03

03

சுற்றுலா விசாவின் கீழ் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் அனைத்து இலங்கையர்களும் கறுப்பு பட்டியலில் !

சுற்றுலா விசாவின் கீழ் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து இலங்கையர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஓமானில் சிக்கித் தவித்து தற்போது ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SLBFE மேலும் தெரிவித்துள்ளது.

08 பெண்களைக் கொண்ட முதலாவது குழு 2022 டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவித்த SLBFE, 6 பெண்களைக் கொண்ட இரண்டாவது குழு இன்று நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா விசாவின் கீழ் சட்டவிரோதமாக ஓமன் நாட்டுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.

வேலை செய்யும் இடங்களை விட்டு ஓடிய பெண்கள் ஓமானின் தொழிலாளர் அமைச்சால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என SLBFE அறிக்கை தெரிவித்துள்ளது.

அவர்களின் முதலாளிகளிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக SLBFE தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஓமானில் வசிப்பதாகக் கருதப்படும் குழுவைத் திருப்பி அனுப்புவதற்கான டிக்கெட்டுகளின் விலையை அவர்களின் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஏற்க வேண்டும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – மின்சார கட்டண பட்டியல் கிடைக்கவில்லையாம்.!

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன் அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

கேள்வி – ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் மின்கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு நீங்கள் செலுத்தவில்லை. அது ஏன் ?

“நான் இருந்த வீட்டின் மின் கட்டண பட்டியல் வேறு ஒருவரின் பெயரில் இருந்தது. எனது பெயருக்கு பட்டியலை மாற்றித் தருமாறு 3 கடிதங்களை அனுப்புயுள்ளேன். . பில் என் பெயரில்தான் இருந்தால்தான் என்னால் பணம் செலுத்த முடியும். பட்டியல் என் பெயருக்கு மாற்றப்பட்ட மறுநாள் அபராதம் தவிர எல்லாவற்றையும் செலுத்தினேன்.

கேள்வி – இவ்வளவு பெரிய தொகை நிலுவையாக இருந்தும் உங்கள் வீட்டில் மின் இணைப்பை ஏன் வெட்டவில்லை?

“அது அவர்களின் தவறு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

கேள்வி – ஏழை, அப்பாவி மக்களின் இணைப்புகளை மட்டும் மின் சார சபை துண்டிக்கிறதா?

“அது உங்களின் கருத்து ”

கேள்வி – இது உண்மையில் ஒரு நியாயமான கேள்வி. ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் மின்கட்டணம் செலுத்துமளவுக்கு நீங்கள் என்ன உபகரணங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?

 

“என்ன பிரச்சினை என்று தெரியலை.. இது குறித்தும் மின்சார சபைக்கு அறிவித்து விட்டேன் ..இரண்டு மூன்று தடவை வந்து செக் பண்ணிச் சென்றார்கள் . ஆனால் நான். மின்சாரம் பயன்படுத்தினேன், அதற்கு நான் பணம் செலுத்தினேன்.”

ஐ.எஸ் அமைப்பு அங்கத்தவருடன் தொடர்பு – காத்தான்குடியில் ஒருவர் கைது !

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

“நான் ரணில் விக்கிரமசிங்க ஆதரவாளன். விடுதலைப்புலிகளை புதுப்பிக்க முயற்சிக்கவில்லை.” – சென்னை மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் பிறந்து, 2003ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று, தற்போது திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவருக்கு எதிராக கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இந்திய புலனாய்வுப்பிரிவு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்பேரிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை இரத்துச்செய்யவேண்டும் என்றும் குறித்த பொதுமகன் சென்னை நீதிமன்றை கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், தாம் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தம்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் 2020 ஆண்டிலும் தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அந்த வழக்கு தொடர்வதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் எகிறிய போதைப்பொருள் பாவனை !

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 742 பேர் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது.
இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகரிப்பானது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 5 ஆம் திகதி, விவசாய பீட கேட்போர் கூடத்தில், இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை, இந்தியாவில் இருந்து வரும், இயற்கை விவசாயம் தொடர்பான விஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளதாகவும், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு விவசாயிகள் பயன் பெற வேண்டும் எனவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி​ சீவரத்தினம் வசந்தரூபா தெரிவித்துள்ளார்.

நேற்று, கிளிநொச்சியில் உள்ள விவசாய பீடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

குன்றும் குழியுமான பாதையால் பறிபோனது சிறுவன் உயிர் – வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவோம் எனக்கூறி மக்கள் போராட்டம் !

“விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்.” இவ்வாறு அட்டன், வெளிஓயா – 22 ஆம் தோட்டப் பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

 

அட்டன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02.01.2023) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறார்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம். இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம்.” – எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் விக்கி தரப்பு..?

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தமிழ்தேசிய கட்சிகள் இன்னமும் ஒரு உறுதியான முடிவுக்கு வராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும் தமது கட்சி இணைவது தொடர்பில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சிக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கையின் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அணியாக போட்டியிடுமெனவும், ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது கால்பந்து நாயகன் பீலேவின் உடல் !

உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

“சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வங்குரோத்து நிலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச தரப்பினர் அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாடு என்பதொன்று மிகுதியாக இருந்தால் தான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. எதிர்தரப்பினர் மாத்திரம் தேர்தலை கோருகிறார்கள்.

தூர நோக்கமற்ற கொள்கை இல்லாத காரணத்தினால் மின்சாரம்,சுகாதாரம், வலுத்துறை ஆகிய துறைகளில் பல பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், எரிபொருள் உள்ளிட்ட சேவைகளின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.

வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை, வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும்.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள். தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.