16

16

வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் – வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி  சுகாதாரத் பணிப்பாளர்

வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி  சுகாதாரத் பணிப்பாளர் வைத்தியர் சிவகுருநாதன்  வசிகரன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்

காலநிலை சீரின் மையினால் கடந்த வாரம் வடக்கில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன வடக்கில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கூடியதாகவும் இந்த கால்நடைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடியதாகவும் சில திட்டங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கு மாகாண ஆளுநருடைய எண்ணத்தில் உருவான பாதுகாப்பான புகழிடங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றது கட்டாக்காலி மாடுகளை ஒரு ஜீவராசிகளாக கணித்து அவர்களுக்கு ஒரு வாழ்விடத்தை கொடுக்க வேண்டும்.

அவற்றுக்கு உணவை வழங்க வேண்டும் உணவும் அவர்களுக்கான உறையுளும் வாழுகின்ற உரிமையும் மனிதருக்கு இருப்பதைப் போல சகல மிருகங்களுக்கும் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவது எமது இலங்கை அரசாங்கத்தினுடைய சட்டங்களிலே பெரும்பாலான சட்டங்களாக இருக்கின்றன வன விலங்குகளுக்கும் இதே போல ஒரு சட்ட நடைமுறை காணப்படுகின்றது.

ஆகவே இந்த மிருகங்களை நாங்கள் வதை செய்யாது அவற்றிற்கு ஒரு பொருத்தமான வாழ்விடத்தை வழங்கும் அதே நேரம் விவசாயம் மற்றும் வீதி போக்குவரத்து போன்றவற்றுக்கு இடையூறு இல்லாதவாறு செய்யக்கூடிய கால்நடைகளுக்கான புகலிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது வடக்கு ஆளுநர் உடைய ஒரு நீண்ட கால கருத்தாகவும் கோரிக்கையாகவும் இருக்கின்றது.

ஆகவே அந்த கோரிக்கையிலே நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் இதற்காக நிறைய நிதி தேவைப்படும் இவற்றுக்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள உணவு வழங்குவதற்கு என நிறைய நிதி தேவைப்படும் அதே நேரம் அந்த கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய பல்வேறு வருமானங்கள் அவ்வாறான புகழிடத்தை நடத்துபவர்களுக்கு ஓரளவு வருமானத்தை கொடுக்கக்கூடும்.

ஆகவே இதனை பண்ணையாளர்கள் தங்களால் பராமரிக்க முடியாது இந்த சட்டங்களை நாங்கள் நிறைவேற்றியதன் பின்னர் எங்களால் பராமரிக்க முடியாது என கருதுகின்ற மாடுகளாக இருக்கலாம் அல்லது வீதிகளிலே எந்தவித உரிமையாளர்களும் இல்லாத மாடுகளாக இருக்கலாம் அவற்றை இந்த பாதுகாப்பான புகழிடங்களில் கொண்டு வந்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு நடவடிக்கை செய்வதற்கு நாங்கள் பலருடைய ஆதரவினையும் நிதி மற்றும் ஏனைய ஆதரவுகளை பெற வேண்டி உள்ளது எங்களுடைய திணைக்களத்தினை பொறுத்தவரை இவ்வாறான நிலையங்களிலே வளர்க்கப்படுகின்ற மாடுகளுக்கான சுகாதாரம் அல்லது அவற்றுக்கான சுகநலன்களை பராமரிப்பதற்கு ,சிகிச்சை தொழில்நுட்ப ,ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு நிலையங்களை நடத்துவதற்கு ஆலயங்கள் ஆலய பரிபாலன சபைகள் மற்றும் இந்து புத்த சமய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நபர்கள் முன்வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு தேவையான பூரண ஒத்துழைப்பினை வழங்கி அந்த நிலையங்களை நடத்துவதற்கான காணிகள் இனம் கண்டு அவற்றை அவர்களுக்கு விடுவித்து அந்த நிலையங்களில் உருவாகின்ற சேதன பசளைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு போன்ற பல்வேறு உதவிகளை அரச நிறுவனங்கள் என்ற ரீதியில் நாங்கள் செய்யலாம்.

ஆகவே இந்த கோரிக்கையினை சமூக ஆர்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் கருத்தில் எடுத்து அவ்வாறு யாராவது இந்த நடவடிக்கை கொண்டு நடத்த விரும்பினால் வடக்கு மாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டு அதனை செயல்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.

கிளிநொச்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார் !

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடைந்தது.

வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர். ஆளுநர் இல்லாத நிலையில் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பதிலை தருவதாக ஆளுநரின் செயலர் தமக்கு வாக்குறுதியளித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் இடம்பெற்றவேளை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஆளுநர் செயலக நுழைவாயில் வழிமறிக்கபட்டு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவு !

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் முதலாவது தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில் அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அல்லது அவர் காணாமல் போனமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்னுமொரு வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்னால் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மூன்று வழக்குகளும் அடுத்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி நீதிமன்றத்தினால் வரவழைக்கப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

“பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதால் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள்.”- ஜனாதிபதி ரணில் !

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் கீழ் பதுளை மாவட்டத்துக்கான வேலைத்திட்டத்தில் நேற்று (15) இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்திலும், எந்த நாடும் எமக்கு கடன் வழங்க முன்வந்திராத நிலையிலுமே நாம் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினோம்.

2023 ஆம் ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முகங்கொடுப்பதற்காகவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை நாம் தொடங்கினோம். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் பற்றி மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன். அப்போது உங்களுக்கு புதிய தரவுகள் கிடைக்கலாம். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முறையான முறையில் மேற்கொள்வோம். இந்த திட்டம் 2023க்கு பின்னரும் முடிவடையாது. அதை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

பிரதேச சபைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். எனினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை நாம் வழங்கி வருகின்றோம். இம்முறை பெரும்போகம் வெற்றி பெற்றுள்ள அதேநேரம் எதிர்காலத்தில் எமக்கு மேலதிக அரிசி கையிருப்பும் கிடைக்கும்.

அங்கே போதிய களஞ்சிய வசதிகள் இல்லாமைக் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அப்பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கிடையே நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

பதுளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தையும் நாம் தயாரித்து வருகிறோம்.” என குறிப்பிட்டார்.

தற்போது ரணில் – ராஜபக்ச அரசாங்கமே செயற்படுகிறது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

வரவிருக்கும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என்பதனை எதிர்காலத்தில் முடிவெடுப்போம் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று (15) நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமையுமா..? என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தற்போது ரணில் – ராஜபக்ச அரசாங்கம் இருப்பதாக குறிப்பிட்டார்.

இரு தரப்பும் அனுபவம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் கூட்டணி பிரச்சினை வேண்டாம் என்று கூறிய அமைச்சர் ஏற்கனவே பல அரசியல் கட்சிகளை இந்த கூட்டணியில் சேர்த்துவிட்டோம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது அவரது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் வரவிருக்கும் எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளார் என்றும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அனைவரும் அனைவரும் கூட்டணிகளை அமைத்து ஒரே இடத்திற்கு வந்து சேர முடியுமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி தீ வைக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க தயாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இதற்கு பதிலளித்த அமைச்சர்,

வீடுகள் எரிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.

“கடந்த மே 09 ஆம் திகதி, இந்த சம்பவம் ஜனதா விமுக்தி பெரமுன பெரட்டுஹாமி கட்சியால் செய்யப்பட்டது. இவர்கள் தான் நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வர முடியாத ஒரு குழு. எங்களை அடித்து கொன்று அவர்களின் சக்தியை உறுதிப்படுத்தவும் நினைத்தனர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் இப்போது நாட்டிற்கு முன்னால் வந்து தற்போதைய உண்மை நிலையை எடுத்துச் சொல்கின்றார்கள். இறுதியில். இறுதியில் போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா அடிமைகள், விபச்சாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தனர். நான் பாராளுமன்றத்தில் சொன்னதையே இன்று போராட்டக்காரர்கள் வந்து நாட்டுக்கு சொல்கிறார்கள். மீண்டும் போராட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள். அமைதியான போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றவர்கள் பற்றி கூறப்படுகிறது.

மே 9 அன்று எண்ணூறு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு எதிர்பார்க்கின்றனர். சிலர் எடுக்க மாட்டார்கள். ஆனால் இதை சர்வதேச பாராளுமன்ற அமைப்புக்கு எழுதியுள்ளோம். வீடுகளுக்கு தீ வைக்கும் சிலர் இன்று ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல பேசுகின்றனர். இவை சமகி ஜன பலவேகய, ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டன. இந்த தீ வைப்பு சம்பவங்களால் சொத்துக்கள் அழிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தொகை முறையாக கிடைக்குமா..? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எந்த பிரச்சினையும் வராது என்று அமைச்சர் கூறினார். நல்லிணக்கம் தொடர்பாக அனைத்துக் கட்சி மாநாடு கூட்டப்பட்டது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக நாட்டில் ஸ்திரமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததோடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச சந்தர்ப்பம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். தனித்தனியாக செயற்படுவதன் மூலம் நாடு நன்மை அடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் நியமனம் நாளை செய்யப்படலாம். ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அந்த சவாலை அவர்கள் அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் ரணதுங்க கூறினார். மேலும் யாப்பின் படி நியமிக்க முடியுமான அமைச்சர்களின் எண்ணிக்கையை நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கே துறைசார் குழுக்களின் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார். இது சலுகைகளை வழங்குவது அல்ல என்றும் அனவரினதும் ஒத்துழைப்பைப் பெறும் முயற்சி என்றும் அமைச்சர் கூறினார்.

உற்பத்தி திறனில்லாத 17 அரச நிறுவனங்களை மூட திட்டம் !

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய உப குழுவில் தெரியவந்துள்ளது.

மேலும் 52 அரச நிறுவனங்கள் மூலோபாய ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும் என உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பணத்தை அதிகமாக அச்சிட்டமையினால், பணவீக்கம் ஏற்பட்டமையை அனைவரும் அறிவார்கள். இதனால் வட்டி விகிதங்கள் அதிகரித்தன. திறைசேரி பற்றுச்சீட்டுகளுக்கு 33 தொடக்கம் 37 வீதம் வரை செலுத்தப்படுகிறது.

இதனால் இன்று வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சுற்றுலா, புனர்நிர்மாணம், மின்சக்தி மற்றும் எரிசக்தி ஆகிய மூன்று துறைகளும் அண்ணளவாக 2 ட்ரில்லியன் பெறுமதியான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் !

இந்த ஆண்டு இதுவரை HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் நவம்பர் மாதத்தில் மாத்திரம் 90 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

HIV சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

HIV சுய பரிசோதனை கருவிகள் நாடு முழுவதிலும் உள்ள STD சிகிச்சை மையங்களில் கிடைக்கின்றன, சிகிச்சை மையங்களுக்கு செல்ல விரும்பாதவர்கள் https://know4sure.lk/ இணையத்தளத்தின் ஊடாக பதிவுசெய்து HIV பரிசோதனை கருவியை வீட்டிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.