December

December

“பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம்.”- அங்கஜன் இராமநாதன்

பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அத்தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அராலியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த இணக்கப்பாட்டில் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் இந்த தீர்வு திட்டத்தினுள் பொருளாதார, அபிவிருத்தி இடைவெளியை நிரப்புவதற்கு, ஏனைய மாகாணங்களில் இருக்கும் வாய்ப்புகள் எம்மவர்களுக்கும் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவம், கடற்படை, வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிடியில் இருக்கின்ற மக்களின் நிலங்களை மீண்டும் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கஜன் இராமநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

13 நாட்கள் மட்டுமே நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாத கூட்டங்களின் போது 20 கோடி ரூபாய் செலவு !

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள், மின்சாரம், நீர், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக இவை செலவிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் விவாதம் நடைபெற்ற மொத்த நாட்கள் 20 ஆகும்., வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது. பட்ஜெட் குழு விவாதம் நவம்பர் 23ம் திகதி தொடங்கி கடந்த 8ம் திகதி வரை 13 நாட்கள் விவாதம் நடந்தது.

இதேவேளை, கடந்த 13ஆம் திகதி கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கூட்டம் இடம்பெற்ற போது கேள்விகளைக் கேட்ட எம்.பி.க்கள் பலரும், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

அந்தச் சந்திப்பிற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதிக்காக  பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும்.”- எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றுள்ள நிலையில் எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதிக்காக  பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழருக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்தியா அமெரிக்க போன்ற நாடுகள் இருக்க வேண்டும். இவை தான் எமது கோரிக்கையும். இவ்வாறான நிலையில் மிகப்பெரிய இனப்படுகொலை இ்ம்பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நாம் யாரும் தீர்மானிக்க கூடாது, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும் என்று நாம் கேட்டால் பெரும்பான்மையினர் குழம்பிவிடுவார்கள் என்றால் எதற்கு? தமிழர் அடிமை வாழ்க்கை வாழ்வதா?  ஆகவே பொதுஜன வாக்கெடுப்பின்றி எதாவது ஒரு தீர்மானத்தை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொள்ளுமானால் அது தமிழருக்கான அடிமை சாசனம்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சர்வதேசத்தை சமாளிக்கக்கூடியதுமான மிகப்பெரிய உத்தியாகவே அடுத்த சுதந்திர தினத்திற்குள் தீர்வு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு கிடைக்காது என்ற சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் சிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அதிபருடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனியார் – அரச பேரூந்து சாரதிகளுக்கிடையான முட்டாள்தனமான போட்டியால் விபத்து !

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று (17) காலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகளும் குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிக்கு சென்றுள்ளன. இதன் போது குறித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“உலகின் வல்லரசுகள் பக்கம் நிற்காது அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுகிறது.”- ஜனாதிபதி ரணில்

உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை எந்தவொரு அணியுடனும் ஒத்திசைந்து செயற்படவில்லை. மாறாக சுயாதீனமான அணிசேரா நிலைப்பாட்டிலிருந்தே செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ சிப்பாய்களுக்கு பதக்கமளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இராணுவத்தில் தலைவர்கள் என்ற ரீதியில் ஏனைய இராணுவ வீரர்களையும் அதே போன்று நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு காணப்படுகிறது. நாட்டுக்காக நாட்டின் தலைவராக நான் உங்களுக்கு அந்த பொறுப்கை வழங்கியுள்ளேன். எனவே நாட்டை பாதுகாப்பது உங்களது பொறுப்பாகும்.

நாட்டைப் போன்றே நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலமே நாட்டை பாதுகாக்க முடியும். நாட்டை அந்நியர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும். இவ்விரு காரணிகளுமே உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு பயிற்றுவித்த நிறுவனத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். அந்த நற்பெயரை மேலும் மேம்படுத்துங்கள். அதே போன்று நீங்கள் இணையும் இராணுவத்தின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

இந்து சமுத்திரத்தில் எமது நாடு ஒரு சிறிய தீவாகும். நாம் உலக சக்திகளுடன் ஒவ்வொரு குழுவில் இணையவில்லை. எந்தவொரு குழுவுடனும் , உலக சக்திகளுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளப் போவதில்லை. உலகில் தனி நாடாகக் காணப்படுகின்றோம். எம்மைப் போன்று சிறிய தனித்துள்ள நாடுகள் பல உள்ளன. இவ்வாறிருக்கும் போது ஏனைய நாடுகளுடனான நட்புறவை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகிறது.

உங்களின் பொறுப்பு நாட்டை பாதுகாப்பதாகும். உள்ளக மற்றும் வெளிக்கள சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும். ஐ.நா. இராணுவம் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடனும் இணைந்து சேவையாற்ற வேண்டியுள்ளது. நீங்கள் இணையும் இராணுவம் யுத்த அனுபவம் கொண்டதாகும். இரு தசாப்தங்களுக்கும் அதிக காலம் யுத்தத்தில் ஈடுபட்டு , ஒழுக்கமும் அனுபவமும் பெற்ற இராணுவமாகும்.

இன்று ஐ.நா.விற்காக மாலி நாட்டின் இராணுவத்துடன் இணைந்து சேவையாற்றும் இராணுவமாகும். இவ்வாறானதொரு இராணுவத்திலேயே நீங்கள் இணைகின்றீர்கள். இவ்வாறான இராணுவத்தில் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு நீங்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பலமற்றவர்களாக இருந்தால் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது கடினமாகும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவால்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை ஏற்று புத்தி கூர்மையுடன் செயற்பட வேண்டும். அச்சமின்றி முன்னோக்கிச் செல்வதற்கான சக்தி காணப்பட வேண்டும். நாடு உங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பினை நிறைவேற்றுங்கள் என்றார்.

மூன்று இலட்சம் அரச ஊழியர்களை நீக்கினால் பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் – எம்.எம்.பி.கே. மாயாதுன்ன

ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலாளர் வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஓராண்டில் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும், இவ்வளவு தொகை மீண்டும் அரசுப் பணியில் சேர்க்கப்படாது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் கூறுகிறார்.

மேலும், ஐந்து வருட காலத்துக்கு அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அரச சேவையை திட்டமிட்ட வகையில் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகளாகக் குறைப்பதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் சுமார் இருபத்தைந்தாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அறுபது வயதை அடையும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த 5ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

ஒரே நாளில் 122 பாடசாலைகளில் திடீர் போதைப்பொருள் சோதனை – 75 பேர் கைது !

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 75 பேர் விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகளில் நேற்று நண்பகல் முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 கிலோ 148 கிராம் மாவா, 9 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

15 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனுக்கான நீதி தேடியலைந்த தாய் நீதி கிடைக்காமலேயே மரணம் !

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார்.

உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான இவர் உண்மை புலப்படாமலேயே நோய் காரணமாக காலமாகியுள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில் நேற்று காலமாகியுள்ளார்.

இவரது மகன் 1991.02.02 பிறந்த இராமச்சந்திரன் செந்தூரன் என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தினக்கூலி வேலைக்குச் சென்ற வேளை 2007.05.17 அன்று கடத்தப்பட்டதாகவும், அவ்வாறு கடத்தப்படும் போது அவருக்கு வயது 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி பல வருடங்களாக போராடிய தாய் இறுதி வரை மகனைக் காணாமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவு !

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களுக்கு விசேட முக்கியத்துவம் அளித்து பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை பாராளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடும் வகையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தேசிய ஆணையத்தை அமைப்பதற்கும், பெண்களின் உரிமைகளுக்காக ஒம்புட்ஸ்மேன் நியமனம், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அத்தகைய உரிமைகள் மீறப்பட்டால் ஆணையம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் உட்பட ஒரு பொறிமுறையை நிறுவுவதற்காக இந்த சட்டமூலம் வரைவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள், பாலின நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகளின் கருத்துக்களைப் பெறுமாறு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களிலும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையிலும், பத்திரிகை விளம்பரங்களாகவும் பிரசுரிக்கப்பட்டு, சட்டமூலம் தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் – வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி  சுகாதாரத் பணிப்பாளர்

வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி  சுகாதாரத் பணிப்பாளர் வைத்தியர் சிவகுருநாதன்  வசிகரன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்

காலநிலை சீரின் மையினால் கடந்த வாரம் வடக்கில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன வடக்கில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கூடியதாகவும் இந்த கால்நடைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடியதாகவும் சில திட்டங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கு மாகாண ஆளுநருடைய எண்ணத்தில் உருவான பாதுகாப்பான புகழிடங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றது கட்டாக்காலி மாடுகளை ஒரு ஜீவராசிகளாக கணித்து அவர்களுக்கு ஒரு வாழ்விடத்தை கொடுக்க வேண்டும்.

அவற்றுக்கு உணவை வழங்க வேண்டும் உணவும் அவர்களுக்கான உறையுளும் வாழுகின்ற உரிமையும் மனிதருக்கு இருப்பதைப் போல சகல மிருகங்களுக்கும் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவது எமது இலங்கை அரசாங்கத்தினுடைய சட்டங்களிலே பெரும்பாலான சட்டங்களாக இருக்கின்றன வன விலங்குகளுக்கும் இதே போல ஒரு சட்ட நடைமுறை காணப்படுகின்றது.

ஆகவே இந்த மிருகங்களை நாங்கள் வதை செய்யாது அவற்றிற்கு ஒரு பொருத்தமான வாழ்விடத்தை வழங்கும் அதே நேரம் விவசாயம் மற்றும் வீதி போக்குவரத்து போன்றவற்றுக்கு இடையூறு இல்லாதவாறு செய்யக்கூடிய கால்நடைகளுக்கான புகலிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது வடக்கு ஆளுநர் உடைய ஒரு நீண்ட கால கருத்தாகவும் கோரிக்கையாகவும் இருக்கின்றது.

ஆகவே அந்த கோரிக்கையிலே நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் இதற்காக நிறைய நிதி தேவைப்படும் இவற்றுக்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள உணவு வழங்குவதற்கு என நிறைய நிதி தேவைப்படும் அதே நேரம் அந்த கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய பல்வேறு வருமானங்கள் அவ்வாறான புகழிடத்தை நடத்துபவர்களுக்கு ஓரளவு வருமானத்தை கொடுக்கக்கூடும்.

ஆகவே இதனை பண்ணையாளர்கள் தங்களால் பராமரிக்க முடியாது இந்த சட்டங்களை நாங்கள் நிறைவேற்றியதன் பின்னர் எங்களால் பராமரிக்க முடியாது என கருதுகின்ற மாடுகளாக இருக்கலாம் அல்லது வீதிகளிலே எந்தவித உரிமையாளர்களும் இல்லாத மாடுகளாக இருக்கலாம் அவற்றை இந்த பாதுகாப்பான புகழிடங்களில் கொண்டு வந்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு நடவடிக்கை செய்வதற்கு நாங்கள் பலருடைய ஆதரவினையும் நிதி மற்றும் ஏனைய ஆதரவுகளை பெற வேண்டி உள்ளது எங்களுடைய திணைக்களத்தினை பொறுத்தவரை இவ்வாறான நிலையங்களிலே வளர்க்கப்படுகின்ற மாடுகளுக்கான சுகாதாரம் அல்லது அவற்றுக்கான சுகநலன்களை பராமரிப்பதற்கு ,சிகிச்சை தொழில்நுட்ப ,ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு நிலையங்களை நடத்துவதற்கு ஆலயங்கள் ஆலய பரிபாலன சபைகள் மற்றும் இந்து புத்த சமய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நபர்கள் முன்வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு தேவையான பூரண ஒத்துழைப்பினை வழங்கி அந்த நிலையங்களை நடத்துவதற்கான காணிகள் இனம் கண்டு அவற்றை அவர்களுக்கு விடுவித்து அந்த நிலையங்களில் உருவாகின்ற சேதன பசளைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு போன்ற பல்வேறு உதவிகளை அரச நிறுவனங்கள் என்ற ரீதியில் நாங்கள் செய்யலாம்.

ஆகவே இந்த கோரிக்கையினை சமூக ஆர்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் கருத்தில் எடுத்து அவ்வாறு யாராவது இந்த நடவடிக்கை கொண்டு நடத்த விரும்பினால் வடக்கு மாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டு அதனை செயல்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.