January

January

பெருவில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் – 60 பேர் வரை பலி !

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 ஜனாதிபதிகளைக் கண்டது. இந்தநிலையில் பெரு ஜனாதிபதி டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின.

போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய தாக்குதலில் லிமாவில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவார். லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது. காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

10 மாத குழந்தை மீது பாலியல் வன்கொடுமை – தந்தை கைது !

தனது10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வர்ணப்பூச்சு தொழிலை மேற்கொண்டு வரும் இவர், மதுபோதையில் வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு!

வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இராணுவம் நிலைக்கொண்டுள்ள தமது காணிகளை விடுவித்து தருமாறு வடக்கு மக்கள் நீண்டகாலம் போராடியும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனடிப்படையில் குறித்த காணிகளில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரையும் முகாம்களையும் அங்கிருந்து வேறு இடங்களுக்கு நகர்த்தி அந்த காணிகளை உரிய மக்களிடம் வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுபாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள 100 ஏக்கர் காணியை உரிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த காணி விடுவிப்பு இடம்பெறுவதுடன், நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு தரப்புகளின் பயன்பாட்டில் மேலும் மக்கள் காணிகள் இருப்பின் அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வேகமெடுக்கும் தொழுநோய் – வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் – தொழுநோய் பற்றிய முழுமையான தகவல்கள் இதோ..!

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு  கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

,………………………………………………………

 

தொழு நோய் என்பது பயப்படும் அளவிற்கு தொற்று நோயல்ல. தொழு நோய்க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல் மற்றும் அவரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து வடியும் நீர் ஒருவர் சருமத்தில் அடிக்கடி படும்போது தொழு நோய் பரவும் வாய்ப்புள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் உள்ள தொழு நோயாளிகள் எண்ணிக்கை 1,80,000 ஆகும். அதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் அதிகமாக தெற்கு பகுதியில், கலிபோர்னியா, ஹவேலி, மற்றும் இதர மாகாணங்களில் அதிக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெதுவாக வளரும் பக்டீரியா வகையைச் சேர்ந்த மைகோபக்டீரியம் லேப்ரே என்ற பாக்டீரியா தொழுநோய்க்கு காரணமாக உள்ளது. 1873 இல் M. லேப்ராவை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரால், தொழுநோய் ஹான்ஸென் நோய் என்றும் அறியப்படுகிறது.

தொழுநோய் முதன்மையாக சருமத்தை பாதிக்கிறது. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும், முதுகுத்தண்டையும் பாதிக்கிறது. தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம் மற்றும் மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம்.

உருச்சிதைக்கும் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறியாகும். சருமத்தில் உள்ள புண் வெளிர் நிறத்தில் காணப்படும்.

கை மற்றும் கால்களில் உணர்வு இழப்பு

. தசைகள் பலவீனமாதல்

 

தொழுநோய் தாக்கும் பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்டு 3 முதல் 5 வருடம் கழித்தே நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும். சில மனிதர்களுக்கு 20 வருடத்திற்கு பின்னும் அறிகுறிகள் தென்படாது. பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்ட காலம் மற்றும் அறிகுறிகள் தென்படும் காலம் ஆகிய இரண்டுக்கும் இடையான காலத்தை இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் காலம் என்று கூறுகின்றனர். இந்த அடை காக்கும் காலம் நீடித்து இருக்கும்போது ஒரு மனிதனுக்கு எப்போது எந்த இடத்தில் தொழு நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு உண்டாகிறது.

சருமத்தில் உண்டாகும் புண்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைப் பொறுத்து தொழு நோய் வகை தீர்மானிக்கப்படுகிறது.

 

ஐயம் உண்டாக்கும் விதத்தில் உங்களுக்கு சருமத்தில் புண் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் புண் பாதிக்கப்பட்ட சருமதின் சிறு பகுதியை எடுத்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்புவார். இதனை ஸ்கின் பயோப்சி என்னும் திசுச் சோதனை என்று கூறுவர்.

ஸ்மியர் டெஸ்ட் என்னும் பரிசோதனையும் செய்யப்படும். ட்யுபர்குலைடு வகை தொழுநோயில் கிருமிகளைக் கண்டறிய முடியாது. இதற்கு மாற்றாக, லேப்ரோமடோஸ் வக்பை தொழுநோயில் ஸ்மியர் பரிசோதனை மூலமாக கிருமிகளைக் கண்டுக் கொள்ள முடியும்.

தொழு நோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாகும். கடந்த 20 ஆண்டுகளில் 16 மில்லியன் மக்கள் தொழுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தொழுநோய் உள்ள நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் இலவச சிகிச்சை வழங்குகிறது.

தொழுநோயின் வகைக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடுகிறது. தொற்று பாதிப்பைப் போக்க நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நீண்ட கால சிகிச்சைக்கு அதாவது குறைந்தது ஆறு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை பரிந்துரைக்கப்படுகின்றன.

தொழு நோயின் தீவிர நிலையில் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நரம்பு சேதங்களை சரி செய்வது இல்லை.

நரம்பு வலியை கட்டுப்படுத்தவும், சேதங்களை சரி செய்யவும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ப்ரெட்னிசோன் போன்ற ஸ்டீராய்டுகளும் அடக்கம். தலிடோமைடு என்னும் மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் வலிமை பெற்றது. இந்த மருந்து தொழுநோய் பாதிக்கப்பட்ட சரும கணுக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

இந்த தலிடோமைடு மருந்து அபாயத்தை விளைவிக்கும் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது.

தொழு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், நிரந்தரமாக உங்கள் சருமம், நரம்புகள், கை, கால்கள், பாதம் மற்றும் கண்கள் பாதிக்கப்படக்கூடும்.

. கண்பார்வை இழப்பு

. முகம் சிதைந்துபோவது (நிரந்தர வீக்கம், கட்டிகள், புடைப்புகள் ஏற்படுவது )

. ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு

. சிறுநீரக செயலிழப்பு

. தசைகள் பலவீனம் காரணமாக கைகள் சூம்பிப் போவது, கால்களில் திடம் இல்லாமல் போவது

. மூக்கின் உட்பகுதியில் நிரந்தர பாதிப்பு, இதன் காரணமாக மூக்கில் இரதம் வடிதல்

. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகள் சேதமடைவது, முதுகுத்தண்டு நரம்புகள் சேதம் அடைவது, கை, கால்கள், பாத நரம்புகள் சேதம் அடைவது.

நரம்புகளில் சேதம் ஏற்படுவதால், மரத்துப் போன நிலை உண்டாகும் அபாயம் ஏற்படலாம். தொழு நோய் தொடர்பான நரம்பு சேதம் உள்ளவர்களுக்கு கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் வெட்டு, எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் அதனால் உண்டாகும் வலியை அவர்களால் உணர முடியாது.

நன்றி :- Tamil Bold Sky

 

 

06 மணித்தியால விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு – 285 பேர் கைது !

கொழும்பில் இன்று (29) காலை 6 மணித்தியாலங்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்த இந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய சோதனையில் 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 1 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, தெற்கிலும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நான் ஒரு போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுக்கவில்லை.” – எம்.ஏ. சுமந்திரன்

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.

அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக அரசு கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள் இன்றைக்கு அந்த கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக அதை இல்லாத ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக் கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

மக்களுக்கு இந்த தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசை தாசன் போட்டியிட்டு இருந்தார். சூசை தாசன் என்பவர் 77 ஆம் ஆண்டு போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் 2010 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார்.அந்த தோல்விக்கான காரணத்தை 2012 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற போது அவரே சொல்லியிருந்தார்.

அவர் பேசுகின்ற போது சொன்னார் நான் தோற்றமைக்கு காரணம் கேட்கின்றார்கள். நான் தோற்றதற்கு காரணம் நான் தூள் கடத்துவதில்லை, நான் ஆள் கடத்துவதில்லை, நான் கொலை செய்வதில்லை அதனால் தான் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொன்னார்.

ஆனால் இன்றைக்கு தமிழரசு கட்சி மக்கள் முன்பாக ஒரு தூய்மையானதாக வந்து நிற்கின்றது. தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை நீங்கள் தாராளமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கலாம்.

இந்த தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம், சாராயம் விநியோகிக்க வேண்டாம் அப்படி செய்கின்ற பலர் இருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இப்போது எங்களுடைய கட்சி இல்லை.

இப்போது வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் மக்களுக்கு சாராயம் விநியோகிக்க வேண்டாம் தூய்மையான சாத்வீக வழியிலான ஒரு போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கினறது.

நெடுங்காலமாக இலங்கை தமிழரசு கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சம்பந்தன் யார் ..?நான் யார்..? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது. இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.

1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார்.

எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்.

இலங்கையில் 11 மில்லியன் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன – பனை அபிவிருத்தி சபை

வடமாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வருடம் புதிதாக 100,000 பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் இதுவரை 11 மில்லியன் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார் .

90 நாட்களில் இலங்கையை விட்டு வெளியேறிய 6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் – அபாயமான நிலையில் இலங்கை !

கடந்த மூன்று வருடங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  உட்பட 6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஊழியர்களின் சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்த அவர் 2021 ஆம் ஆண்டில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளி நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 136 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த வருடம் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்கச் சென்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தொழில் வல்லுநர்கள் வெளியேறுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும், இதனை தடுக்க அரசு அவசர வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அரசு அறவிட எதிர்பார்த்துள்ள வரி  வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும்.” – கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி

“அறவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி  வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும்.” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக மற்றைய அனைவரும் தண்டனை அனுபவிக்கும் நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.  முறையற்ற அரச நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமற்ற தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்.

சட்டங்களையும், கொள்ளைகளையும்  உருவாக்குபவர்கள், அதனை நடைமுறை படுத்துபவர்கள் போன்றவர்கள் தெரிந்து கொண்டே செய்த தவறுகளே இதற்கு மூல காரணமாகும். சீனி, வெள்ளை பூண்டு மோசடி, மத்திய வங்கி முறி மோசடி போன்ற பல ஊழல் மோசடிகளை பட்டியல் இட்டு காட்டலாம்.

இந்த மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதியின் அளவை எடுத்து பார்க்கும் போது அரசாங்கம் அறிவிடப்பட  எதிர்பார்த்துள்ள வரி  வருமானத்தை விட அதிகமாகும்.  எனவே இழந்த வருமானங்களை மீளப் பெற்றுக் கொள்வதை விடுத்து ஏன் அதிக வரியை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது? இழக்கப்பட்ட வருமானங்களை பெற்றுக்கொள்வதற்கு ஏன் இன்னும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை? என்பதே பலருடைய கேள்வியாகும் மேலும் இந்த வரி சாதாரண மக்களையும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

குறிப்பாக  அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல வைத்தியர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் பொருளியலாளர்கள், விரிவுரையாளர்கள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் இடம்பெயர்வதால் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் தோன்றும். வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருக்கமாட்டார்கள். இருக்கும் ஊழியர்களை கொண்டு அந்த துறை இயக்க வேண்டி ஏற்படும்.ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு காரணமாக சுகாதார துறை கடுமையாக பாதித்திருக்கிறது.

இவ்வாறு வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போது சுகாதார துறை முற்றாக முடங்கும்.டிதனியார் வைத்தியசாலைகளும் தமது இலாபத்தில் அதிக வரியை செலுத்த வேண்டி ஏற்படும் போது வைத்திய கட்டணங்களை உயர்த்தும், மருந்து பொருட்களுக்கான கட்டணம், மேலதிக சிகிச்சை கட்டணங்களை உயர்த்தும்.

எனவே இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். ஏனையதுறையினரும் தமது கட்டணங்களை அதிகரிக்கும் போது நிச்சயம் சாதாரண மக்களை பாதிக்கும். தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் வரி ஏதோ ஒரு வகையில் அனைத்து தரப்பினர் மீது தாக்கம் செலுத்தும் என்பதே உண்மையாகும்.

எனவே அறவிடப்படும் வரி  ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே அமைய வேண்டும். அது நியாயமானதாகவும், சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எனினும அறவிட படவிருக்கும் வரியானது வரி ஒன்றுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் மீறுவதாக காணப்படுகிறது.

பணவீக்கம் அதிகரித்து  வட்டி வீதங்கள் உயர்வாகவும் காணப்படும் காலப்பகுதியில் உயர் வரிகளை அறவிடுவது அவர்களுடைய வாழ்வாதாரத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

“ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளை அடியோடு நிராகரிப்போம்.” – இலங்கை மக்களிடம் சுமந்திரன் கோரிக்கை !

“நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை.

சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் வருகின்ற மாசி மாதம் 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை தமிழரசு கட்சி, போராட்டத்தை நடத்தும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.