24

24

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை நிறுத்தாவிட்டால் 5 பில்லியன் நட்டம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு மேலதிகமாக 5 பில்லியன் ரூபா செலவாகும் என எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தத் தொகையைச் செலுத்துவதற்கு சபைக்கு நிதி பலம் இல்லை எனவும் தெரிவித்தார்.

பணத்தைச் செலுத்தாமல் எரிபொருளை கடனாகப் பெற்றால் அது மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் யுகத்துக்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வகையில் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வரிசைகள் உருவாக்கப்படுவதை தடுக்கும் வகையில் திருத்தத்தை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம்; உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 23 ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தது.

ஆனால் இரு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் சினிமாப் பாணியில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – நால்வர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டா ரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டா ரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

காதல் திருமணம் செய்த மகளை நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொண்ற தந்தை !

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வைத்தியருடன் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

 

இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர நீதிமன்றமன்றில் தான் சுதந்திரமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க வந்தார். அங்கு அவரது தந்தையும் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற  அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். துப்பாக்கியால் சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 

இது தொடர்பாக போலிஸார் ;   கூறும்போது, கவுரவ கொலையின் பின்னணியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் உள்ளனர் என்றார்.

கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா – சீனா பச்சைக்கொடி !

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் மற்ற இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.

ஏற்கனவே ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள அதேவேளை, பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் இந்த வாரம் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.

அவர்களிடம் இருந்து போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடனுதவி திட்டத்தை பரிசீலிக்கும்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சீனாவும் கடன் மறுசீரமைப்புக்காக இணக்கமான சைகையை காட்டியுள்ள மை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபைக்கான தேர்தலிலே இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும் – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் அதில் வெற்றி பெறுவோம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியில் விசேட கூட்டம் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சக்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுதந்திரன் பேசும் போது;

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சம்பந்தமாக முல்லைதீவு மாவட்ட கிளையினுடைய சிலருடனும் இந்த தொகுதியினுடைய சிலருடனும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களோடும் கட்சியினுடைய பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களும் துணை பொதுச் செயலாளர் ஆகிய நானும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தோம்.

இதிலே நாங்கள் இறுதியாக எடுத்த முடிவு முல்லைத்தீவு தெரிவித்தாட்சி அலுவலர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய வேட்பு மனுவை நிராகரிப்பதாக எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு ஒன்றை எழுத்தாணை கோரி தாக்கல் செய்யப்படும் அதிலே நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலிலே இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும் என தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தமிழ்தரப்பு அமுல்படுத்த முனைவதால் முஸ்லீம் தரப்பு உசாராக வேண்டும்.” – அமைச்சர் நஸீர் அஹமட்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கேறிப்பிடப்பட்டுள்ளதன் படி

“இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு.

தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா? அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?

எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது, அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது.

முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில், சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான். ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதாகக் கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து இந்தியாவுக்குத் தெளிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளது தான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால், அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர்.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம் !

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 15.5 வீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஆசியாவின் ராணியை வாங்க சர்வதேசம் தயாரில்லை – மீண்டும் இலங்கைக்கே வந்தாள் !

இரத்தினபுரி – கஹவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கற்கள் என அறியப்படும் 510 கிலோ கிராம் எடையுள்ள அர்னூல் கற்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள இரத்தினக்கல் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதன் அங்கீகாரத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே கிடைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த இரத்தினக்கல்லை எடுத்துச்சென்ற குழுவினரால் அதனை விற்க முடியாமல் போனமையினால் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

310 கிலோ எடையுள்ள சிறப்பு நீலக்கல் பலாங்கொடை சுரங்கத்தில் 2021 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஆசியாவின் ராணி என்று தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் பெயரிடப்பட்டது.

இதன் பின்னர் இந்த இரத்தினம் டுபாய்க்கு கண்காட்சிக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் சுவிட்சர்லாந்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும் இந்த இரத்தினக்கல் முன்பு சொன்ன அளவுக்கு மதிப்பில்லாததால் சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலையில் 19 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

கொக்கட்டி சோலை போலீஸ் பிரிவு உட்பட்ட மாவடி முன்மாதிரி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (22) இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பத்தரைக் குளம் மாவடி முன்மாதிரி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நடராஜா சதுஸன் என்பவரே இவ்வாறே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்

சம்பவ தினத்திற்கு முதல் நாள் தனது வீட்டாருடன் உரையாடிக் கொண்டிருந்த பின்னர் தனது படுக்கை அறைக்கு சென்றவர் அதிகாலை எவ்விதமான சத்தங்களும் இன்றி அவரின் அறை பூட்டப்பட்டு இருந்ததாகவும் பின்னர் வீட்டார் வீட்டின் ஜன்னலை உடைத்து உட்சென்ற போது தனக்குத் தானே தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் தூக்கில் இருந்து மீட்டெடுத்து பார்த்தபோது உயிரிழந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் மற்றும் மரணவிசாரணை அதிகாரியின் ஆரம்ப கட்டம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்;ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனை பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.