December

December

கிளிநொச்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார் !

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடைந்தது.

வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர். ஆளுநர் இல்லாத நிலையில் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பதிலை தருவதாக ஆளுநரின் செயலர் தமக்கு வாக்குறுதியளித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் இடம்பெற்றவேளை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஆளுநர் செயலக நுழைவாயில் வழிமறிக்கபட்டு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவு !

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் முதலாவது தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில் அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அல்லது அவர் காணாமல் போனமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்னுமொரு வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்னால் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மூன்று வழக்குகளும் அடுத்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி நீதிமன்றத்தினால் வரவழைக்கப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

“பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதால் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள்.”- ஜனாதிபதி ரணில் !

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் கீழ் பதுளை மாவட்டத்துக்கான வேலைத்திட்டத்தில் நேற்று (15) இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்திலும், எந்த நாடும் எமக்கு கடன் வழங்க முன்வந்திராத நிலையிலுமே நாம் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினோம்.

2023 ஆம் ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முகங்கொடுப்பதற்காகவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை நாம் தொடங்கினோம். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் பற்றி மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன். அப்போது உங்களுக்கு புதிய தரவுகள் கிடைக்கலாம். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முறையான முறையில் மேற்கொள்வோம். இந்த திட்டம் 2023க்கு பின்னரும் முடிவடையாது. அதை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

பிரதேச சபைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். எனினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை நாம் வழங்கி வருகின்றோம். இம்முறை பெரும்போகம் வெற்றி பெற்றுள்ள அதேநேரம் எதிர்காலத்தில் எமக்கு மேலதிக அரிசி கையிருப்பும் கிடைக்கும்.

அங்கே போதிய களஞ்சிய வசதிகள் இல்லாமைக் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அப்பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கிடையே நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

பதுளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தையும் நாம் தயாரித்து வருகிறோம்.” என குறிப்பிட்டார்.

தற்போது ரணில் – ராஜபக்ச அரசாங்கமே செயற்படுகிறது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

வரவிருக்கும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என்பதனை எதிர்காலத்தில் முடிவெடுப்போம் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று (15) நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமையுமா..? என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தற்போது ரணில் – ராஜபக்ச அரசாங்கம் இருப்பதாக குறிப்பிட்டார்.

இரு தரப்பும் அனுபவம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் கூட்டணி பிரச்சினை வேண்டாம் என்று கூறிய அமைச்சர் ஏற்கனவே பல அரசியல் கட்சிகளை இந்த கூட்டணியில் சேர்த்துவிட்டோம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது அவரது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் வரவிருக்கும் எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார் என்றும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அனைவரும் அனைவரும் கூட்டணிகளை அமைத்து ஒரே இடத்திற்கு வந்து சேர முடியுமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி தீ வைக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க தயாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இதற்கு பதிலளித்த அமைச்சர்,

வீடுகள் எரிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.

“கடந்த மே 09 ஆம் திகதி, இந்த சம்பவம் ஜனதா விமுக்தி பெரமுன பெரட்டுஹாமி கட்சியால் செய்யப்பட்டது. இவர்கள் தான் நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வர முடியாத ஒரு குழு. எங்களை அடித்து கொன்று அவர்களின் சக்தியை உறுதிப்படுத்தவும் நினைத்தனர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் இப்போது நாட்டிற்கு முன்னால் வந்து தற்போதைய உண்மை நிலையை எடுத்துச் சொல்கின்றார்கள். இறுதியில். இறுதியில் போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா அடிமைகள், விபச்சாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தனர். நான் பாராளுமன்றத்தில் சொன்னதையே இன்று போராட்டக்காரர்கள் வந்து நாட்டுக்கு சொல்கிறார்கள். மீண்டும் போராட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள். அமைதியான போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றவர்கள் பற்றி கூறப்படுகிறது.

மே 9 அன்று எண்ணூறு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு எதிர்பார்க்கின்றனர். சிலர் எடுக்க மாட்டார்கள். ஆனால் இதை சர்வதேச பாராளுமன்ற அமைப்புக்கு எழுதியுள்ளோம். வீடுகளுக்கு தீ வைக்கும் சிலர் இன்று ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல பேசுகின்றனர். இவை சமகி ஜன பலவேகய, ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டன. இந்த தீ வைப்பு சம்பவங்களால் சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தொகை முறையாக கிடைக்குமா..? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எந்த பிரச்சினையும் வராது என்று அமைச்சர் கூறினார். நல்லிணக்கம் தொடர்பாக அனைத்துக் கட்சி மாநாடு கூட்டப்பட்டது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக நாட்டில் ஸ்திரமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததோடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச சந்தர்ப்பம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். தனித்தனியாக செயற்படுவதன் மூலம் நாடு நன்மை அடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் நியமனம் நாளை செய்யப்படலாம். ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அந்த சவாலை அவர்கள் அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் ரணதுங்க கூறினார். மேலும் யாப்பின் படி நியமிக்க முடியுமான அமைச்சர்களின் எண்ணிக்கையை நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கே துறைசார் குழுக்களின் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார். இது சலுகைகளை வழங்குவது அல்ல என்றும் அனவரினதும் ஒத்துழைப்பைப் பெறும் முயற்சி என்றும் அமைச்சர் கூறினார்.

உற்பத்தி திறனில்லாத 17 அரச நிறுவனங்களை மூட திட்டம் !

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய உப குழுவில் தெரியவந்துள்ளது.

மேலும் 52 அரச நிறுவனங்கள் மூலோபாய ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும் என உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பணத்தை அதிகமாக அச்சிட்டமையினால், பணவீக்கம் ஏற்பட்டமையை அனைவரும் அறிவார்கள். இதனால் வட்டி விகிதங்கள் அதிகரித்தன. திறைசேரி பற்றுச்சீட்டுகளுக்கு 33 தொடக்கம் 37 வீதம் வரை செலுத்தப்படுகிறது.

இதனால் இன்று வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சுற்றுலா, புனர்நிர்மாணம், மின்சக்தி மற்றும் எரிசக்தி ஆகிய மூன்று துறைகளும் அண்ணளவாக 2 ட்ரில்லியன் பெறுமதியான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் !

இந்த ஆண்டு இதுவரை HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் நவம்பர் மாதத்தில் மாத்திரம் 90 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

HIV சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

HIV சுய பரிசோதனை கருவிகள் நாடு முழுவதிலும் உள்ள STD சிகிச்சை மையங்களில் கிடைக்கின்றன, சிகிச்சை மையங்களுக்கு செல்ல விரும்பாதவர்கள் https://know4sure.lk/ இணையத்தளத்தின் ஊடாக பதிவுசெய்து HIV பரிசோதனை கருவியை வீட்டிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் 640,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அமைச்சு!

நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாபயணிகளின் வருகை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

20 நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதோடு. அதில் 108,510 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும், 74,713 ரஷ்ய பிரஜைகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள்.”- சஜித் பிரேமதாச

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற சர்வ கட்சி கலந்துரையாடலின் போது அதிபர் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

வடக்கு – கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது” – எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தனியே தேர்தலில் போட்டியிடக் தயாராகும் பங்காளி கட்சிகள் – உறுதிப்படுத்திய சுமந்திரன்!