January

January

முன்னைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் எகிறிய போதைப்பொருள் பாவனை !

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 742 பேர் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது.
இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகரிப்பானது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 5 ஆம் திகதி, விவசாய பீட கேட்போர் கூடத்தில், இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை, இந்தியாவில் இருந்து வரும், இயற்கை விவசாயம் தொடர்பான விஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளதாகவும், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு விவசாயிகள் பயன் பெற வேண்டும் எனவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி​ சீவரத்தினம் வசந்தரூபா தெரிவித்துள்ளார்.

நேற்று, கிளிநொச்சியில் உள்ள விவசாய பீடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

குன்றும் குழியுமான பாதையால் பறிபோனது சிறுவன் உயிர் – வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவோம் எனக்கூறி மக்கள் போராட்டம் !

“விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்.” இவ்வாறு அட்டன், வெளிஓயா – 22 ஆம் தோட்டப் பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

 

அட்டன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02.01.2023) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறார்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம். இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம்.” – எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் விக்கி தரப்பு..?

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தமிழ்தேசிய கட்சிகள் இன்னமும் ஒரு உறுதியான முடிவுக்கு வராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும் தமது கட்சி இணைவது தொடர்பில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சிக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கையின் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அணியாக போட்டியிடுமெனவும், ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது கால்பந்து நாயகன் பீலேவின் உடல் !

உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

“சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வங்குரோத்து நிலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச தரப்பினர் அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாடு என்பதொன்று மிகுதியாக இருந்தால் தான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. எதிர்தரப்பினர் மாத்திரம் தேர்தலை கோருகிறார்கள்.

தூர நோக்கமற்ற கொள்கை இல்லாத காரணத்தினால் மின்சாரம்,சுகாதாரம், வலுத்துறை ஆகிய துறைகளில் பல பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், எரிபொருள் உள்ளிட்ட சேவைகளின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.

வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை, வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும்.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள். தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.

“பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” – நளின் பண்டார

“பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தின் ஆட்சியாகும்.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், மக்கள் விரும்பும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

எனவே இவ்வாண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு டொலர்கள் தேவையில்லை.

இலங்கை ரூபாவிலேயே தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக நிதி இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமின்றி, அரசாங்கம் முயற்சித்தால் மாகாணசபைத் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும். ஜனாதிபதி விரும்பினால் விரைவில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும். பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தற்போது மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது. சட்டத்தின்படி மின் கட்டணத்தை அதிகரிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அப்பாற்பட்டவரைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் குறிப்பிடுவதைப் போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும். இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும்.

மாறாக எதிர்ப்புக்களை மீறி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலைமையைப் போன்று, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் மோசமானதொரு நிலைமை ஏற்படக் கூடும். மீண்டுமொரு கிளர்ச்சி போராட்டத்தை நடத்துவதற்கு மக்கள் அஞ்சமாட்டார்கள் என்றார்.

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய முயற்சி – இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிகள்!

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் இது தொடர்பில் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற போது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமெரிக்க குடியுரிமைக்கான கோட்டாபயவின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனாலும், தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

” அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பார்க்காது மக்களுக்கு சேவை செய்யுங்கள்.” – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்

அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்து, அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யுக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்று கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

மேலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா, தனது கொரோனா சுகாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.