19

19

இலங்கை மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான 70 சதவீத சீருடைகளை வழங்கும் சீனா !

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதரகம் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நன்கொடையின் மூலம் நாட்டின் வருடாந்த சீருடை துணி தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நன்கொடையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ள சீருடை துணிகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 5 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சீருடைகளின் முதல் பகுதி ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வி – பிரான்ஸ் முழுவதும் கலவரம் !

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.

பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.

பரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான Champs-Elysees பகுதியில் கலகத் தடுப்பு காவல்துறையினருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனிடையே, லியான் பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து கலகத் தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேசியைக் கொடிய போர்த்தியபடி கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை காவல்துறையினர் மீது கால்பந்து ரசிகர்கள் வீசியுள்ளனர். சில பகுதிகளில் கூட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைதாகியுள்ளனர்.

புதன்கிழமை, மொராக்கோவுக்கு எதிரான உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வன்முறை மோதல்கள் வெடித்ததில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானதைத் தொடர்ந்து பரிஸ் நகர தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதேபோன்று, பிரஸ்ஸல்ஸில் ரசிகர்கள் தெருவில் தீ வைத்து, பட்டாசுகளை வீசியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்தின் அமைச்சு பதவியை ஏற்க போவதில்லை.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

“மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்தின் அமைச்சு பதவியை ஏற்க போவதில்லை.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற 43ஆவது படையணியின் நிகழ்வில்  கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை தைரியப்படுத்தும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஈடுப்பட்டுள்ளார்.இவரது தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிபொருள்,எரிவாயு,மருந்து உட்பட அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்கு இன்றும் நெருக்கடி நிலை காணப்படுகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையை பஷில் ராஜபக்ஷவே தோற்றுவித்தார்.

நாட்டு மக்கள் தமக்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தை வழங்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்டு ஒரு முயற்சியில் பஷில் ராஜபக்ஷ ஈடுப்பட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை அவர் நினைத்த வேளையில் அமெரிக்காவுக்கு செல்லலாம்,ஆகவே பொதுஜன பெரமுனவினர் அவரை நம்பியிருப்பது பயனற்றது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. நாட்டு மக்கள் இனியொரு போதும் ராஜபக்ஷர்களிடம் தவறுதலாக கூட ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்கும் அளவிற்கு நான் கீழ் நிலையாகவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் பிரதிநிதி ஆகவே அவர் அவர்களின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவார் என்றார்.

லண்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது !

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த நபரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலையில் உள்ள விகாரை ஒன்றில் குளத்தை பார்வையிடச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஹங்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடையவராவார். இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவினர்கள் போராட்டம் !

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் நடத்துவதற்காக 19 மற்றும் 20ம் திகதிகளில் 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு அலுவலம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என்றும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகள் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்தால், மற்றுமொரு வாகனத்தில் வந்த அதிகாரிகள் மாற்று பாதை ஊடாக உள்ளே சென்ற நிலையில், மக்கள் உள்ளே சென்று அதிகாரிகளை வெளியே சென்று பதிலளிக்குமாறு தெரிவித்து அனைவரையும் வெளியே அழைத்தனர்.

இறுதியாக அதிகாரிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். குறித்த விசாரணையை நிறுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியநிலையில், விசாரணைகள் எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு அதிகளவான காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள் வந்த நிலையில், தங்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் பலி – ட்வீட் செய்த ஒஸ்கார் விருது நடிகை கைது !

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன. இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேசையில் விழுந்து கிடந்த சோற்றை நாக்கினால் நக்கி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் பணித்த அதிபருக்கு இடமாற்றம் !

மாணவர்கள் தமது மதிய உணவை முடித்துவிட்டு மேசையில் விழுந்து கிடந்த சோற்றை நாக்கினால் நக்கி சுத்தம் செய்யுமாறு மாணவர்களிடம் பணித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாத்தறை கொடௌட மகா வித்தியாலய அதிபர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டதுடன், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த சம்பவத்தை பாடசாலையின் ஊழியர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணை முடியும் வரை குறித்த அதிபர் தற்காலிகமாக மாத்தறை பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

குடி வெறியில் புதுமுக மலையக மாணவனை தாக்கிய யாழ்ப்பாண மாணவன் – பேராதனையில் சம்பவம் !

பேராதனைப்பல்கலைகழகத்தில் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவமொன்று சனிக்கிழமை (17) பதிவாகியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் வைத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வந்த சிரேஷ்ட மாணவன் முதலாம் வருட மாணவனை தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த மாணவன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு மாணவர்கள் கைது !

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் காதலன் என குறிப்பிடும் ஒருவரும், அவரின் நண்பருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழ் மக்களுக்கான தீர்வுதொடர்பில் இந்தியாவின் அனுசரணை தேவையானது.”- மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான தீர்வுதொடர்பில் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு  பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கின்ற போதும் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஆட்சி செய்த நிலங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அது சிங்களவர்களுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்கள்  சுதந்திர தமிழர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே அன்று 1948ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வா தனது  அஹிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்து ஆரம்பித்திருந்தார். அதன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க வின்  கட்சி சிதைந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றத்துக்கு சென்று பிரதமராகி ஜனாதிபதியாகி இருக்கின்றார். இந்த நிலையில், பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினையை  தீர்ப்பதற்கு  அழைத்திருக்கின்றார்.

தமிழ் மக்களுடைய விடுதலையை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் பேச வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.