11

11

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது !

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் 28 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞனிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் மதவாச்சி பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

உலகில் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் நான்காவது இடத்தில் இலங்கை!

உலகில் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் ஏழாவது இடத்தில் இருந்த இலங்கை 3 இடங்கள் முன்னேறி, நான்காவது பணவீக்க நாடாக மாறியுள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கேவின் வெளியிட்ட தரவின்படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 66 சதவீதமாக உள்ளது.

ஆனால் இலங்கையின் உண்மையான பணவீக்கம் 101 சதவீதமாக இருப்பதாகபேராசிரியரான ஸ்டீவ் ஹான்கேவின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய கபட்டியலின்படி சிம்பாப்வே முதலிடத்திலும் இரண்டாவது இடம் வெனிசுவேலாவும் மூன்றாவது இடத்தில் கியூபாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலங்குவானூர்தி சின்னத்தில் இணைந்த மைத்திரி தரப்பும் – ராஜபக்சக்களின் முன்னாள் விசுவாசிகளும் !

சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சுதந்திர மக்கள் கூட்டணி எனும் புதிய கூட்டணியினை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர்.

புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மாலை கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

 

ராஜபக்ஷ தரப்பிலிருந்து விலகிய உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, ஜி. எல். பீரிஸ் உள்ளிட்டவர்களுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியில் இணைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு உலங்குவானூர்தி சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டணி எனும் புதிய கூட்டணி போட்டியிடவுள்ளது.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல் அனைத்து அரசியல் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் கூட்டமைப்பு, உத்தர லங்கா சபை, மற்றும் நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக இயங்கும் உறுப்பினர்களுடன் இணைந்து இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அத்துடன், இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிகள் அமைக்கப்படவுள்ளதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்த பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் பொதுச் சின்னத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானித்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் செயலணி பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை !

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை பெற்றுத் தர சிபாரிசு செய்வதற்காக 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில்  முற்பணமாக 2 கோடி ரூபாவை இலஞ்சமாக  பெற்ற விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபாலவின்  அலுவலக பிரதானியாக செயற்பட்ட ஐ.கே. மஹநாம மற்றும் மரக் கூட்டுத்தாபனத்தின்  முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்தது.

குறித்த இருவரினதும்  மேன் முறையீட்டு மனுக்களை கடந்த 2021  மார்ச் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  உயர் நீதிமன்றம் இன்று  அது குறித்த தீர்ப்பை அறிவித்து, விஷேட நிரந்தர மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

நீதியரசர்  விஜித் மலல்கொட தலைமையிலான ,  எல்.ரி.பி. தெஹிதெனிய,  ப்ரீத்தி பத்மன் சுரசேன, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதற்கான  தீர்ப்பை நேற்று அறிவித்தது.

இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் கடந்த 2018 மே 3 ஆம் திகதி மேற்படி இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான விஷேட நிரந்தர மேல் நீதிமன்றில்  சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து கடந்த 2019 செப்டம்பர் 5 ஆம் திகதி முதல்  விசாரணைகள் இடம்பெற்றன.  இருவருக்கும் எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி (தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால்) ஜனக பண்டார மன்றில் ஆஜரானதுடன் முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகினார்.   2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின்  முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன ஆஜராகி வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2019 டிசம்பர் 19 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மா அதிபர் முன்வைத்த 24 குற்றச்சாட்டுக்களில், முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள்  ஜனாதிபதி மைத்திரியின்   செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார். அத்துடன் 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின்  முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க 11 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார்.

இதனையடுத்தே தண்டனை விபரத்தை அறிவித்திருந்த,  விஷேட நிரந்தர மேல் நீதிமன்றம் முன்னாள்  ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன்   65 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது. அத்துடன் அவர் பெற்ற 2 கோடி ரூபா இலஞ்சத்தையும் மீள செலுத்தவும் அவருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டது.  அத்துடன்  மரக் கூட்டுத்தாபணத்தின்  முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்கவுக்கு  12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதிகள் 55 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும்  தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட முறைமை முற்றிலும் தவறானது எனவும், அதனால் அத்தண்டனையை ரத்து செய்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறும் மேன் முறையீட்டில் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம்  விஷேட மேல் நீதிமன்ற தீர்ப்பை சரியானது என ஏகமனதாக அறிவித்து மேன் முறையீட்டை நிராகரித்து தீர்ப்பளித்தது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பானிய வர்த்தகர்கள் குழு அவதானம் !

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மந்த போசாணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு !

பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மந்த போசாணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் சித்ரா மாலினி டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மந்த போசாணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.அதனை நிவர்த்திப்பதற்காக திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பித்து கர்ப்பிணி பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலக உணவு திட்டம் போன்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் போசாக்கு உணவு பொதிகளை வழங்குவதுடன் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் விசேட நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை திரிபோஷா உற்பத்தி ஒரளவு வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தின் ஊடாக சோளம், சோயா போன்றவற்றின் மூலப்பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை சிறுவர்களின் இரும்பு சத்து குறைபாட்டை குறைப்பதற்காக உணவில் சேர்க்க வேண்டிய போசாக்கு தூள் பக்கெட்டுக்கள் வழங்கப்படுகிறது. மேலும் 6 மாதம் முதல் 3 வயது பிள்ளைகளுக்கு பகல் உணவுடன் இதனை வழங்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.” – எஸ்.சிறிதரன்

“உள்ளூராட்சி தேர்தலுக்காகவே தனித்து நிற்கிறோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை நாம் இன்று செலுத்தியுள்ளோம். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணம் இன்று கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எனக்கு தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், நாடாளுமன்ற குழுவிற்கும் இரா.சம்பந்தனே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் நாடாளுமன்றத்திலும், சர்வதேச சமூகத்திலும் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே இது ஒரு உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள். இந்த தேர்தலின் வடிவம், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தெரிவு செய்யவுள்ளனர்.

அதற்கான கள பரீட்சையாக பார்க்கலாம். இதில் சாதக பாதக நிலை ஏற்படலாம். இன்று வெளியான செய்திகளினடிப்படையில், எமது தலைவர் ஓர் இரு நாட்களில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்த உள்ளதாக அறிய முடிகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஏன் தனித்தனியாக போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது தொடர்பில் அவர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

ஆகவே பொறுப்பு வாய்ந்த கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், அவருடைய அறிக்கை வரும்வரை பொறுமையோடும், நிதானத்தோடும் இந்த விடயங்களை கையாள்வதே பொருத்தம் என நான் கருதுகிறேன்.

இதனால் எந்த பாதகமும் தமிழ் மக்களுக்கு வராது. கடந்த காலங்களில் நாங்கள் ஓர் இலக்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அக்காலகட்டத்தில் இலங்கை அரசோடும், இந்திய இராணுவத்தோடும் சிலர் சென்றிருந்தனர்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இங்கு நாங்கள் பிழை பிடிப்பது நோக்கமல்ல. அல்லது யார்மீதும் குற்றம் சுமத்துவதும் நோக்கமல்ல. தனிநாட்டு கனவோடு பயணித்த நாங்கள் யுத்தம் முடிவுற்ற பின்பும் அதே கனவோடு ஒரே அணியாக பயணித்தோம். ஆனால் ஒற்றுமையாக செல்ல முடியாத மனதை நெருடுகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தம் தன் கட்சிகளை வளர்க்கின்ற செயற்பாடுகள் நெருக்கடிகளை தந்தது. அவற்றை சீர்செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த தேர்தல் புதிய ஒழுங்கு முறையை உருவாக்கும். இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என்று நம்புகிறேன்.

இப்பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. அது உடைந்துபோய் இருப்பதாக கருதி அதனை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காக செல்ல முடியும்.

செய்திகளின் பிரகாரம், ஏனைய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவே அறிய முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஒன்றாகவே உள்ளது.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே சென்றிருக்கிறார்கள். அவ்வாறான வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றோம்.

இது ஒரு உள்ளுராட்சி மன்ற தேர்தல். அதில் போட்டியிடுவதற்காகவே தனித்து நிற்கின்றார்கள். இந்த பெறுபேறுகள் வந்த பின்னர், எல்லோருக்கும் நல்ல பாடம் கிடைக்கும். அந்த பாடத்தை சரியாக கற்றுக்கொண்டு, அதனடிப்படையில் பயணத்தை தொடரலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்றார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் பொருளாதார நெருக்கடியால் 6465 குடும்பங்கள் பாதிப்பு !

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்களும் 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பொருளா தார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 6465 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. அத்துடன் 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 213 கர்ப்பிணித் தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உரம் விற்றே அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கினோம் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரங்களை விற்பனைசெய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே அரச பணியாளர்களுக்கான டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த பருவ காலங்களில் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த டிசம்பரில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அரச பணியாளர்களுக்கு, உரிய சம்பள கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் பயன்படுத்தியதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.