26

26

அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி அஞ்சலி – காணொலி!

நாளை நவம்பர் 27 அன்று அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் லண்டன் சறே பகுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

அமிர்தலிங்கம் காண்டீபனின் நினைவுகள் பற்றி அவருடைய நண்பர்கள் பகிர்ந்துகொண்ட அஞ்சலிக் குறிப்பு.

“13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது.” – அமைச்சர் அலி சப்ரி

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

 

“2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் அதற்கு சில சட்டத் தடைகள் இருப்பதால் அது நடைபெறவில்லை.

எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு அவர்களிடமுள்ள அதிகாரங்கள் அவர்களுக்கு திருப்ப வழங்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்து விட்டது” – இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்

“கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.” என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.

2021 க.பொ.த உயர்தர பெறுபேறுகள், 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் கணிசமான மாற்றத்தை தந்துள்ளன. ஒப்பீட்டளவில் நாம் மீண்டெழ ஆரம்பித்துள்ளோம்.

இதனை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிட முடியாது. இதற்காக பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் அக்கறையுடனும் தொழிற்பட வேண்டும்.

கடந்த 2021 க.பொ.த உயர்தர பெறுபேற்றுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதிபர்களின் விடாமுயற்சி, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பன கணிசமான பங்கு வகித்தன. அதனாலேயே முதல் மூன்று இடங்களில் தமிழர் செறிந்து வாழும் மாகாணங்கள் முதல் நிலையில் வந்தன.

அதேபோன்று 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேற்றுக்கும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவை, அதிபர்களின் சீரிய மனப்பாங்கு, பெற்றோரின் வகிபாகம் என்பன காரணமாக அமைகின்றன.

தமிழர் செறிந்து வாழும் மாகாணங்களில் மாணவர்களுக்கான அரச பொதுப் பரீட்சைகளில் மாணவர்கள் எடுத்துள்ள பெறுபேற்று உயர்ச்சி எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாம் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும். இன்னும் மேலெழ வழி தேட வேண்டும். எத்தகைய நெருக்கடிகள், தலையீடுகள், கலாசார பிறழ்வுகள், போதை கலாசாரங்கள், திணிப்புகள் எது வந்தாலும் நாம் அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.

கல்வி என்பது எமது சொத்து. அதனை நாம் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே எமது வாழ்வின் ஆதாரம். அதற்காக அதிபர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கல்விக் காப்பகத்தின் கண்ணியத்தையும், அங்கு காக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அன்போடு அரவணைப்போடு அனைவரையும் ஒன்றிணைத்து, ‘எமது இலக்கு ஒன்றே’ என்ற வாசகத்தை மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

ஆயிரம் சுமைகள், துன்பங்கள். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எம் தேசத்துக் குழந்தைகள் என்ற உணர்வோடு ஆசிரியர்களான நீங்கள் ஆற்றும் பணியை அனைவரும் மதிக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!

இன்னும் நாம் எமது கடந்த கால இலக்குகளை அடையவில்லை. அவை அடையப்பட வேண்டியவை. அதுவும் எமது காலத்தில் அவை அடையப்பட வேண்டும். அதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றுவோம்.

இறைவனின் ஆசியும், குழந்தைகளின் பெறுபேற்று வெற்றி, அவர்களின் உயர்ச்சி, அவர்கள் பெறும் பதவிகள், பட்டங்கள் என்பன உங்களுக்கு அணிகலன்களாக அமையும் என்பது உண்மை. உங்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

நாம் பல்லாண்டு காலம் கொடிய யுத்தம், அனர்த்தம் என்பவற்றை கடந்து வந்தவர்கள். அந்த காலங்களிலும் நாம் கல்வியை கைவிட்டதில்லை. அதற்காக அக்காலத்தில் யாரும் தடையாக இருந்ததும் இல்லை.

இன்று தடைகளும் திணிப்புகளும் எம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தலையீடுகள் பல எமது எதிர்கால குழந்தைகளில் கல்வியை சீரழிக்க முனைகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் இடம்கொடுக்க முடியாது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பம் – அரசியலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் !

பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாமல் இருந்தால் அவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவிக்கையில்,

சில மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக வேந்தர்களின் உதவிகளையும் பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது தவறான செயல் – எலான் மஸ்கட்

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறினார்.

இதையடுத்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உலகின் முதல்தர பணக்காரரான எலான் மஸ்க், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கினார். இந்த நிலையில் டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டிரம்ப் மீதான டுவிட்டர் தடையானது ஒரு மிகப்பெரிய தவறு. அது திருத்தப்பட வேண்டும். அவர் சட்டத்தை மீறவில்லை என்றாலும் அவரது கணக்கை தடை செய்ததில் டுவிட்டர் ஒரு பெரிய தவறை செய்துள்ளது என்றார்.

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் – வடக்கில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தி !

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 231,982 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 10,863 பேர் அனைத்துப் பாடங்களிலும் ´ஏ´ சித்தி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 498 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3 ஆயிரத்து 9 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 56 பேருக்குக்கும், வடமராட்சி கல்வி வலயத்தில் 56 பேருக்கும், வலிகாமம் கல்வி வலயத்தில் 53 பேருக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்தில் 49 பேருக்கும்,முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 47 பேருக்கும், மன்னார் கல்வி வலயத்தில் 39 பேருக்கும், தென்மராட்சி கல்வி வலயத்தில் 36 பேருக்கும், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 12 பேருக்கும் துணுக்காய் கல்வி வலயத்தில் 9 பேருக்கும் தீவக கல்வி வலயத்தில் ஒருவருக்கும் 9 ஏ சித்தி கிடைத்துள்ளது.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 300க்கும் மேல் !

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310-ஆக அதிகரித்துள்ளது.

2 ஆயிரத்து 43 பேர் காயமடைந்தனர். 61 ஆயிரத்து 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

40 பேரைப் பற்றிய விவரங்கள் தெரிவில்லை. மேலும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 31 பள்ளி கட்டடங்களும், 124 வழிபாட்டுத் தலங்களும், 3 மருத்துவமனைகளும் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 03 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ள வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் !

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட 03 யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (25) பிற்பகல் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், எஸ். ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கில் காணி கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, சுவீகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக தமிழ் மக்களுக்கு வழங்குதல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது உள்ளிட்ட 3 யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைக்குள் நுழைய தடை !

பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வீட்டு வேலைக்குச் செல்லும் இலங்கை பெண்களுக்கு பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விசேட பயிற்சிகள் !

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் சில பெண்களுக்கு பாதுகாப்பான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் விபசார வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களினால் இலங்கைப் பெண்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலாளிகளுடன் பாதுகாப்பான உடலுறவை எவ்வாறு பேணுவது? அவர்களின் உடலை சரியாக மசாஜ் செய்வது எப்படி? அந்த முதலாளிகளை எப்படி பாலியல் ரீதியாக மகிழ்விப்பது? என இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் பாலியல் தூண்டுதல் மாத்திரைகள் மற்றும் கருத்தடை உறைகள் குறித்து சம்பந்தப்பட்ட பயிற்சியின் போது விளக்கமளிக்கப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதை வெளிப்படுத்திய விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.