25

25

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரரான வோரியா கஃபூரி கைது !

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரரான வோரியா கஃபூரி, பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

35 வயதான இவரை உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து நீக்கியதுடன், உள்ளூர் கிளப் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதுடன், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அரசாங்கத்தால் கலவரக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், கத்தார் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஈரானின் குர்து சிறுபான்மை மக்களில் கஃபூரியும் ஒருவர், அதனாலையே அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது இன மக்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தார்.

2018ல் கால்பந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கஃபூரி, இந்த முறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஈரானிய அணி தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரிப்பு !

இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த அதிகரிப்புக்கு அதிகரித்துள்ளதாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தி விமான சேவையினை வழமைக்கு கொண்டு வந்தமையும் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் யுக்ரைன் பிரஜைகளுக்கு பிரித்தானியாவில் குடியேறுவதற்கு மூன்று புதிய வீசா திட்டங்களை பிரித்தானியா அறிமுகப்படுத்தியது.

குறித்த திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் பேர் பிரித்தானிவில் குடியேறியுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிலிருந்து அதிகமாக குடிப்பெயர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் இலங்கையை விட்டு 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் !

“பொருளாதார நெருக்கடியினால் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். ஆகவே மிகுதியாக இருக்கும் வைத்தியர்களையாவது தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.” என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்பு மருத்துவ சேவைத்துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது.வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெறும் வயதெல்லையை மறுபரிசீலனை செய்யுமாறு சுகாதாரத்துறை செயற்குழு கூட்டத்தின் போது பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவின் விசேட வைத்தியர்களில் இருவரும்,களுத்துறை பொது வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்று பிரிவு விசேட வைத்தியர்களும் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள். நாட்டில் மருந்து தட்டுப்பாடு காணப்படும் பின்னணியில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை தோற்றம் பெற்றால் வைத்தியசாலைக்குள் போராட்டம் தோற்றம் பெறும்,அது பாரதூரமான எதிர் விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இருந்து சுமார் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளார்கள்,ஆகவே மிகுதியாக இருப்பவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

விசேட வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெறும் வயதெல்லை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.பொருளாதார பாதிப்பு மருத்துவ துறையில் தீவிரமடைந்தால் முழு நாடும் மிக மோசமாக பாதிக்கப்படும் என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அகதிளாக இந்தியாவில் தஞ்சம் !

மேலும் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தனுஷ்கோடியின் முதல் தீவை இவர்கள் சென்றடைந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

பத்து இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று புதன்கிழமை இராமேஸ்வரம் கரையை இரகசியமாக வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு இளைஞர், ஐந்து குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா கால சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் !

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருடைய முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுகின்ற போது, இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வையே தீர்வாக வலியுறுத்துவது எனவும், பின்னர் பேச்சுவார்த்தையின் நிலமைகளுக்கு ஏற்ப, விடயங்களை கலந்தாலோசித்து தீர்மானிப்பதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“யதார்தத்தினை புரிந்து கொண்டு பேச்சுவார்த்தையின் போது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பினர் தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியை கூட்டமைப்பினரின் அண்மைய தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது.

நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் ஊடாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் என்று கடந்த 35 வருடங்களாக நான் கூறி வருகின்ற யதார்த்தத்தினை கூட்டமைப்பினர் தற்போது புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

மேலும்  குறித் நிலைப்பட்டில் கூட்டமைப்பினர் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அமைதியான சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைத்து தமிழ் தரப்பினரும், தற்போதைய அரசியல் சூழலை கையாள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் இலங்கையில் அடையாளம் !

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இந்த வேலைத்திட்டத்தின் தலைவராக செயற்படும் ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

குறைந்த நிறையுடைய குழந்தைகள் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.

 

“பாதை அமைக்கவும் , சுத்தப்படுத்துவதற்கும் பயன்படுத்தி இராணுவத்தை அழித்தவர் கோட்டாபய ராஜபக்ஷ” – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார். அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார். நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கே ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்று பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடையும் – ஐஸ்கிறீமும் வாங்குவதற்காக களவெடுத்த சிறுவர்களை கைது செய்த பொலிசார் !

அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் நேற்று (24) கைதாகி உள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் இரு சிறுவர்களும் அயல் வீடு ஒன்றில் வீட்டார் இல்லாத நேரத்தில் பின் பக்கம் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் சிலவற்றை திருடி உள்ளனர்.

பின்னர் அதில் ஒரு மின் உபகரணத்தை 300 ரூபா பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அந்த உபகரணத்தின் உண்மைப் பெறுமதி 3,650 ரூபாவாகும். விற்பனை செய்து கிடைத்த 300 ரூபா பணத்திற்கு வடையும், ஐஸ்கிறீமும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். மற்றும் உபகரணங்களை பக்கத்தில் உள்ள ஒரு புதரில் எறிந்துள்ளனர்.

வீட்டார் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருடப்பட்ட மின் உபகரணம் ஒன்றை 300 ரூபாவிற்கு வாங்கிய நபரும் சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.