23

23

கூட்டத்துக்கு தாமதமாக வந்த இலங்கை அமைச்சர் – கடுப்பான தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் !

இலங்கை அமைச்சர்கள் கூட்டங்களுக்கு தாமதமாக வந்ததாக கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் தமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், காணொளி பகிரப்பட்டு வருவதாகக் கூறி, குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்லவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் கூறியிருந்தபோதும், இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முன்னிலையாக தவறிவிட்டார்.

தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று பிற்பகல் 1.50க்கு செல்லப்போவதை செய்தியாக்க வருமாறு அவரின் அமைச்சு ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் இன்று பிற்பகல் 1.50 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், 2.30 மணியாகியும் கூட அங்கு செல்லவில்லை. கடந்த புதன்கிழமை கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் மற்றும் அவரது அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கண்டித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன

இருப்பினும், கொரிய அதிகாரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி தன்னை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

திட்டமிடப்பட்ட கூட்டத்தை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்குவது நல்ல அறிகுறி அல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். தென்கொரியாவில் இது நடந்திருந்தால், இதுபோன்ற அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று தென்கொரிய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எனவே இதுபோன்ற அமைச்சர்களை சந்திப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டால், அது அந்த நேரத்தில், அது ஆரம்பிக்கப்படல் வேண்டும். அத்தகைய அமைச்சர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், அவர்களை சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று லியா தெரிவித்திருந்தார்.

இலங்கையில் பொய் சொல்வதும் வாக்குறுதி கொடுப்பதும் சாதாரண விடயமாகி விட்டது, அது அவர்களின் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது. இலங்கையில் உள்ளவர்களால் அந்தப் பழக்கத்தை மாற்ற முடியாவிட்டால் நாடு வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

குறித்தக் கூட்டம் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முற்பகல் 9.30 மணிக்குப் பிறகு அமைச்சர், அந்தக் கூட்டத்துக்கு சென்றுள்ளார்.

சட்ட விரோதமாக கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 152 பேர் மீண்டும் இலங்கை வர விருப்பம் !

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த போது விபத்தில் சிக்கி, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 இலங்கையர்கள் மட்டுமே இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி அவர் தெரிவித்தார்.

அறியாப் பருவ பெண் பிள்ளையை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய லண்டன் கொலின்டேல் ஆனந்தம் கிரியேசன் நிறுவனரின் குற்றம் நிரூபணமானது!

அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகருக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவர் குறைந்தது ஓரு பெண் பிள்ளையையாவது பாலியல் இம்சைக்கு உட்படுத்தியது தற்போது லண்டன் வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு எதிரான இவ்வழக்கு நவம்பர் 28 முதல் ஏழு வேலை நாட்களுக்கு வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டனைக் காலம் அடுத் அமர்வில் ஜனவரி 3 2023இல் தீர்மானிக்கப்படும் எனவும் மெற் பொலிஸார் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

லண்டனின் வசதிபடைத்த பகுதிகளில் ஒன்றான ஹரோ உள்ளுராட்சிப் பிரிவுக்குள் கொலின்டேல் பகுதி வருகின்றது. இப்பகுதியில் இளையவர்களுக்கான இசை, நடனம் அவற்றை அரங்கேற்றுவது போன் கலைத்துறைசார்ந்த தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரமுகர் பிரேமகுமார் ஆனந்தராஜா. இவர் கலை கலாச்சாரத்தை வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆனந்தம் கிரியேசன் யுகே என்ற நிகழ்வு ஓழங்கமைப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர். இந்த பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற இந்நபரே தற்போது பெண் குழந்தை மீது பாலியல் இச்சையோடு நடந்துகொண்டமை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆனந்தம் கிரியேசன் யூகே 2015இல் யூரியூப்பில் சில கலை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.

இச்சம்பவம் பற்றி பிரேமகுமார் ஆனந்தராஜாவின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் இவ்வாறான ஒரு கீழ்த்தரமான மனநிலை கொண்ட ஒருவரோடு தாங்கள் குடும்ப நண்பராக இருந்தது தற்போது நினைக்கின்ற போது அருவருப்பாக உணர்வதாகத் தெரிவித்தார். “எனக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களோடும் இவர் பழகி உள்ளார். ஆனால் நாங்கள் ஒரு போதும் யாருடனும் பிள்ளைகளைத் தனிய அனுமதிப்பதில்லை” என்றும் “பிரேம் இம்சைக்கு உட்படுத்தியதாக அறியவருபவர்கள் இவருடைய நண்பர்களின் குழந்தைகளே” என்றும் மிகுந்த கோபத்தோடு அவர் பதிலளித்தார். “பிரேம் தன்னுடைய குடும்பத்துக்கும் எங்களைப் போன்ற நண்பர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளார்” என வாரத்தைகள் தடம்புரள சினத்தோடு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

யாழ்ப்பாணம் புங்குடு தீவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரேமகுமார் ஆனந்தராஜா 1961 பிறந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். தற்போது 61வது வயதையெட்டுபவர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியப் பெண்ணை 1990க்களில் மணந்தவர். பதின்ம வயதைக் கடந்த கலைத்துறையில் ஆர்வமுள்ள இரு ஆண் குழந்தைகளின் தந்தை. இவருக்கு கொலின்டேலில் கடையும் உள்ளது. இரு சகோதரர்கள் மூன்று சகோதரிகள் என்று அவர்களும் கொலிடேலிலும் லண்டனின் ஏனைய பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளவர்கள்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தீயசெயல் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நெருக்கடியையும் அவருடைய மனைவி பிள்ளைகளுக்கு மிகுந்த அவமானத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மற்றுமொரு நண்பர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். அவருடைய ஒரு மகளும் வேறொருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகி இன்றும் மனவேதனையில் இருப்பவர். பிரேம் இப்படிப்பட்ட ஒருவன் என்ற சந்தேகம் முன்னம் உங்களுக்கு இருந்ததா என்று கேட்டபோது, “அவ்வாறன ஒருவன் என்று எந்த சந்தேசமும் தனக்கு ஏற்பட்டதில்லை” என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நான் எண்ணி வருந்துகிறேன். அதேநேரம் அவன் ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று எண்ணும் போது எனக்கு மிக வேதனையாக இருக்கின்றது” என்றார். “அவன் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சேர்த்து நாசமாக்கிவிட்டான்” என்று மிகவும் மனம் புலங்கினார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் இச்செயல் தமிழ் சமூகத்திற்குள் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. பெரும்பாலும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் இம்சைகள் குடும்ப உறவுகள் நட்புகளினாலேயே ஏற்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை இச்சம்பவம் மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கின்றது. தமிழ் சமூகங்களினுள் இவ்வாறான பல சம்பவங்கள் பரவலாக இடம்பெற்ற போதும் இவ்வாறான சம்பவங்கள் அக்குடும்பங்களின் கதவுகளைத் தாண்டி வெளியே வருவதில்லை என்கிறார் மருத்துவ கலாநிதி ஆர் ராமநாதன்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மூத்த மகன் தனது முகநூலில் ”always my legend“ என்று தந்தையுடன் தான் நிற்கின்ற படத்தை போட்டு பதிவு செய்திருந்தார். அந்த எண்ணங்கள் அத்தனையும் சுக்குநூறாகும் விதத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் செயல்கள் அமைந்துவிட்டது. “பிரேமகுமார் ஆனந்தராஜா இன்னும் எத்தனை குழந்தைகளை இச்சைக்கு உள்ளாக்கி இருப்பார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்” என்கிறார் மற்றுமொரு நண்பர். தன்னுடைய மகளின் அரங்கேற்றத்தைக்கூட பிரேமே ஏற்பாடு செய்து ஒத்துழைத்;ததாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “குழந்தைகள் வளர்ந்து எவ்வளவு மனவுளைச்சலையும் வேதனையையும் தமது வாழ்நாள் முழவதும் சுமப்பார்கள் என்பது மிகுந்த வலியை அவர்களிடம் ஏற்படுத்துவதுடன் சமூகம் பற்றிய அவநம்பிக்கையையும் ஏற்படுத்திவடும்” என்றார். “பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது அவர்களுடைய ரணத்தை ஓரளவு ஆற்றும்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களுடைய வலியைக் கடந்து இந்தக் குற்றத்தை நீதிமன்றில் நிரூபிக்க அப்பிள்ளைகளும் குடும்பத்தினரும் எடுத்த முயற்சிக்கு தமிழ் சமூகம் நிச்சயம் தலைவணங்க வேண்டும் என ஈலிங் ஆலய செயற்குழு உறுப்பினர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மீண்டும் இவ்வாறாண நிகழ்வுகள் நடந்துவிடாமல் இருக்க இவ்வாறான வழக்குகளின் தீர்ப்புகள் மிக அவசியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரேமகுமார் அப்பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு தவறாமல் செல்பவர் என்றும் தெரியவருகின்றது.

இந்த அநீதி லண்டனில் இழைக்கப்பட்டதால் அதற்கான தண்டனையை சட்டமும் காவல்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனால் தாயக மண்ணில் மாணவிகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னமும் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றார்கள். அவர்கள் போடும் தேசியவாதச் சாயம் கலர அவர்கள் அம்மணமாகும் நாள் விரைவில் ஏற்படும்.

சஜித் பிரேமதாசவுக்கு பூரண ஆதரவினை வழங்கத்தயார் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2001 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமிழர்களினுடைய பிரச்சனைக்கான தீர்வை வழங்க முன் வந்த போது அதை தடுத்தவர் தான் தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க. ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்குவதில் ஆர்வமாக உள்ளார்.

பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய பேச்சுக்களின் போது எதிர்க்கின்ற நிலையே  காணப்பட்டாலும் கூட சஜித் பிரேமதாச இதிலிருந்து வேறுபடுகிறார்.

இதனால் எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக சஜித் பிரேமதாச ஒத்துக்கொண்டால் அவருக்கான முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சீகிரியா குன்றை பார்வையிட வெளிநாட்டவர்களிடம் 11,000 அறவீடு – வருகை தர மறுக்கும் சுற்றுலா பயணிகள்!

சீகிரியா குன்றுக்கு  ஏறுவதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து வருவதாக சீகிரிய பிரதேச சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் மாதம் சிறந்த சுற்றுலா மாதமாக இருந்தாலும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் !

முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

கொலை செய்த சிறுமிகளுக்கும் இறந்த முதியவருக்கும் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. டொரன்டோ ரெயில் நிலையம் அருகே முதியவரும், சிறுமிகளும் சந்தித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி இறுதியில் சிறுமிகள் ஆத்திரத்தில் கத்தியால் அந்த 59 வயது முதியவரை குத்திக்கொலை செய்துள்ளனர்.

கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சிறுமிகள் 13 மற்றும் 16 வயதினரே ஆவர். 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FIFA கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவது போல சைகை செய்த சமையல் கலை நிபுணர் – விசாரணைகளை ஆரம்பிக்கிறது FIFA !

உலகக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே  அனுமதியின்றி மைதானம் நுழைந்து உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தி முத்தமிட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

50 மில்லியன் மக்கள் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கேவின் குறித்த செய்கைக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பிபா எனப்படும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கால்பந்து இறுதிப்போட்டியின் பின் “சால்ட் பே (Salt Bae)” எனப்படும் துருக்கியேவின் பிரபல சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே  திடீரென மைதானம் நுழைந்ததால் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தைத் தனது கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்டதோடு கிண்ணத்தின் மீது உப்பைத் தூவுவதுபோல வழக்கமான தமது சைகையைச் செய்துள்ளார்.

அர்ஜென்டினா அணி வீரர் ஒருவரின் பதக்கத்தை தமது பற்களால் கடித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அவரது குறித்த செய்கைகள் பிபா விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை வென்றவர்கள், பிபா நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் போட்டியை ஏற்று நடத்தும் நாட்டின் தலைவர்கள் மட்டுமே கிண்ணத்தைக் கைகளில் ஏந்த முடியும் என்பது பிபாவின் விதிமுறையாக உள்ளது.

இந்த நிலையில், குறித்த விதிமுறைகளை மீறியதாக சமையல்கலை நிபுணர் நுஸ்ரெத் கோக்கே மீது விசாரணைகளை முன்னெடுக்க பிபா தீர்மானித்துள்ளது.

ஆரம்பகட்டமாக, நுஸ்ரெத்தைத் மைதானத்திற்குள் நுழைய யார் அனுமதி கொடுத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 பேர் கைது !

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லிகிராம் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, இது தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

15 வயது பாடசாலை மாணவி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு !

இரத்தினபுரி இறக்குவானை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான இந்த சந்தேக நபர் இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பின்னர், சந்தேக நபரின் இரண்டு நண்பர்கள் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக இறக்குவானை காவல் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்ததால், அவர் அருகில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பாட்டி வெயிலில் காயவைப்பதற்காக மிளகாய்களை சிறுமியிடம் கொடுத்துள்ளார். அதனை காயவைக்க சென்ற போது 24 வயதான நபர் மேலும் இரண்டு பேருடன் வந்து சிறுமியை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன் ஏனைய இருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து பாட்டியின் வீட்டுக்கு அருகில் கைவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பாட்டியின் வீட்டுக்கு சென்ற சிறுமி மதுபோதையில் ஆபாச வார்த்தைகளை கூறிக்கொண்டு பதற்றமாக நடந்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைகளை மேற்கொண்டு சிறுமியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி வழங்கிய தகவல்களுக்கு அமைய சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இரண்டு பேரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கர்ரன் !

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது.

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

சாம் கர்ரன் – ரூ.18.50 (பஞ்சாப் கிங்ஸ்) கேமரூன் கிரீன் – ரூ.17.50 (மும்பை இந்தியன்ஸ்) பென் ஸ்டோக்ஸ் – ரூ.16.25 (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஹாரி புரூக்- ரூ.13.25 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஜேசன் ஹோல்டர் – ரூ.5.75 (ராஜஸ்தான் ராயல்ஸ்)