18

18

பாராளுமன்றத்துக்கு செல்ல கூட தகுதியில்லாத ரணில் விக்கிரமசிங்க எப்படி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும்..? – குணதாச அமரசேகர கேள்வி !

“மக்கள் ஆணையில்லாது பாராளுமன்றத்துக்கு செல்ல கூட தகுதியில்லாத ரணில் விக்கிரமசிங்க எப்படி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும்.” என  தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

18 ஆம் திகதி பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதற்காக வடக்கு மக்களுக்கு வாக்குறுதியை வழங்கி இருக்கிறார். மேலும் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் கூறி வருகிறார். இதனை கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அவருக்கு மக்களாணை வேண்டும். அது அவரிடம் காணப்படுகின்றதா?

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தது 13 ஐ நிறைவேற்றவோ அல்லது நாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்ல. அதிகாரத்தை விட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலப்பகுதியில் எஞ்சியிருக்கும்  காலப்பகுதியை முன்னெடுத்து செல்லவும், நாட்டு மக்களை வழிநடத்தவும் மற்றும் நாட்டை பாதுகாக்கவும் என்பதை ரணில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மக்களாணை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு முறையாக நாட்டை ஆள முடியாமல் தப்பியோடிய கோட்டாபயவிற்கு பதிலாக வெற்றிடமாக காணப்பட்ட  ஜனாதிபதி பதவியை நிரப்புவதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் 13 ஐ அமுல்படுத்த எந்தவொரு அதிகாரமும் தற்பொழுது ரணிலுக்கு கிடையாது. மேலும்  கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறைவேற்ற முடியாமல் விட்டுச்சென்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதே அவருடைய தற்பொழுதுள்ள பொறுப்பாகும்.

ஜனாதிபதி ரணில் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்ட மற்றும் தேர்தலின் போது நிராகரிக்கப்பட்டதோடு பாராளுமன்றத்தில் கூட அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர். இவ்வாறான ஒருவருக்கு அரசியமைப்பை மாற்றுவதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் 13 ஐ நடைமுறைப்படுத்துவதானால் யாருக்கு இலாபம்? அதன் பயனை யார் பெற்றுக்கொள்ள போவது? இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்கவே 13 ஐ நடைமுறைப்படுத்த ரணில் ஆர்வம் காட்டுகிறார்.அவர்கள் இலங்கை மீது முழுமையாக அதிகாரத்தை பயன்படுத்தி 13 ஐ நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மேலும் அமெரிக்காவிற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. அன்று 13 ஐ நடைமுறைப்படுத்த ஜே.ஆர். ஜயவர்தன கைச்சாத்திட்ட போது  அமெரிக்கா உயர்தானிகரே முதலில் வாழ்த்து செய்தி அனுப்பினார். எம்மை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் அமெரிக்காவே இதன் பின்னணியில் இருக்கிறது.

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கபோவதில்லை என்றார்.

தோட்டத்து மாணவர்களை கல்விக்கு சேர்க்காத கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 2500 மாணவர்கள் வரை கல்வி பயில்கின்ற போதிலும், தமது தோட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தையடுத்து பாடசாலையில் முத்தரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது. நுவரெலியா வலய கல்வி அதிகாரிகள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அதிபர், முகாமைத்துவ குழு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

எதிர்வரும் 31ம் திகதி, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவியை வெட்டி கொலைசெய்த சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மாணவியின் காதலன் எனக் கூறும் இளைஞனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மாலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கருவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஒருவரை அணுகி, அவரது மன நிலை குறித்து அறிக்கை பெறுமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 “சுறா மீன்களாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களை விட்டுவிட்டு நெத்திலி மீன்களை கைது செய்து சிறையை நிரப்புகிறார்கள்.” – அமைச்சர் அலிசப்ரி

“அடிப்படைவாத கொள்கைகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தி, சமூகமயப்படுத்த வேண்டும்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் தொடர்பில் எமக்கு பாரிய பிரச்சினை இருக்கின்றது.

இளைஞர்களுக்கு குற்றங்களுடன் தொடர்பு இருந்தால், சாட்சியங்கள் இருக்குமாயின் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அடிப்படைவாத ரீதியில் ஒரு கொள்கையை கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் தினமும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து வழக்குகளை தொடுத்து கொண்டு இருக்க முடியுமா?.அதற்கு சட்டத்திலும் இடமில்லை.

அடிப்படைவாத கொள்கைகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தி, சமூகமயப்படுத்த வேண்டும். எவ்வளவு காலத்திற்கு வழக்குகளை நடத்துவது. இலங்கையில் வழக்கு ஒன்று விசாரித்து முடிய எவ்வளவு காலம் செல்லும் என்பது நாம் அறிவோம்.

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுக்கு அடிமையான அதிகளவானோர் இருக்கின்றனர்.

அவர்களை பிரித்து அடையாளம் காண வேண்டும். இவர்களுக்கு மேலே சர்வதேச ரீதியில் தொடர்புகள் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருக்கின்றனர்.

அவர்களுக்கு கீழே நாடு முழுவதும் விநியோகிக்கும் வலையமைப்பை சேர்ந்த சுமார் 500 பேர் இருக்கின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை விரட்டி செல்வதில் பயனில்லை.

அவர்களை சிறையில் அடைத்து பயனில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும்.

நெத்திலி மீன்களை துரத்தி சென்று பிடித்து சிறையில் அடைத்து சிறைச்சாலைகளை நாம் நிரப்பி வருகின்றோம். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படுகின்றன.

சுறா மீன்களாக போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களில் வழக்குகளை விசாரிக்க நேரமில்லை. அவர்கள் தப்பிச் சென்று விடுகின்றனர்.“ எனத் தெரிவித்துள்ளார்.

புதுசு போய் பழசு வந்தது டும் டும் – மீண்டும் இமானுவேல் ஆனோல்ட் !

யாழ் மாநகர சபையில் நாளை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில்  இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனோல்டை முதல்வர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையின் பிரச்சினைகளை IMF கடனால் கூட தீர்க்க முடியாது – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.
அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம். எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி. மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதி மூலம் 411 பில்லியன் ரூபா வருமானம் !

கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதி மூலம் 411 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது.

250 மில்லியன் கிலோ தேயிலை இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்த தொகை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வருவாயில் 12 சதவீதம் வீழ்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களுக்கு உண்ண உணவில்லை. ஆனால் மக்கள் அடித்து விரட்டிய கோட்டாவுக்கு மாதாந்தம் 9.5 லட்சம் ரூபா வழங்குகிறது அரசாங்கம்.” – ஹிருணிகா

“மக்களால் அடித்து விரட்டப்பட்ட கோட்டாபாயவுக்கு எதற்கு மாதாந்தம் 9.5 இலட்சம் ரூபாய் பணமும் – 20 வாகனங்களும்..? என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

 

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி செயலகத்தினால் மாதாந்தம் 9.5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அவருக்கு 15 முதல் 20 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு, இவ்வாறான செலவுகளை ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி எழுகிறது.

தற்போதைய ஜனாதிபதிதான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்காக பல சலுகைகளை வழங்கியுள்ளார். இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டு மக்களுக்கு போதுமான உணவு இல்லாத இந்த நேரத்தில், மின்சாரக் கட்டணம் 400 வீததத்தால் உயர்வடைந்துள்ள இந்த நேரத்தில், மத்திய தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இவ்வாறான அநாவசிய செலவுகளை அரசாங்கம் செய்து வருகிறது.

நாட்டை இந்த இந்த அழிவு நிலைமைக்குக் கொண்டுவந்த ஜனாதிபதியின் மாதாந்த செலவிற்காக 9.5 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அரசாங்கம் இவ்வாறு செலவுகளை செய்யும் வேளையில், மறுபுறத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு என்பன பாரியளவு குறைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் தான் இவையெல்லாம். நாடு மிகவும் மோசமான நிலைமையில் உள்ளதாக பிரசாரம் செய்து மக்களுக்கு மேலும் மேலும் சுமைகளை சுமத்துவதே அவரின் திட்டமாகும்.

இதனால்தான் மக்கள் தேர்தலை கோருகிறார்கள். இந்த ஜனநாயக உரிமையைக்கூட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்க முடியாவிட்டால், ஏனைய கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்?

அரசாங்கம் இதேபோன்று தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால், மக்கள் நிச்சயமாக வீதிக்கு இறங்குவார்கள்.

இறுதியில், கோட்டாவுக்கு நேர்ந்த கதியல்ல ரணில் ராஜபக்ஷவுக்கு நேரிடும் என்பதையும் இங்கே கூறிக்கொள்கிறேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.

இல்லாத கூட்டமைப்புக்கு இரா.சம்பந்தன் எப்படி தலைவராயிருக்க முடியும்..? – தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கேள்வி !

“தமிழ் தேசியத்தை சிதைக்க கூட்டமைப்பிற்குள் நுழைந்த விசமிகள் சம்பந்தனை கொண்டே அதனை நிறைவேற்றினர்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின்  கொழும்பு கிளை தலைவர் K.V.தவிராசா தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்;

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இரா. சம்பந்தன் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை எனவும் K.V.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எந்த முகத்துடன் சென்று ரணிலுடன் பேச்சு நடத்த முடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

தலாய் லாமாவை இலங்கைக்கு அழைத்தமை தொடர்பில் சீனா விசனம் !

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் மல்வத்து மகாநாயக்க தேரர் திம்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த இலங்கையின் பதில் சீன தூதுவர் Hu Wei இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் வரவேற்பதை கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

14ஆவது தலாய் லாமா துறவி மட்டுமல்ல எனவும் மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும் சீன விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவராக காணப்படுவதாகவும் பதில் சீன தூதர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இலங்கை தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது திபெத்தின் சுதந்திரத்தை மேம்படுத்துவதோடு, சீனா – இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை பாதிக்கச் செய்யும் எனவும் பதில் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த மகா சங்கத்தினர், திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.