23

23

குர் ஆனை தீ வைத்து எரித்த ஸ்வீடன் அரசியல்வாதியை தீ வைத்து எரிப்பேன் – துருக்கி எழுத்தாளர் கொலை மிரட்டல் !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மாதக்கணக்கில் போர் நீடித்து வருகிறது. இந்த போரையடுத்து ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ இராணுவ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளன. அமெரிக்காவை தலைமையாக கொண்ட நேட்டோ ராணுவ அமைப்பில் துருக்கி உறுப்பு நாடாக உள்ளது.

 

உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய துருக்கி  முட்டுக்கட்டையாக உள்ளது. “நாங்கள் பயங்கரவாத இயக்கமாக கருத்தும் குர்திஷ்தான் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு ஸ்வீடன் ஆதரவு கொடுப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள குர்திஷ் அமைப்பு ஆதரவாளர்கள் சிலரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்வீடனிடம் துருக்கி வலியுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதை துருக்கி தடுத்து வருகிறது. இதனால், துருக்கி – ஸ்வீடன் இடையே தூதரக ரீதியில் உரசல் நீடித்து வருகிறது.

இதனிடையே, நேட்டோவில் தங்கள் நாடு இணைய விடாமல் தடுக்கும் துருக்கிக்கு எதிராக ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்வீடனின் ஸ்டேம் குர்ஸ் கட்சி தலைவர் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் துருக்கிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லாமில் உள்ள துருக்கி தூதரகம் முன் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது துருக்கி மற்றும் அந்நாட்டின் அதிபர் எர்டோகனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, ஸ்வீடனில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க துருக்கி அதிபர் எர்டோகன் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் அவர் கோஷங்களை எழுப்பினார். அப்போது, இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்த ஸ்வீடன் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனை கைது செய்ய வேண்டும் என்று துருக்கி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வீடனுக்கு துருக்கி தெரிவித்துள்ளது. மேலும், நேட்டோ அமைப்பு இணைப்பு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் துருக்கி வரவிருந்த நிலையில் அந்த பயணத்தை துருக்கி ரத்து செய்துள்ளது.

Turkish author issues death threats on Twitter, the micro-blogging platform  takes no actionஇந்நிலையில், இஸ்லாமிய மத புனித புத்தகமான குர் ஆனை எரித்த ஸ்வீடன் அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனுக்கு துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் இசொல் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஸ்வீடனில் முறைதவறி பிறந்தவர் இன்று குர் ஆனை தீ வைத்து எரித்துள்ளார். இஸ்லாமியர்களாக நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? குர் ஆனை எரித்த அந்த போக்கிரியை நான் பிடித்தேன் என்றால் நான் அவரை உயிருடன் தீ வைத்து எரித்துவிடுவேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியாவின் உதவியே புலிப்பயங்கரவாதத்தை நாம் தோற்கடிக்க உதவியது.”- இலங்கை வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி

“இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்.”  என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்துள்ளது

இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை, நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம். எங்கள் மத கலாச்சார பொருளாதார சமூக பாதுகாப்பு  கரிசனைகள் பொதுவானவை.

கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களும் உள்ளன. குடும்பங்களில் கூட அது சாத்தியம்,ஆனால் நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது,இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம். அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.

ஆனால் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டும்,உங்கள் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி உங்களிற்கு விருப்பமில்லாத நாடாகயிருக்கலாம்.ஆனால் நீங்கள் அவ்வாறே செயற்படவேண்டியுள்ளது உலகம் அவ்வாறே மாறிவருகின்றது.

ஆனால் இதன் அர்த்தம் நாங்கள் இந்தியாவின் நலன்களை அலட்சியப்படுத்துகின்றோம் அதற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றோம் என்பதல்ல,நாங்கள் இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாள்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது. ஆனால் முற்றிலும் ஒரு நாட்டையே நம்பியிருப்பது நியாயமற்றது. இலங்கைக்கு ஏனைய நாடுகள் நியாயபூர்வமாக வந்து உதவி செய்வது முதலீடு செய்வது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜெய்சங்கரே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கரிசனைகள் உள்ளன. ஆனால் நாங்கள் இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளிற்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்த அனுமதிக்கமாட்டோம். எவரும் அதனை செய்யமுயலவில்லை நாங்கள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறைவடைய ஆரம்பித்துள்ள பணவீக்கம் !

இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65 சதவீதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், நவம்பரில் 69.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாட்டின் தேசிய வைத்தியாசாலைகளில் மருந்துகள் இல்லை. மக்களின் கண்ணீரே உள்ளது.”- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை !

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ,அரசாங்கத்தின் தன்னிச்சையான வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்பாக மகஜர்  ஒன்றில் கையொப்பம்  திரட்டினர்.  இதன்போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாம் வைத்தியசாலைகளில் உள்ள வாட்களுக்கு சென்றாலும் அல்லது வெளிநோயாளர் பிரிவுகளுக்கு சென்றாலும் மட்டுமின்றி வைத்தியசாலைகளில் எங்கு சென்றாலும் எமக்கு நோயளர்களின் கண்ணீரையே காணக்கூடியதாக இருக்கிறது. வைத்தியர்களாக எமக்கு செய்ய முடிந்தது எமது கண்ணீரையும்அவர்களுடன் பகிர்ந்து  கொள்வது மாத்திரமே.

தேசிய வைத்தியசாலையில் வாட்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. குறைந்தது நீரிழிவுக்கான இன்சுலின் மருந்துகளைக்  கூட பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை காணப்படுகின்றது.

நாங்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையை பற்றியோ  அல்லது கிளிநொச்சி வைத்தியசாலை பற்றியோ பேச வில்லை. தேசிய வைத்தியசாலையின் நிலைப்பற்றி யே பேசுகின்றோம்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பாக 10 யோசனைகளை முன்வைத்தோம். 6 மாதங்கள் கடந்தும்  இது தொடர்பில் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலை தொடர்ச்சியாக நிலவுமாக காணப்பட்டால் மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக – கமத்தொழில் அமைச்சு

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான யுத்தத்தால், அந்நாடு உரம் ஏற்றுமதி இடைநிறுத்தியிருந்தது. அதனால் எமக்கு அதனை இறக்குமதி செய்ய முடியவில்லை.

தற்போது 36,000 மெட்ரிக் டொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லங்கா உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உர விநியோகம் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் பெரும்போகத்திற்கு 125,000 மெட்ரிக் டொன்; யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டது. அதில் 75 வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது 5 வீத MOP உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்முறை 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான அனைத்து உரங்களையும் விநியோகிக்க விவசாய அமைச்சு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடம் அவதானமாக இருங்கள் – பெப்ரல் எச்சரிக்கை !

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கப்பெறும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரம் மற்றும் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரச அதிகாரிகள், குறிப்பாக உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதியாவதற்கு தகுதியானவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் !

துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (23) மதிய உணவு வேளையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் புதிய உயர் வரிக் கொள்கைக்கு எதிராக இன்று கொழும்புத் துறைமுகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருமளவு மக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

இலங்கையில் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் !

இலங்கையின் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக இலங்கையின் பல்லுயிர்ச் செயலகம்  தெரிவித்துள்ளது.

இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாக இருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டின் சிவப்பு தரவுப் புத்தகத்தில் நாடு தழுவிய ஆய்வின் போது இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பல்லுயிர் பெருக்க செயலகத்தின் இயக்குனர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ரெட் டேட்டா புக் என்பது அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சைகள் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சில உள்ளூர் கிளையினங்களைப் பதிவு செய்யும் பொது ஆவணமாகும். அப்புத்தகத்திலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி !

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷய ஆசவ” என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றார்.

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை தடைசெய்வது மாணவர்களது கல்வி உரிமையை மீறுவதாகும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

உயர்தர பரீட்சைகள் நடைபெறும் ஜனவரி 23, 2023 முதல் பெப்ரவரி 17, 2023 வரை மின்வெட்டுகளை எந்த நேரத்திலும் திட்டமிடுவதைத் தவிர்க்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

இதன் மூலம் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது கல்வி உரிமையை தடையின்றி பயன்படுத்த முடியும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் நிலவும் மின்வெட்டு அட்டவணை குறித்த அண்மைக்காலச் செய்திகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது.