02

02

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய முயற்சி – இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிகள்!

அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் இது தொடர்பில் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற போது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமெரிக்க குடியுரிமைக்கான கோட்டாபயவின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனாலும், தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

” அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பார்க்காது மக்களுக்கு சேவை செய்யுங்கள்.” – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்

அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்து, அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யுக்ரைன் போர் மற்றும் அதிக வட்டி வீதங்கள் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என்று கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

மேலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனா, தனது கொரோனா சுகாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையான பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து 39 ஓவியங்கள் மாயம் !

கடந்தாண்டு ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் முன்னெடுத்த தாக்குதலினால் அங்கிருந்த 39 ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் போதே இது தெரிய வந்துள்ளது.

ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட பின்னர் காணாமல் போன கலாசார மற்றும் வரலாற்று பொருட்களை அடையாளம் காண தொல்பொருள் திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது.

பல குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டன.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சிலரின் செயற்பாடுகளினால் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் உள்ள 209 ஓவியங்களை பாதுகாப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன் ஓவியங்கள் மற்றும் அதன் நிலையை ஆய்வு செய்ய உள்ளனர்.

2023 முடிவதற்குள் நாட்டை மீட்டெடுப்பேன் – ஜனாதிபதி ரணில்

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.​

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நமது பணி நேரம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை. நமது பணிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை.

உங்கள் அனைவரின் ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதுடன் இந்நாட்டை முன்னேக்கி கொண்டு செல்லவும் எதிர்ப்பார்த்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

‘அரகலய’ மக்கள் இயக்கத்தை அழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கருவியாக கொண்டு வந்தோம். – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

‘அரகலய’ மக்கள் இயக்கத்தை அழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கருவியாக கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ ஹோம்’ தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய கும்பலை வழிநடத்தியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிஷாந்த இந்த நேர்காணலின் போது
விக்கிரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான ‘அரகலய’க்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என தெரிவித்தார்.

“ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்” என சனத் நிஷாந்த தெரிவித்தார்.
மேலும் அவர் ரணில் விக்ரமசிங்கவை தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதத்துடன் ஒப்பிட்டார்.

“ஒரு நபர் ஒரு வெடிமருந்து அல்லது துப்பாக்கியை வைத்திருப்பது அதைக் கவனிப்பதற்காக அல்ல, அவசரகாலத்தில் அதைப் பயன்படுத்துவதற்காக. அதைத்தான் ரணில் விக்கிரமசிங்கவை வைத்தி செய்தோம். ‘அரகலய’ வை முடிவுக்கு கொண்டு வர அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்,” என்று அவர் விளக்கினார்.

இலங்கையில் அதிகமான நீர் வருடாந்தம் பாடசாலைகளிலேயே வீணாகிறது – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, நீர் விரயம் ஏற்படும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்ததாக நீர் விரயம் ஏற்படும் இடங்களாக அரச அலுவலகங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் (கட்டணங்கள்) ஏகநாயக்க தெரிவித்துள்ளார் .

பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுவதனால் நீர் விரயம் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீர் வீணாவதால் சபைக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேற்படி இடங்களுக்கு நீர் விநியோகத்திற்காக குறிப்பிட்ட தொகையை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே குடிநீர் குழாய் உடைப்பு, தண்ணீர் கசிவு போன்ற காரணங்களால் கணிசமான அளவு குடிநீர் வீணாகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

புத்தாண்டில் மட்டுமே இடம்பெற்ற விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!

2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​

நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.​

மேலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​

மேலும், மோதல்கள் மற்றும் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

யாழில் – 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவர் – நையப்புடைத்த இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள பலசரக்கு கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு குறித்த சிறுமி தனியாக வந்துள்ளார்.

கடையில் வேறு எவரும் இல்லாத நிலையில், கடையினுள் சிறுமியைத் தள்ளி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த 72 வயதான முதியவர் முயற்சித்துள்ளார்.

அந்த நேரம் அந்த பகுதியால் சென்ற இளைஞன் சிறுமியின் சத்தம் கேட்டு கடைக்குள் வந்து பார்த்த போது வன்புணர்வு முயற்சி தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் முதியவரை இளைஞர்கள் நையப்புடைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறையில் நிவாரணம் வழங்குவதாக கூறி பாடசாலை மாணவியை இரண்டு ஆண்டுக்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தமிழ் பொலிஸ் அதிகாரிகள்!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை 2 ஆண்டுகளாக இரண்டு தமிழ் பொலிசார் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது, அதை காணொலியாக எடுத்து, அதை வைத்து மிரட்டியே இந்த கொடூரத்தை தொடர்ந்துள்ளனர்.

இரண்டு வருடங்களின் முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளனர்.

தற்போது 19 வயதாகியுள்ள அந்த யுவதி, கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் 2 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்குள்ளாகியது தெரிய வந்தது.

சம்பவம் நடைபெற்ற போது சந்தேகநகரான பொலிஸ் உத்தியோகத்தர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும், பின்பு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும், தற்போது முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் கடமையாற்றுவது தெரிய வந்தது.

அந்த சந்தேகநபர், சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது எடுத்த வீடியோவை பாடசாலை மாணவர்களிற்கும் வழங்கியுள்ளார்.

தம்மிடமும் வீடியோ இருப்பதாக தெரிவித்து, மாணவர்கள் சிலரும் அந்த சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கி முயன்றதும் தெரிய வந்துள்ளது.

பருத்தித்துறை பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.