி முறையிலான நாடுகளாக இருக்கின்றன. அந்த நாடுகளே முன்னேற்றமடைந்ததாக உள்ளன. அங்கே அதிகார பரவலாக்கம் உள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படடுள்ளன, எங்கள் மக்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய அந்தத் தீர்வையே நாங்கள் கேட்டுநிற்கின்றோம். அதனை பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். டொனமூறுக்கு முன்னர் சிங்களத் தலைவர்களும் அதனை கேட்டுள்ளனர். இதனால் இதில் தவறுகள் இருக்காது என்றார்.

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் – ஐ.சி.சியிடம் முறைப்பாடு!

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (23) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு, சர்வதேச கிரிக்கட் பேரவையின் “ஊழல் தடுப்பு பிரிவின்” பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலுக்கு இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு அறிவிக்க தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நற்பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.