01

01

மட்டக்களப்பில் 2022ல் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் இன்று தற்கொலை கலாசாரங்கள் மேலோங்கியிருப்பது நமது மாவட்டத்துக்கு நல்லதொரு சகுணமல்ல என்றே தோன்றுகிறது.

ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து, அவனை அழுத்துவதால்தான் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான்.

தற்போது தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணங்களாக குடும்ப பிரச்சினை, காதல் பிரச்சினை, மன அழுத்தம், பரீட்சையில் தோல்வி, கணவன் – மனைவி முரண்பாடு, வறுமை, போதை மற்றும்  பெற்றோரின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சிறு சிறு காரணங்களுக்கு கூட மனமுடைந்து போய்விடுவதற்கான காரணங்களை கண்டறிய இயலாமல் தடுமாறுகிறோம்.

தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லோருக்கும் உடனே வருவதில்லை. பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பும்போது அரவணைக்க, தோள் கொடுக்கவென யாரும் இல்லாமல், தனிமையில் வாடும் சந்தர்ப்பத்தில் இம்மாதிரியான முடிவை நோக்கி பலர் செல்கின்றனர்.

உங்களிடம் யாராவது ‘வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு’ என்று சொன்னால், அதன் பாரதூரம் அறியாமல் அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறிதான்.

மனதில் ஏற்படும் விரக்தி, கோபம், இக்கால பொருளாதார நெருக்கடி காரணமாக  வாழ்க்கையை பற்றிய பயம் என்பவையே அவர்களை இப்படி பேச வைக்கிறது.

சரி, உங்கள் நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ, ஏன், உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம். இப்படி ஒரு முடிவெடுக்கப் போகிறார்கள் என தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவோம். ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முயற்சிப்போம்.

நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிற நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லையென்றால், மாவட்டத்தின் நிலைமை என்னாவது?

அரச, அரச சார்பற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளான நீங்கள், இது தொடர்பாக கலந்தாலோசித்து, தற்கொலை முயற்சியிலிருந்து மக்களை பாதுகாக்க வழிகோலுங்கள் என்றார்.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி.”- ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்திகதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன.

அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய புதின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தார்.

நூற்றுக்கு 2000 மடங்காக ஷாக் அடிக்கவுள்ள மின்சார கட்டணம் !

நுகர்வோருக்கு 0 முதல் 30 அலகுகள் வரை மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை  தெரிவித்தார்.​

மேலும் கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,​

​“நாளை அமைச்சரவைக்கு செல்லும் மின்சாரத் திருத்தத்தின் சில அளவீடுகளை நேற்று ஆய்வு செய்தேன். இதில், 0-30, 31-61, 61-90 மற்றும் 91-120 அலகுகளுக்கு இடையில் நுகர்வோரின் மின் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம் இல்லை என நினைக்கிறேன்.இதில் 0-30 அலகுகளுக்கு இடையிலான மின்சாரக் கட்டணத்தை 2003 மடங்காக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. இலங்கையில் சுமார் 50 லட்சம் பேர் 90க்கும் குறைவான அலகுகளை பயன்படுத்துபவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர்களின் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், இந்த சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். 0-30க்கு இடையில் நூற்றுக்கு 2000 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 31-60க்கு இடைப்பட்ட 120 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரிடமிருந்தும் அடுத்த ஆண்டு சுமார் 80 பில்லியன் கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற பிரேரணையாக இருப்பதால், தற்போதைய நிலையில் இலங்கை மின்சார சபை கடந்த 4 மாதங்கள் மற்றும் இந்த மாதம் உட்பட செயல்பாட்டு இலாபத்தை ஈட்டுகிறது.” எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார்.

அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை – புதுவருடத்தையொட்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் !

புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இறையாண்மையுடனான தீர்வே பாதிக்கப்பட்டோருக்கு தேவை என தெரிவித்து, மாதிரி வாக்களிப்பையும் மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் தீர்வை எவ்வாறு காண்பது?

தெற்கு சூடான், எரித்திரியா, கொசோவா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த ஐ.நா.வின் கண்காணிப்பு வாக்கெடுப்பு ஒன்றே சிறந்த வழி.

நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம், ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க விரும்புவதை இப்போது நாம் காண்கிறோம்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக மீண்டும் வருவதற்கு இரகசியமாக செயற்பட்டு வருகின்றார். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், மேற்கு தேச அரசியல் கட்டமைப்பை மேசைக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு எங்களிடம் 3 சாத்தியமான அரசியல் தீர்வுகள் உள்ளன. தமிழர் இறையாண்மை, மேற்கத்திய பாணி ஜனநாயகம், ரணில் – சம்பந்தன் ஒப்பந்தத்தில் இருந்து தீர்வு… இதைத்தான் எங்கள் பதாகையில் எழுதியுள்ளோம்.

முழு உலகமும், குறிப்பாக, இலங்கை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பெரும்பங்கை ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பினை நடத்துவதில் பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.

புலம்பெயர் தமிழ் மக்கள், எமது தமிழ் இறையாண்மை மிக்க தேசத்தில் முதலீடு செய்து, அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றமையால், அரசியல் தீர்வு விடயத்தில் எமது நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை என்றனர்.

நாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். (செய்தி – வீரகேசரி)

 

2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது – அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றும் தமது பங்காளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதாள உலகத் தலைவரான ‘கஞ்சிப்பானை இம்ரான்” தமிழகத்துக்கு தப்பியோட்டம் !

இலங்கையின் பாதாள உலகத் தலைவரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானை இம்ரான்) தமிழகத்திற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி “த ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபானை இம்ரான் இலங்கை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வாரத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொலைகள் மற்றும் திட்டமிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் இம்ரான், 2019 இல் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

அத்ற்கமைய இராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் தமிழக உளவுத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நெல்லியடியில் பெண்ணொருவரை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் – சந்தேகநபர் கொழும்பில் கைது !

பெண்ணொருவரை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒன்பது வருடங்களின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நெல்லியடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் இடம்பெற்றிருந்தது.

சந்தேகநபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி காவல்துறை பிரிவிற்குற்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த சமயம், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் இருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், மற்றுமொருவர் தப்பி சென்றிருந்தார்.

குறித்த நபர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றநிலையில், மீண்டும் இலங்கைக்கு வந்து கொழும்பில் பணிபுரிந்துகொண்டிருந்த வேளையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.