04

04

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் !

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட உள்ளன.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு, சமூக நீர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாள் ஒன்றுக்கு 2000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டுள்ளது என்று மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும் போது அதிக உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பு மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 209 மில்லியன் ரூபாவாகும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பின் அமைச்சின் கீழ் செயற்படும் மீள்குடியேற்றப் பிரிவின் இந்தத் திட்டத்தின் சுமார் 60% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் காரணமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் நிறைவு காலதாமதமானது என்றும் அந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. விரைவில் இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்தது.

இரா.சம்பந்தனை பொன்னாடை போர்த்தி சந்தித்த மகிந்த – பதவியில் இருந்த போது தீர்க்க முன்வராத இனப்பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதாகவும் உறுதி !

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதே நேரம் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டங்களிலும் சரி – மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பணியாற்றிய காலகட்டங்களிலும் சரி இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதும் கூட தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை சந்திப்பதற்கு கூட ராஜபக்ச தரப்பு பெரிதாக அக்கறை காட்டியிராத நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்குகின்ற இந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைத்தாலும் அதனை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆகவே சர்வதேச முதலீட்டாளர்களை வரவழைக்க இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை நேற்றைய தினம் (3) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்களில் ஈடுபட தனக்கு ஆணை வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி செயற்படுவதற்கு தான் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில், தமது கட்சியின் மரபுக்கு அமைய, செயற்குழுவின் தலைவராக மாத்திரமே தான் தலைமை தாங்க தயார் எனவும் அவர், கட்சியின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.

அத்தோடு, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்குமானால், 40 வீதமான புதுமுக வேட்பாளர்களை களமிறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் – தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் நாளை ஒன்று கூடுகிறார்களாம் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து, எதிர்வரும், 10ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில், அதிபருக்கும் தமிழத் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், அதற்கு முன்னாயத்தமாக, நாளைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சி !

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதி நடைபெறவுள்ள ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பங்கேற்புடன் இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி மூலம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும், உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு வழங்குநர்களையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதுடன் அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள், தொழிலாளர்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரி பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு இப்பகுதி மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தேர்தலுக்காக ஒதுக்கப்படும் 10பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லுக்காக கொடுக்க முன்வாருங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவீர

நடப்பு பெரும் போகத்தில் 800,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 500,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், அரசினால் பராமரிக்கப்படும் களஞ்சியசாலைகளில் அதிகளவான நெல் விளைச்சலில் இருந்து கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முறையான முறையில் நெல் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி, நிதியமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய பிரிவுகளின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தல் மூலம் உந்தப்பட்டு விவசாயிகளின் தேவைகளை புறக்கணித்து வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும், வேட்பாளர்கள் தேர்தலுக்காக 30-40 பில்லியன் ரூபா செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாவை நியாயமான விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியும்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என நிதியமைச்சின் அதிகாரியொருர் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேர்தலை நடத்துவதை விட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல் என்பது அரசாங்கத்தை கவிழ்க்கும் தேர்தல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளினால் தேர்தல் கோரப்படுகின்றதேயன்றி, மக்களால் அல்ல. வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் கஞ்சாவினால் பல் துலக்குகிறேன் – அமைச்சர் டயானா கமகே ” – திருகோணமலையில் 5 கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது !

தற்போது கஞ்சாவினால் செய்யப்பட்ட பற்பசையை பல் துலக்க பயன்படுத்துவதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கஞ்சா பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஔஷதம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கஞ்சாவை பானமாக பயன்படுத்த தாம் ஒருபோதும் முன்மொழியவில்லை எனவும், அதனை ஏற்றுமதி பயிராக வளர்த்து இலங்கைக்கு டொலர்களை கொண்டு வருமாறும் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தான் போதைப்பொருளுக்கு எதிரானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் இரகசியமாக ஐந்து கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த முகம்மத் ரபீக் நிஸாம் (34வயது) என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தானும் விஷம் அருந்தி பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்த தாய் பலி !

மூன்று லட்சம் ரூபா கடன் பெற்ற தாய் ஒருவர் அதனை மீள செலுத்த முடியாத நிலையில் கடந்த 30.01.2022 அன்று தானும் விஷம் அருந்தி தன்னுடைய பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்திருந்த நிலையில், மூவரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தானும் நஞ்சருந்தி வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொலுவாகொட பகுதியைச் சேர்ந்த நிலுகா சஞ்சீவனி என்ற முப்பத்தொரு வயதுடைய பெண்ணே இவ்வாறு பரிதாப மரணத்தை தழுவியுள்ளார்.

இந்த தாயால் விஷம் கொடுக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை கேஷான் முன்னதாக உயிரிழந்துள்ளதுடன் எட்டு வயது மகள் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.