December

December

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் பலி – ட்வீட் செய்த ஒஸ்கார் விருது நடிகை கைது !

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன. இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேசையில் விழுந்து கிடந்த சோற்றை நாக்கினால் நக்கி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் பணித்த அதிபருக்கு இடமாற்றம் !

மாணவர்கள் தமது மதிய உணவை முடித்துவிட்டு மேசையில் விழுந்து கிடந்த சோற்றை நாக்கினால் நக்கி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் பணித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாத்தறை கொடௌட மகா வித்தியாலய அதிபர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டதுடன், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த சம்பவத்தை பாடசாலையின் ஊழியர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணை முடியும் வரை குறித்த அதிபர் தற்காலிகமாக மாத்தறை பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

குடி வெறியில் புதுமுக மலையக மாணவனை தாக்கிய யாழ்ப்பாண மாணவன் – பேராதனையில் சம்பவம் !

பேராதனைப்பல்கலைகழகத்தில் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவமொன்று சனிக்கிழமை (17) பதிவாகியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் வைத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வந்த சிரேஷ்ட மாணவன் முதலாம் வருட மாணவனை தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த மாணவன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு மாணவர்கள் கைது !

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் காதலன் என குறிப்பிடும் ஒருவரும், அவரின் நண்பருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழ் மக்களுக்கான தீர்வுதொடர்பில் இந்தியாவின் அனுசரணை தேவையானது.”- மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான தீர்வுதொடர்பில் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு  பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கின்ற போதும் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஆட்சி செய்த நிலங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அது சிங்களவர்களுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்கள்  சுதந்திர தமிழர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே அன்று 1948ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வா தனது  அஹிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்து ஆரம்பித்திருந்தார். அதன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க வின்  கட்சி சிதைந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றத்துக்கு சென்று பிரதமராகி ஜனாதிபதியாகி இருக்கின்றார். இந்த நிலையில், பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினையை  தீர்ப்பதற்கு  அழைத்திருக்கின்றார்.

தமிழ் மக்களுடைய விடுதலையை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் பேச வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தருக்கு மாணவர்களை கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.”- பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்  உபவேந்தர்

அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்  உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் கும்பலினால் தாக்குதலுக்கு இலக்கான அவர் சனிக்கிழமை (டிச. 17) இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

நான் 2015ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த போது  பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக பிரேரணையை சமர்ப்பித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் பொலிஸ் பிரிவுகளில் பட்டதாரிகள் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உள்ளவர்கள் இருக்க வேண்டும். மேலும் துணைவேந்தரின் கீழ் பொலிஸ் பிரிவு இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் எவரையும் கைது செய்வதற்கும் தேவையான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த பிரேரணை அமுல்படுத்தப்பட்டால் எதிர்வரும் வருடங்களில் மாணவர் பகிடிவதை முற்றாக நிறுத்தப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி – பிரான்சை பந்தாடி வெற்றி வாகை சூடியது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா !

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கட்டாரில் கடந்த மாதம் 20-ந்திகதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம்  தோற்று வெளியேறியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்துட ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.  போட்டி சமன் ஆனதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது. அர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), மற்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் ஆர்ஸென்டீனாவுக்காக இந்த சாதனையை  நிகழ்த்தியுள்ளார். இந்த இறுதி போட்டியில் வென்றதன் மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது.

. முன்னதாக தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போட்டது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.

பதவி விலகுகிறார் ரொனால்டோவை களமிறக்க மறுத்த போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் !

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் களமிறக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள்.

இதனால் போர்த்துக்கல்லின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பயிற்றுவிப்பாளர்,

“நான் ரொனால்டோவை வெளியில் அமர வைத்ததுக்கு வருத்தப்படவில்லை. அவர் அணியில் விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும். அதற்காக ரொனால்டோ திறமையான வீரர் இல்லை என கூறவில்லை. போர்த்துக்கல் அணி நன்றாக விளையாடியது, மொரோக்கோ அணி அதை விட நன்றாக விளையாடியது.”என கூறியுள்ளார்.

இவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கோவத்தை அதிகரித்தது. இந்நிலையில் அவர் தனது பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை 68 வயதுடைய போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ போர்த்துக்கல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

“வெளிநாட்டு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு இலங்கை பெண்களை அனுப்ப முடியாது.”- அமைச்சர் மனுஷ நாணயக்கார

“இலங்கையில் இருந்து வெளிநாட்டு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு பெண்களை அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு தொழில்வாய்ப்புகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும். அதேபோன்று போலி முகவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி செல்பவர்களும் இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேருடுகின்றனர்.

அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். அவ்வாறு பதிவு செய்து செல்பவர்கள், அங்கு ஏதாவது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதுதொடர்பில் எமக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன்  5வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் இருந்தது.  என்றாலும் வாழ்க்கைச்செலவு காரணமாக இவ்வாறான தாய்மார்கள் சட்ட விரோதமான முறையில் செல்கின்றனர்.

அதனால் இந்த சட்டத்தை தற்போது இலகுவாக்கி, 2வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலவதற்கு  தடைவித்திருக்கின்றோம். அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறு அனுப்புவதாக இருந்தால், அவர்கள் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச்செல்பவர்கள் அங்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான தொழில் பயிற்சி வழங்கியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பப்படுவார்கள்.  அத்துடன் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

என்றாலும் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்கின்றனர். நாட்டில் தற்போது நூற்றுக்கு 24வீதமான பெண்களே வெளிநாட்டு தொழிலுக்கு சென்றிருக்கின்றனர். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டமைப்பை முழுமையாக டிஜிடல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்த துறையில் ஏற்படுகின்ற மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

“எங்களிடமும் அணுகுண்டு உள்ளது. எப்படி பதிலளிக்க வேண்டும் என எங்களுக்கும் தெரியும்.”- பாகிஸ்தான்

“எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது.” என பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார்.

அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,

“ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்றார். இந்த கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் இந்திய – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகளின் கருத்துக்கள் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ,

“ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.  பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு’ என்று தெரிவித்திருந்ததது.

அதேவேளை, பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் கொடியை எரித்து பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எங்களிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி லாகூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைப்பாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. தாக்கப்படும்போது பாகிஸ்தான் அமர்ந்திருக்காது. சமபலத்துடன் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய மதத்தினரை பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புபடுத்துகிறது’ என்றார்.