27

27

” தமிழ் , முஸ்லீம் இளைஞர்களை தேசிய விளையாட்டு அணிக்குள் உள்வாங்கி தேசிய ஐக்கியத்தை வளர்க்க முன்வாருங்கள்” – மனோகணேசன்

விளையாட்டு துறை பாதீடு ஒதுக்கீட்டு பிரேரணையின் போது, அச்சமயம் சபையில் பிரசன்னமாகி இருந்த விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை விளித்து உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

யாழ் பெற்றிக்ஸ், மன்னார் சேவியர்ஸ் ஆகிய கல்லூரி அணிகள், எனது தொகுதி கொழும்புக்கு வந்து,  20 வயதிற்கு உட்பட்ட தேசிய பாடசாலை கால்பந்து வெற்றிக்கிண்ண இறுதி போட்டியில் விளையாடுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு தருணம். கால்பந்தில் தமிழ் பிள்ளைகளுக்கு இருக்க கூடிய திறமைகளை பாருங்கள்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீங்கள் இளைஞர். புதிதாக சிந்திக்க கூடியவர். கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாவது மதம். அதைக்கொண்டு அரசியல்வாதிகள் நிலைநாட்ட தவறிய இன ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள்.

இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் “வெட்டுகளை” நிறுத்துங்கள். இங்கே பிரச்சினை என்னவென்றால், இலங்கையின் ஈழத்தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு திறமை இருந்தும் இடமளிக்கப்படுவதில்லை என்பதுவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள அரச கட்டமைப்பு வளங்களை வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் வழங்குவதில்லை என்பதுவும்தான். இதற்கு என்ன காரணம்? ஒளிவு மறைவு இன்றி அனைத்தும் சிங்கள-பெளத்த மயம் என்ற பெருந்தேசியவாதம்தானே.

இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா நாடுகளிலும் இனவாதம் முழுக்க இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றையும் மீறி இந்நாட்டு அணிகளில் இன, மத, நிற வாதங்களை மீறி பன்மைதன்மை இருப்பதை பார்க்கிறோம். உலக கிண்ண கால்பந்து போட்டிகளின், “வெள்ளைக்கார” நாட்டு அணிகளில் “கறுப்பின” வீரர்கள் கணிசமாக இடம் பெறுவதை பாருங்கள். இங்கே இது அறவே இல்லை. அதை பார்த்தாவது திருந்துங்கள்.

ஐயாம் எ ஸ்போர்ட்ஸ்மேன். நான் ஒரு விளையாட்டு ஆர்வலன். விளையாடும் வீரன். இந்த நாட்களில் இரவுகள் முழுக்க உலக கிண்ண கால்பந்து ஆட்டங்களை பார்க்கிறேன். இலங்கையில் கால்பந்து சம்மேளனம் செயற்படவில்லை. இன்று சம்மேளனம் இடை நிறுத்தம் ஆகி உள்ளது. முன்னாள் தலைவரின் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு ஒரு அறிக்கை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை தூர தள்ளி வைத்து விட்டு, தைரியமாக முடிவுகளை எடுத்து, புதிய தேர்தல்களை நடத்தி, புதிய கால்பந்து சம்மேளன செயற்குழு அமைத்து செயற்படுங்கள்.” என கூறியுள்ளார்.

FIFA 2022 – கால்பந்து தொடருக்கான மைதான நிர்மாணிப்பில் சுமார் 6500 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி – தகவல்களை மறைக்கிறதா கட்டார்..?

ஒவ்வொரு நாளும் 1050 கோடி கடனாக பெறும் இலங்கை – பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் !

இலங்கை அரசாங்கம் தனது செயற்பாடுகளை நடத்துவதற்கு தினமும் 1050 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அரசின் வருமானம் 653 கோடி என்றும், அரசின் செலவு 1705 கோடி என்றும் பேராசிரியர் மேலும் கூறினார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி அடுத்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 950 கோடி ரூபாவாக இருக்கும் என தெரிவித்த தஅத்துகோரள, அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் செலவு 2160 கோடி ரூபாவாக அதிகரிக்குமெனவும் தெரிவித்தார்.

வரி வசூல் அதிகரிப்பால் அடுத்த ஆண்டு அரசின் வருமானம் அதிகரிக்கும். அதேவேளை அடுத்த ஆண்டு ஒரு நாளில் அரசாங்கத்தின் கடன் தொகை 1364 கோடியாக அதிகரிக்கும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாகவும், நிதிக் கொள்கை எவ்வாறு தவறான திசையில் செல்கிறது என்பதை இது காட்டுவதாகவும் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அரசாங்கம் எடுத்த கடன் தொகை 473 ரூபாவாகும். கடந்த ஆண்டு இது 371 ரூபாயாக இருந்தது. அடுத்த வருடம் ஒரு நபருக்கு அரசாங்கம் சுமத்தும் கடன் தொகை அறுநூற்று ஒன்பது ரூபாயாக அதிகரிக்கும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

பெண் ஆசிரியர்களுக்கு முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் – கல்வி அமைச்சர் அதிர்ச்சி !

பெண் ஆசிரியர்களுக்கு முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே இவ்வாறான விடயங்கள் இங்கு வந்ததாக தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் முடியுமானால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்லவுள்ளோம். பெண் ஆசிரியைகளுக்கு குறிப்பிட்ட நடத்தை விதிகள் உள்ளன.அதில் ஆடை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் சேலை அணிவது அவசியம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

‘உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே எனது நாட்டின் இறுதி இலக்கு.” – கிம் ஜாங் உன்

அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இதனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஏவுகனை சோதனையில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதனிடையே, உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே தனது நாட்டின் இறுதி இலக்கு என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் செய்தி வெளியிட்டுள்ளார். நாட்டின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை கிம் ஆய்வு செய்த பின்னர், வெள்ளியன்று அமெரிக்க அணு ஆயுத அச்சுறுத்தல்களை அணு ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வதாக உறுதியளித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் அவர், தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை உலகின் வலுவான மூலோபாய ஆயுதம் என்று கூறினார். இது வட கொரியாவின் உறுதியையும், இறுதியில் உலகின் வலிமையான இராணுவத்தை உருவாக்கும் திறனையும் நிரூபிப்பதாக கூறினார். வட கொரிய விஞ்ஞானிகள் “பாலிஸ்டிக் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்று கிம் தெரிவித்துள்ளார்.

“13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.” – டலஸ் அழகப்பெரும

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.” என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் செயற்படுவது பாரிய குறைப்பாடாக கருதப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விடயதானத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவையாளர்கள் தற்போது சேவை கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளின் ஒருசில விடயங்கள் அரச சேவையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்படுகிறது. 2017ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்த பிரேணை கொண்டு வரப்பட்ட போது தெரிவு குழுவின் போது 31 திருத்தங்கள் உள்வாங்கப்பட்டன.மாகாண சபை தேர்தல் காலரையறையில்லாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் என்ற சொல் கூட தற்போது வழக்கில் இல்லை.இது ஒரு பாரியதொரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும். உள்ளூராட்சிமன்ற தேர்தலை விற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய அண்மையில் தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2018 ஆம் ஆண்ட விசேட தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பான தெரிவு குழு நியமிக்கப்பட்டது,கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது எத்தன்மையானது.

ஆகவே மாகாண சபைகளுக்கு செய்ததை,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் செய்ய வேண்டாம் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் மீதான அச்சத்தில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்ற சபை முறைமை தொடர்பில் எவ்வித கொள்கையுட் நடைமுறையில் இல்லை,2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,ஆனால் இதுவரை அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் இந்த  சபையில் உள்ளார்கள்.தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைந்தளவில் உள்ளார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

அவுஸ்ரேலிய கடற்கரையில் நிர்வாணமாக குவிந்த பெருமளவு மக்கள் – காரணம் என்ன..?

சர்வதேச அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய கதிர்கள் உடல் மீது படும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு போட்டோ சூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் சூரிய உதயத்தின்போது தங்கள் ஆடைகளை களைந்த அவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டும், கடற்கரையில் படுத்துக் கொண்டும், தோலின் மீது சூரிய கதிர்கள் படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்விற்காக கடற்கரையின் ஒரு பகுதி மட்டும் தற்காலிகமாக நிர்வாண கடற்கரையாக அறிவிக்கப் பட்டிருந்தது. பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்பென்சர் துனிக் பல்வேறு கோணங்களில் இதனை படம் பிடித்தார். இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஸ்காட் மாக்ஸ், இந்த கலை படைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து நமது மக்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், புற்று நோய் காரணமாக யாரும் இறக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.

“சம்பந்தன் நடாத்திய தமிழ் கட்சிகளின் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.”- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.” என தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என தெரிவித்தார்.

சமகால நிலை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தரப்புகள் எவ்வாறு சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டார்களோ அதே போன்று தமிழ் மக்களின் ஆணையை பெற்றுவிட்டு அதற்கு மாறாக செயல்படும் தரப்புகளை மக்கள் விரட்டியடிக்க முன்வர வேண்டும். எந்தவொரு விதத்திலும் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளையோ தமிழ் தேசிய அங்கீகாரத்தையோ அல்லது தனித்துவமான இறைமையையோ வடகிழக்கில் சுயநிர்ணயத்தை அனுபவிக்க கூடிய சமஷ்டி தீர்வையோ வழங்குவதற்கு தயார் இல்லாத இடத்திலே அதனை ஏற்க முடியாது.

அடுத்த தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது விக்னேஸ்வரன் தரப்புக்கோ ஆசனங்கள் குறைவாக கிடைக்கும் என்று தெரிந்தபடியால் அதற்கிடையில் ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்ற மாபெரும் துரோகத்தை அடுத்த தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்ற சதித்திட்டத்தையும், நிறைவேற்றவதற்கு தான் அவர்கள் அவரசமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

சிலநாட்களுக்கு முன்னர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா என்னுடன் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தாரே தவிர வேறு எந்த சந்திப்புக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

தேர்தலுக்குச் சென்றால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் தேர்தலுக்குப் போகாமல் தங்களுக்கு அங்கீகாரம் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக மக்கள் ஆணையுள்ள தரப்புக்களுடன் கலந்துரையாடி அவர்களது ஆதரவு தனக்குள்ளே போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார் – என்றார்.